Mahindra XUV700: கம்மி விலையில் கொடுத்தும் வாங்க ஆள் இல்லை - XUV700 மாடலை கைவிடும் மஹிந்திரா - காரணம் என்ன?
Mahindra XUV700 Discontinued: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிரபலமான மிட்-சைஸ் எஸ்யுவி ஆன, மஹிந்திராவின் XUV700 எடிஷனின் 5 சீட்டர் எடிஷனின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

Mahindra XUV700 Discontinued: மந்தமான விற்பனை காரணமாக மஹிந்திராவின் XUV700 எடிஷனின் 5 சீட்டர் எடிஷனின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
XUV700 5 சீட்டர் எடிஷன் நிறுத்தம்:
மஹிந்திரா நிறுவனத்தின் பிரபல எஸ்யுவியான XUV700 மாடலின் 5 சீட்டர் எடிஷனின் உற்பத்தியை, அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது. விற்பனையில் போதிய வரவேற்பை பெறாத காரணத்தால், பயன்களின் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டு இந்த முடிவை மஹிந்திரா எடுத்ததாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாவிட்டாலும், அதன் இணைய தள பக்கத்திலிருந்து 5 சீட்டர் எடிஷனின் விவரங்கள் நீக்கப்பட்டுள்ளன.
XUV700 எஸ்யுவின் லைன் - அப்பில் பயனாளர்களுக்கு அதிக ஆப்ஷன்களை வழங்கும் நோக்கில், 5 சீட்டர் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், பயனர்கள் அதிக தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த 7 சீட்டர் எடிஷனையே அதிகம் விரும்புகின்றனர். இந்த மாடலின் பிரதான அம்சமே அதிகப்படியான இடவசதியும், அதிகப்படியான தொழில்நுட்ப அம்சங்களும் தான்.இந்த இரண்டுமே 6 மற்றும் 7 இருக்கைகள் ஆப்ஷன்களில் கிடைப்பதால், AX7 மற்றும் AX7L வேரியண்ட்களையே பயனர்கள் அதிக அளவில் தேர்வு செய்கின்றனர்.
சறுக்கியது எங்கே?
5-சீட்டர் எடிஷன் அதிக பூட் ஸ்பேஸ் மற்றும் அத்தியாவசிய அம்சங்களை வழங்கினாலும், அது AX5 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. 18-இன்ச் அலாய் வீல்கள், ADAS சூட், டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு (TPMS), லெதரெட் அப்ஹோல்ஸ்டரி, பக்கவாட்டு ஏர்பேக்குகள், மெமரி ஃபங்சனுடன் கூடிய பவர்ட் டிரைவர் சீட் மற்றும் ஆட்டோ-ஃபோல்டிங் ORVMகள் போன்ற பல அம்சங்கள் 5 சீட்டர் எடிஷனில் இல்லை. இதுபோக இரட்டை மண்டல காலநிலை கட்டுப்பாடு, டிஜிட்டல் வீடியோ பதிவு (DVR), சோனி 3D சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், 360-டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், காற்றோட்டமான இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் AX7L வகைக்கு பிரத்யேகமான ஆல்-வீல்-டிரைவ் டீசல் தானியங்கி அமைப்பு ஆகிய தொழில்நுட்ப அம்சங்கள் இல்லாததும் முக்கிய குறைபாடாகும்.
லாப நோக்கில் முடிவு:
லாபகரமாகவும், விற்பனையில் அசத்தும் மாடல்களில் மட்டுமே கவனம் செலுத்தும் நோக்கில், XUV700 மாடலின் 5 சீட்டர் எடிஷன் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு மாடலில் அதிகப்படியான வேரியண்ட்களை வழங்குவதை நிறுத்துவதன் மூலம், உற்பத்தி திறனை மேம்படுத்துவதை அண்மைகாலமாக மஹிந்திரா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்திய மாரஸ்ஸோ கார் மாடலை, கடந்த ஆண்டு ஜுலை மாதம் மஹிந்திரா நிறுவனம் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
விற்பனையில் அசத்தும் XUV700:
மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் XUV700 கார் மாடலின் மற்ற எடிஷன்கள் தொடர்ந்து விற்பனையில் அசத்தி வருகின்றன. வலுவான கட்டமைப்பு, அபாரமான செயல்திறன், உயர்தர பாதுகாப்பு அம்சங்கள் இதற்கு காரணம். 2.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின், வேரியண்ட்கள் அடிப்படையில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது. ரூ.14.49 லட்சம் தொடங்கி ரூ.25.14 லட்சம் வரையிலான விலையுடன், மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த எஸ்யுவி ஆக தொடர்கிறது.





















