Mahindra XUV700 | பாராட்டுகளைப் பெறும் மஹிந்திரா XUV700.. இதன் ப்ளஸ், மைனஸ் என்ன?
2021ஆம் ஆண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கார் மாடலாக இருந்தது மஹிந்திரா XUV700. மஹிந்திரா XUV700 மாடல் இவ்வளவு பாராட்டு பெறுவது ஏற்புடையதா? இந்த மாடலின் ப்ளஸ், மைனஸ் என்னென்ன?

2021ஆம் ஆண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கார் மாடலாக இருந்தது மஹிந்திரா XUV700. இந்த மாடலின் பல்வேறு புகைப்படங்கள் வெளியாகிய நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்த மாடல் வெளியிடப்பட்டு பலராலும் இதன் அம்சங்களுக்காகப் பாராட்டப்பட்டது.
இதுவரை ஒரு லட்சம் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், பலரும் இந்த மாடல் காரைத் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்ல காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மஹிந்திரா நிறுவனத்தின் டாப் SUV ரக மாடல்களுள் XUV700 மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. மஹிந்திரா நிறுவனத்தின் SUV ரக மாடல்களுக்குப் பல ரசிகர்கள் உண்டு. 2020ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய `தார்’ மாடல், XUV300, பொலெரோ, பொலெரோ நியோ, XUV500 முதலான பல்வேறு SUV ரக கார் மாடல்களை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டிருந்தாலும், அவை அனைத்தையும் விட அதிக முக்கியத்துவம் கொண்டதாக மாறியுள்ளது XUV700.
மஹிந்திரா XUV700 மாடல் இவ்வளவு பாராட்டு பெறுவது ஏற்புடையதா? இந்த மாடலின் ப்ளஸ், மைனஸ் என்னென்ன?

மஹிந்திரா XUV700 - ப்ளஸ்:
ஸ்டைலான டிசைன்:
மஹிந்திரா மாடல்களின் டிசைன் கடந்த காலங்களில் வெளியான மாடல்களில் டிசைனுக்குப் பெரிதாக முக்கியத்துவம் வழங்கப்படாத நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய `தார்’, புதிதாக அப்டேட் செய்யப்பட்ட பொலெரோ நியோ, XUV700 ஆகிய மாடல்கள் மஹிந்திரா நிறுவன வெளியீடுகளில் ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றங்களை நமக்கு உணர்த்துகின்றன.
XUV700 மாடலில் `C' வடிவிலான DRL விளக்குகள், LED ஹெட்லைட்கள், LED டெயில் லைட்கள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இதன் சக்கர அளவும், நீளமும் XUV500 மாடலுக்கு சற்றே அதிகமானவை. சாலையில் பயணிக்கும் போது, XUV500 மட்டுமின்றி, பிற SUV ரக மாடல்களை விட பெரிதாக இருக்கிறது இந்த மாடல்.
அதிக கேபின் ஸ்பேஸ்:
முந்தைய மாடல்களை விட கேபின் அளவுக்கு அதிக இடத்தையும், சிறப்பம்சங்களையும் சேர்த்துள்ளது மஹிந்திரா நிறுவனம். இதில் 10.2 இன்ச் ஸ்க்ரீன், AndrenoX system with Amazon Alexa, 12-speaker audio system with Sony 3D sound, panoramic sunroof முதலான பல்வேறு சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றோரு லெதரில் சீட் உருவாக்கப்பட்டு இதில் சேர்க்கப்பட்டுள்ளது. ஜன்னல்களின் அளவு, சீட்டின் உயரம் முதலானவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எஞ்சின் அளவு:
XUV700 மாடலின் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் ஆகிய ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. XUV500 மாடல் டீசல் எஞ்சினை மட்டுமே வெளியிட்டிருந்த நிலையில், இந்தப் புதிய தயாரிப்பின் மூலம், புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக திட்டமிட்டுள்ளது மஹிந்திரா நிறுவனம். இதில் 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக், மேனுவல் ஆகிய இரு வகை ட்ரான்மிஷன்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அம்சங்கள்:
சர்வதேச NCAP க்ராஷ் பரிசோதனைகளில் 5 நட்சத்திரப் பாதுகாப்பு அம்சம் கொண்டிருப்பதாக மஹிந்திரா நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு ஏற்கனவே பாராட்டுகள் உண்டு. மேலும், XUV700 மாடல் புதிதாக Advanced Driver Assistance Systems என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கார் பயணத்தின் போது பாதுகாப்பு அம்சங்களுக்காக ரேடார், சென்சார் ஆகியவை இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 7 ஏர்பேக், ABS, ESP முதலான பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா XUV700 - மைனஸ்:
தாமதாகும் காத்திருக்கும் படலம்:
XUV700 மாடலை வாங்குவதற்காகப் பலரும் போட்டியிடுவதால், முன்பதிவு செய்துவிட்டு அதனை வாங்குவதற்கான காத்திருக்கும் நேரம் சற்றே அதிகமாக இருக்கிறது. இதே SUV ரக மாடல்களில் வேறு நல்ல மாடல்களும் இருப்பதால், உடனடியாக கார் வாங்க விரும்புவோருக்கு இது சிக்கலாக அமைகிறது.
சிறிய மூன்றாவது அடுக்கு சீட் ஸ்பேஸ்:
7 சீட்களைக் கொண்டிருக்கும் XUV700 மாடலில் நடுவில் உள்ள சீட்களில் அதிக ஸ்பேஸ் கொடுக்கப்பட்டிருந்தாலும், மூன்றாவதாக பின்பக்கத்தில் உள்ள சீட்களில் பெரியவர்கள் அமர்வதற்கு சற்றே கடினமான வகையில் இருக்கிறது.
அதிக விலை:
XUV700 மாடலுக்குக் கொடுக்கப்படும் விலைக்கேற்ற சிறப்பம்சங்கள் கிடைத்தாலும், அதன் பெட்ரோல் மாடலின் தொடக்க விலை 12.95 லட்சம் ரூபாயில் தொடங்குகிறது; சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மாடலின் விலை 18 லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைப்பதால், இதனோடு ஒப்பிடுகையில் பிற SUV மாடல்களின் விலை சற்றே குறைவு.





















