E Vehicles: டீசல், பெட்ரோலில் இயங்கும் சொகுசு கார்களுக்கும் வருகிறது தடை.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
ICE வாகனங்களிலிருந்து மின்சார வாகனங்களுக்கு மாறுவதை விரைவுபடுத்த முக்கிய பெருநகரங்களில் முன்னோடி திட்டங்களை வகுக்க வேண்டும் என நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வருகிறது. அந்த வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மின்சார வாகனங்களின் தேவை என்பது அதிகரித்து வருகிறது. பலரும் பெட்ரோல், டீசல் வாகனங்களை தவிர்த்து விட்டு மின்சார கார், பைக் போன்ற வாகனங்களுக்கு மாறி வருகிறார்கள். இப்படியான நிலையில் மின்சார வாகனங்களின் (EV) பரவலான பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, உயர் ரக பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு படிப்படியாக தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த பொது நல வழக்கின் விசாரணைக்கு வந்தது. அதில் மின்சார வாகனங்களை வாங்குவதையும் பயன்படுத்துவதையும் ஊக்குவிக்கும் நோக்கில் தற்போதுள்ள அரசின் கொள்கைகளை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இதில் நவம்பர் 13, 2025 அன்று நடந்த விசாரணையின்போது விஐபிகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொகுசு வாகனங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். சொகுசு மாடல் மின்சார கார்கள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன என்றும், டீசல் மற்றும் பெட்ரோல் கொண்ட சொகுசு மாடல்களுக்கு படிப்படியாக தடை விதிப்பது ஒரு சிறிய அளவிலான பொருளாதார வசதி கொண்ட குழுவை மட்டுமே பாதிக்கும் எனவும் கூறினர்.
மேலும் இது மற்ற வகையில் வரும் பொது மக்களை பாதிக்காது. ICE வாகனங்களிலிருந்து மின்சார வாகனங்களுக்கு மாறுவதை விரைவுபடுத்த முக்கிய பெருநகரங்களில் முன்னோடி திட்டங்களை வகுக்க வேண்டும் என நீதிபதிகள் பரிந்துரைத்தனர். மின்சார வாகன பயன்பாடு அதிகரிக்கும் போது, சார்ஜிங் நிலையங்களுக்கான தேவை அதிகரிக்கும் என்றும், எரிபொருள் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து மையங்கள் சார்ஜர்களை நிறுவ ஊக்குவிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது மின்சார வாகன ஊக்குவிப்பு மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான பணிகளில் 13 அமைச்சகங்கள் ஈடுபட்டுள்ளதாக அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி நீதிமன்றத்தில் தெரிவித்தார். தேசிய மின்சார இயக்கத் திட்டம் போன்ற கட்டமைப்புகள் உட்பட, அனைத்து கொள்கை அறிவிப்புகள் மற்றும் இதுவரை செய்யப்பட்ட முன்னேற்றங்களை பட்டியலிடும் ஒருங்கிணைந்த நிலை அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்றும் அவர் கூறினார்.
இதுதொடர்பான வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘தற்போது அமலில் உள்ள மின்சார வாகனக் கொள்கைகளில் சில ஐந்து ஆண்டுகளுக்கும் மேலானவையாக உள்ளது. அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா என்று கேள்வியெழுப்பினர். மேலும் தற்போதுள்ள கொள்கை கட்டமைப்பு குறித்த மத்திய அரசின் அறிக்கையை அடுத்த விசாரணையின்போது விரிவாக ஆராய்வோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஒருவேளை இந்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், இந்தியாவின் மின்சார இயக்கத்தை நோக்கிய மாற்றத்தில் முதல் இலக்காக சொகுசு பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை உருவாக்கம் நிறுத்தப்படும் என சொல்லப்படுகிறது.





















