Hyundai Exter Safety Features: இந்தியாவிலேயே முதல் கார்.. பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார்கள்?.. ஹுண்டாய் களமிறக்கும் எக்ஸ்டர்..!
இந்தியாவிலேயே பாதுகாப்பான எஸ்யுவி கார் என்ற பெருமையை ஹுண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்டர் எஸ்யுவி மாடல் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலலேயே பாதுகாப்பான எஸ்யுவி கார் என்ற பெருமையை ஹுண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்டர் எஸ்யுவி மாடல் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹுண்டாய் கார்:
ஹுண்டாய் காரில் உள்ள சிறப்பம்சங்கள், வடிவமைப்புகள் ஆகியவை பயனாளர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதில் பயன்படுத்தப்படும் தரமான பொருட்கள் காரணமாகவும் பயனாளர்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால், கட்டமைப்பு பாதுகாப்பு என்ற ஒரு விஷயத்தில் மட்டும் இந்த கார் மீதான பயனாளர்களின் கருத்து என்பது மோசமானதாகவே உள்ளது. பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டாலும், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நடத்தப்படும் கிராஷ் டெஸ்ட் புள்ளிகள் மட்டும் அந்நிறுவனத்திற்கு ஏமாற்றமே தந்து வருகிறது. இந்நிலையில் தான் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்டர் எஸ்யுவி மாடல் மூலம், தங்களது மோசமான பயணம் நிறைவடைய உள்ளதாக ஹுண்டாய் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது தங்களுடைய நிறுவனத்தின் பாதுகாப்பான வாகனமாக இருக்கும் எனவும் கூறியுள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்:
ரூ.5.99 லட்சம் என்ற தொடக்க விலையை கொண்ட எக்ஸ்டர் எஸ்யுவி காரில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, 6 ஏர் பேக்குகள், சீட் பெல்ட் நினைவூட்டிகள், வாகன நிலைத்தன்மை மேலாண்மை, பின்புற டிஃபோகர், தானியங்கி முகப்பு விளக்குகள், EBD மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோலுடன் கூடிய ABS போன்ற பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
பாதுகாப்பான எஸ்யுவி?
பாதுகாப்பிற்கான புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம் எனப்படும் NCAP சோதனையில் 5 ஸ்டார் வாங்கிய, டாடா பஞ்ச் மாடலுக்கு புதிய எக்ஸ்டர் கார் மாடல், இந்திய சந்தையில் நேரடி போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, டாடா பஞ்ச் உடன் நேரடியாக மோதும் விதமாக, சர்வதேச புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தில், எக்ஸ்டர் காரும் 5 ஸ்டார்களை பெறும் என ஹுண்டாய் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. விரைவில் இந்த பரிசோதானைக்கு எக்ஸ்டர் கார் உட்படுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை அந்த சோதனையில் 5 ஸ்டார்களை பெற்றால், இந்தியாவில் பாதுகாப்பிற்காக 5 ஸ்டார்களை பெற்ற முதல் எஸ்யுவி என்ற பெருமையை ஹுண்டாயின் எக்ஸ்டர் எஸ்யுவிக்கு கிடைக்கும். அதன் மூலம், நாட்டின் பாதுகாப்பான எஸ்யுவி என்ற அந்தஸ்தையும் பெறும்.
காரின் வடிவமப்பும்:
எக்ஸ்டர் மாடலானது ஹுண்டாயின் மிகச்சிறிய எஸ்யுவி என்பதுடன், அதன் எஸ்யுவி பட்டியலில் கடைசி இடத்திலும் உள்ளது. பெட்ரோல், சிஎன்ஜி ஆகியவற்றில் இயங்கும் வகையில் கிடைக்கின்றன. எக்ஸ்டர் எஸ்யுவி கார்கள் 6 தனி வண்ணங்களிலும், 3 இரட்டை வண்ணச் சேர்க்கையிலும் கிடைக்கின்றன.
சிறப்பம்சங்கள்:
`H ' வடிவ பகலில் ஒளிரும் விளக்குகள், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், 15 அங்குலம் அளவுள்ள அலாய் வீல்கள், ஸ்போர்டியான ரூப் ரெயில்கள், ஷார்க் ஆன்டெனா, ஓட்டுநரின் இருக்கையை மாற்றி அமைக்கும் வசதி, 391 லிட்டர் பூட் இடவசதி, குரல் உத்தரவின் மூலம் திறந்து மூடும் வசதி கொண்ட சன் ரூஃப், டேஷ்போர்டு கேமரா, 5.84 செ.மீ. அளவு கொண்ட டிஸ்பிளே, ஸ்மார்ட் வயர்லெஸ் சார்ஜர், க்ரூஸ் கன்ட்ரோல், கால் வைக்கும் பகுதியில் விளக்கு, பின்பக்க இருக்கைகளுக்கும் ஏசி வசதி, முற்றிலும் தானியங்கி முறையில் குளிர்பதன வசதி, ஸ்மார்ட் கீ, புஷ்பட்டன் ஸ்டார்ட், பின்பக்க கண்ணாடியில் வைப்பர் & வாஷர், குளிர்சாதன பெட்டி, 10.67 செ.மீ. இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டம், 12 மொழிகளை புரிந்து செயல்படும் வசதி, டயரில் காற்று அழுத்தத்தை தெரிவிக்கும் வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.