Mahindra: XUV700, ஸ்கார்ப்பியோ-N மாடலை சேர்ந்த 19,000 கார்களை திரும்பப்பெறும் மஹிந்திரா நிறுவனம்
தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் நோக்கில், XUV700, ஸ்கார்ப்பியோ-N மாடலை சேர்ந்த 19,000 கார்களை திரும்பப்பெறுவதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மொத்தமாக 19,184 கார்கள் திரும்பப்பெறப்பட உள்ளன. அதில், XUV700 மாடலை சேர்ந்த 12,566 கார்களும், ஸ்கார்ப்பியோ-N மாடலைச் சேர்ந்த 6,618 கார்களும் அடங்கும். இந்த புதிய அறிவிப்பின் மூலம், இந்திய சந்தையில் அதிகம் ரிகால் செய்யப்பட்ட கார் மாடலில் ஒன்றாக மஹிந்திரா XUV700 மாறி உள்ளது.
XUV700 கார் மாடல்:
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகி வரும் ஃபிளாக்ஷிப் மாடலான XUV700 மீண்டும் ரிகால் செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா XUV700 பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனத்தில் சஸ்பென்ஷன் சத்தம் கேட்பதாக புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சினையை சரி செய்யவே தற்போது ரிகால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, மஹிந்திரா நிறுவனம் தனது டீலர்களுக்கு தொழில்நுட்ப சர்வீஸ் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.
கார்களில் ஏற்படும் பிரச்சினைகளை அடிக்கடி கண்டறிந்து ரிகால் மூலம் சரி செய்வது நல்ல முயற்சி தான் என்ற போதிலும், ஃபிளாக்ஷிப் மாடலில் இத்தனை குறைகள் இருப்பதை கண்டறிய, போதிய சோதனைகளை மஹிந்திரா நிறுவனம் செய்யவில்லையோ என்ற சந்தேகம் வாடிக்கையாளர்கள் இடையே எழுந்துள்ளது.
இதில் முன்புறம் லோயர் கண்ட்ரோல் ஆர்ம் மற்றும் ரியர் கண்ட்ரோல் புஷ் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இவற்றை வாடிக்கையாளர்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி மாற்றிக் கொடுக்க வேண்டும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. இம்முறை ரிகால் செய்யப்படும் மஹிந்திரா XUV700 யூனிட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஸ்கார்ப்பியோ-N கார்:
இதேபோன்று, மஹிந்திரா நிறுவனத்தின் மற்றொரு கார் மாடலான ஸ்கார்ப்பியோ-N மாடலைச் சேர்ந்த 6,618 கார்களும் சஸ்பென்ஸ் பிரச்னையை சரிசெய்யும் வகையில் திரும்பப்பெறப்படுகிறது.அசெம்ப்ளிங் செய்யும்போது பெல் ஹவுசிங்கிற்குள் உள்ள ரப்பர் பெல்லோவின் ‘இயக்க பரிமாணம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதை சரிசெய்யவே ஸ்கார்ப்பியோ - N கார் மாடல்கள் திரும்பப்பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து கார்களும், கடந்த ஜூலை 1 முதல் நவம்பர் 11 வரையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டவை ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கார் சந்தையில் மஹிந்திரா ஸ்கார்பியோ-N அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து மிகவும் பிரபலமாக காணப்படுகிறது. இந்த வகை கார்கள் திரும்பப்பெறப்படுவது இதுவே முதல்முறையாகும்.
விற்பனையில் அசத்தும் XUV700 , ஸ்கார்ப்பியோ- N:
மஹிந்திராவின் சமீபத்திய தரவுகளின்படி, Scorpio-N மற்றும் Scorpio Classic ஆகியவை இணைந்து 1.3 லட்சம் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 17,000 முன்பதிவுகள் கடந்த அக்டோபர் மாதத்தில் நடைபெற்றுள்ளது. XUV700 கார் மாடல்கள் தற்சமயம் 80,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைக் கொண்டுள்ளது.