Hybrid Cars: 1,256 கிமீ மைலேஜ், மிரட்டும் ஹைப்ரிட் கார்கள் - சொகுசும் இருக்கு, செலவும் மிச்சம் - டாப் 5 மாடல்கள்
Hybrid Cars Mileage: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிக மைலேஜ் தரக்கூடிய ஹைப்ரிட் கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Hybrid Cars Mileage: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிக மைலேஜ் தரக்கூடிய, டாப் 5 ஹைப்ரிட் கார் மாடல்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
ஹைப்ரிட் கார் மாடல்கள்:
பயணத்தை எளிதாக்குவது என்பதை தாண்டி கார் என்பது மிகவும் அத்தியாவசியமான சொத்தகாவும் பல்வேறு தரப்பினரால் பார்க்கப்படுகிறது. எரிபொருள் திறன், பராமரிப்பு செலவு, சுற்றுச்சூழல் பாதிப்பு என பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு கார் வாங்கப்படுகிறது. மேற்குறிப்பிடப்பட்ட அம்சங்களுக்கான சிறந்த தீர்வாக ஹைப்ரிட் கார்கள் திகழ்கின்றன. இவை சிறந்த செயல்திறன் கொண்டிருப்பதோடு, காண்போரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. அந்த வகையில் இந்திய சந்தையில் கிடைக்கும் ஹைப்ரிட் கார் மாடல்களில், அதிக எரிபொருள் திறன் அதாவது மைலேஜ் வழங்கக் கூடிய டாப் 5 கார்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
அதிக மைலேஜ் தரக்கூடிய ஹைப்ரிட் கார் மாடல்கள்:
5. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்
அதிக மைலேஜ் தரக்கூடிய ஹைப்ரிட் கார் மாடல்களின் பட்டியலில் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா ஹைகிராஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இது ஒரு லிட்டருக்கு 16 முதல் 23 கிமீ மைலேஜ் வழங்குவதாக கூறப்பட்டாலும், சராசரியாக லிட்டருக்கு 21 கிமீ மைலேஜ் வழங்குவதாக பயனர்கள் குறிப்பிடுகின்றனர். அதன்படி, ஹைகிராஸில் உள்ள 52 லிட்டர் எரிபொருள் டேங்கை நிரப்பினால், சராசரியாக ஆயிரத்து 92 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடைநிற்றலின்றி பயணிக்கலாம். 11 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் விலை சென்னையில் ரூ.25 லட்சத்தில் தொடங்கி ரூ.41.28 லட்சம் வரை நீள்கிறது.
4. மாருதி சுசூகி இன்விக்டோ
அதிக மைலேஜ் தரக்கூடிய ஹைப்ரிட் கார் மாடல்களின் பட்டியலில் மாருதியின் இன்விக்டோ நான்காவது இடத்தில் உள்ளது. இது ஒரு லிட்டருக்கு 23.24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக நிறுவனம் மற்றும் பயனர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அதன்படி, இதில் உள்ள 52 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை நிரப்பினால், சராசரியாக ஆயிரத்து 208 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடைநிற்றலின்றி பயணிக்கலாம். 3 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் விலை சென்னையில் ரூ.25.51 லட்சத்தில் தொடங்கி ரூ.29.22 லட்சம் வரை நீள்கிறது.
3. ஹோண்டா சிட்டி e:HEV
அதிக மைலேஜ் தரக்கூடிய ஹைப்ரிட் கார் மாடல்களில் மிகவும் கவனத்தை ஈர்கக்கூடிய வகையில் ஹோண்டா நிறுவனத்தின்சிட்டி e:HEV கார் மாடல் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இது லிட்டருக்கு 27 கிலொ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்பட்டாலும், லிட்டருக்கு சராசரியாக 25 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கப்படுவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, இதில் உள்ள 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை நிரப்பினால் ஆயிரம் கிலோ மீட்டருக்கு இடைநிற்றலின்றி பயணிக்க முடியும். இதன் விலை சென்னையில் ரூ.20.75 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடர்
ஹைப்ரிட் பிரிவில் டொயோட்டா ஆதிக்கம் செலுத்துவதற்கான மற்றொரு உதாரணமாக தான் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் அர்பன் க்ரூசர் ஹைரைடர் கார் மாடல் உள்ளது. இது ஒரு லிட்டருக்கு 19 முதல் 28 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்பட்டாலும், 27.93 கிலோ மீட்டர் மைலேஜ் மட்டுமே வழங்குவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, இதில் உள்ள 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை நிரப்பினால், ஆயிரத்து 256 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடைநிற்றலின்றி பயணிக்கலாம். 18 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் விலை சென்னையில் ரூ.13.28 லட்சத்தில் தொடங்கி ரூ.23.47 லட்சம் வரை நீள்கிறது.
1. மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா:
அதிக மைலேஜ் தரக்கூடிய ஹைப்ரிட் கார் மாடல்களின் பட்டியலில் மாருதி சுசூகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா முதலிடத்தில் இடத்தில் உள்ளது. இது ஒரு லிட்டருக்கு 19 முதல் 28 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்பட்டாலும், 27.93 கிலோ மீட்டர் மைலேஜ் மட்டுமே வழங்குவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடரின் மாருதி எடிஷனாக உருவாக்கப்பட்டு இருக்கும் கிராண்ட் விட்டாராவிலும் 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கே உள்ளது. இதனை நிரப்பினால், ஆயிரத்து 256 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடைநிற்றலின்றி பயணிக்கலாம். 32 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் விலை சென்னையில் ரூ.11.42 லட்சத்தில் தொடங்கி ரூ.25.71 லட்சம் வரை நீள்கிறது. டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடருக்கு நிகரான மைலேஜ் மட்டுமே வழங்கினாலும், குறைந்த விலையை கருத்தில் கொண்டு கிராண்ட் விட்டாராவிற்கு இந்த பட்டியலில் முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது.





















