LML Scooter: இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்.. ஆட்டோ எக்ஸ்போவில் எல்எம்எல் நிறுவனம் அதிரடி
ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்ச்சியில் எல்எம்எல் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
ஆட்டோ எக்ஸ்போ 2023
பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது புதிய வாகனங்கள் மற்றும் எதிர்கால திட்டங்களை, அறிவிக்கும் வகையில் கிரேட்டர் நொய்டா பகுதியில், ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 18ம் தேதி வரையில் நடைபெறும் இந்த பிரமாண்ட ஆட்டோ எக்ஸ்போவில், முன்னணி நிறுவனங்கள் பங்கேற்காவிட்டாலும், மாருதி சுசுகி, ஹுண்டாய், டாடா மோட்டார்ஸ், கியா, எம்ஜி மற்றும் டொயோட்டா உடன், ஒரே ஒரு சொகுசு கார் நிறுவனமாக லெக்சஸ் நிறுவனம் பங்கேற்று உள்ளன. அதோடு, இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களில் பெனெல்லி, கீவே, ஜோன்டெஸ், மோட்டோ மோரினி, மேட்டர், டார்க் மற்றும் அல்ட்ரா வயலட் ஆகியவை பங்கேற்றுள்ளன. நிகழ்ச்சியில் பல நிறுவனங்களும் தொடர்ந்து தங்களது புதிய கார் மற்றும் மோட்டர் சைக்கிள்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
புதிய ஸ்கூட்டர் அறிமுகம்:
அந்த வரிசையில், லொஹியா மெஷினரி லிமிடெட் எனப்படும் எல்எம்எல் நிறுவனம் தனது ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. அதிநவீன டிசைன் கொண்டுள்ள இந்த ஸ்கூட்டர், கடந்த ஆண்டின் போது கான்செப்ட் வடிவில் காட்சி படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்பதிவு:
ஏற்கனவே, சில மாதங்களுக்கு முன்பாகவே எல்எம்எல் நிறுவனம் தனது ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை தொடங்கி விட்டது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் தங்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். அதேநேரம், இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணம் எதையும் எல்எம்எல் இதுவரை வசூலிக்கவில்லை.
சிறப்பம்சங்கள்:
எல்எம்எல் ஸ்டார் மாடலில் எல்.ஈ.டி ப்ரோஜெக்டர் முகப்பு விளக்குகள், டிஆர்எல்கள், கிடைமட்டமாக பொருத்தப்பட்ட இண்டிகேட்டர்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் டிஸ்க் பிரேக்குகள், டெலிஸ்கோபிக் ஃபேர்க் முன்புற சஸ்பென்ஷன், பின்புறம் மோனோ ஷாக் யூனிட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவைதவிர எதிர்கால டிசைன், முன்புறம் ஃபுளோடிங் இன்சர்டில் முகப்பு விளக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்கூட்டரை முதல் முறையாக பொது மக்களுக்கு காட்சிப்படுத்தியதோடு எல்எம்எல் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அம்சங்களை அறிவித்தது. அந்த வகையில், இந்த ஸ்கூட்டரில் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க் அசிஸ்ட், ஏபிஎஸ் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சீட், இண்டராக்டிவ் ஸ்கிரீன், போடோசென்சிடிவ் முகப்பு விளக்கு உள்ளது. அதேநேரம், இதன் பேட்டரி மற்றும் அதன் திறன் தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை. விரைவில் இந்த வாகனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.