Honda: ஸ்கூட்டர் சந்தையை ஆளும் ஹோண்டா.. ஆக்டிவாவின் ஆதிக்கம், இளசுகளை அள்ளும் டியோ - மொத்த மாடல்கள்
Honda Scooter Portfolio: இந்திய ஸ்கூட்டர் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹோண்டா நிறுவனம் தரப்பில் விற்பனை செய்யப்படும் மாடல்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Honda Scooter Portfolio: ஹோண்டா நிறுவனம் தரப்பில் ஆக்டிவா சீரிஸ், டியோ சீரிஸ் ஆகியவை இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஹோண்டா ஸ்கூட்டர் போர்ட்ஃபோலியோ:
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா, அதிக நடுத்தர பிரிவினை கொண்ட நாடாகம் திகழ்கிறது. இதனால், இருசக்கர வாகனம் என்பது பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படுகிரது. இந்த சூழலில் உள்நாட்டு ச்கூட்டர் பிரிவில் கிட்டத்தட்ட சுமார் 40 சதவிகித பங்களிப்பை கொண்டு, ஸ்கூட்டர் என்றாலே அனைவரது நினைவிற்கும் வரும் வகையில் ஹோண்டா பிரமாண்ட வளர்சியை பதிவு செய்துள்ளது. பெரியவர்கள் முதல் இளம் தலைமுறையினர் வரையிலும், அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையிலான அம்சங்கள் நிறைந்த வாகனங்களை விற்பனை செய்வதே ஹோண்டாவின் இந்த வெற்றிக்கு காரணமாகும்.
ஆக்டிவா, டியோ சீரிஸ்
உல்நாட்டு சந்தையில் ஹோண்டா நிறுவனமானது ஆக்டிவா சீரிச், டியோ சீரிஸ் மற்றும் மின்சார ஸ்கூட்டரையும் விற்பனை செய்கிறது. வலுவான கட்டமைப்பை கொண்டு பைக்கிற்கு நிகரான செயல்திறனை வழங்குவதால், பெரியவர்கள் கூட ஆக்டிவாவை நம்பி வாங்குகின்றனர். அதேநேரம், குறைந்த எடையுடன் அதிக மைலேஜ் தரக்கூடிய டியோ மாடல் இளம் தலைமுறையினரின் பிரதான தேர்வாக உள்ளது. ப்ரீமியம் பிரிவில் தேடுபவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்காகவே X-ADV மற்றும் மின்சார ஸ்கூட்டரான QC1-ஐ ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
ஹோண்டா ஆக்டிவா சீரிஸ் ஸ்கூட்டர்:
கடந்த 1999ம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆக்டிவா ஸ்கூட்டரானது, தற்போது காலத்திற்கேற்ப மேம்படுத்தப்பட்டு ஆறாவது தலைமுறையாக 6ஜி எடிஷனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோக ஆக்டிவா 125 மற்றும் மின்சார எடிஷன் ஆக்டிவாவும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.
ஆக்டிவா 6ஜி:
ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரானது 75 ஆயிரம் ரூபாய் என்ற தொடக்க விலையை கொண்டுள்ளது. 109.51 சிசி ஏர்-கூல்ட் 4 ஸ்ட்ரோக் இன்ஜினை கொண்டு, நிஜ உலக பயன்பாட்டில் லிட்டருக்கு சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். 106 கிலோ எடையுடன், 5.3 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை பெற்றுள்ளது.
ஆக்டிவா 125:
ஆக்டிவா 125 எடிஷனின் DLX வேரியண்டின் தொடக்க விலையானது 89 ஆயிரம் ரூபாயாகும். 123.92சிசி இன்ஜினை கொண்டு லிட்டருக்கு சுமார் 47 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக 110 கிலோ வரையிலான எடையினை கொண்டு, அதிகபட்சமாக மணிக்கு சுமார் 85 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியுமாம்.
மின்சார ஆக்டிவா:
ஆக்டிவா மின்சார எடிஷனின் தொடக்க விலையானது ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 6kW பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், 102 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். தொழில்நுட்ப வசதிகளுடன் ரைடிங் மோட்களும் வழங்கப்பட்டுள்ளன.
ஹோண்டா டியோ சீரிஸ் ஸ்கூட்டர்:
டியோ ஸ்கூட்டரானது இந்திய சந்தையில் 2002ம் ஆண்டு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்போர்ட்டியரான டிசைன், நம்பகமான இன்ஜின் ஆகியவை இளைஞர்களை கவர்ந்தது. இதன் மூலம் இந்திய சந்தையில் தனக்கான வலுவான இடத்தை ஹோண்டா நிறுவனம் தக்கவைத்துக் கொண்டது.
ஹோண்டா டியோ 110:
டியோ 110 ஸ்கூட்டரின் தொடக்க விலையானது 81 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 109.51 சிசி 4 ஸ்டோர்க் இன்ஜின் மூலம், லிட்டருக்கு சுமார் 50 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 83 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியுமாம். 106 கிலோ எடையை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா டியோ 125:
டியோ 110 எடிஷனின் அப்க்ரேடட் வெர்ஷனாக டியோ 125 விற்பனை செய்யப்படுகிறது. இதன் தொடக்க விலையானது 84 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 123.92 சிசி இன்ஜினை கொண்டு லிட்டருக்கு சுமார் 48 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. 104 கிலோ எடையுடன் அதிகபட்சமாக மணிக்கு 95 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என கூறப்படுகிறது.
ஹோண்டா X-ADV
ஸ்கூட்டர் பிரிவிலேயே ப்ரீமியம் மாடல்களை எதிர்பார்ப்பவர்களுக்காக X-ADV மாடலை ஹோண்டா விற்பனை செய்கிறது. இந்தியாவில் இதன் தொடக்க விலை சுமார் 13.31 லட்சமாகும். 745சிசி லிக்விட் கூல்ட் 4 ஸ்ட்ரோக் 8 வால்வ் பாரெல்லல் ட்வின் இன்ஜினை கொண்டு, 6 ஸ்பீட் டூயல் க்ளட்ச் ஆட்டோமோடிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 237 கிலோ எடைகொண்ட இந்த ஸ்கூட்டரானது லிட்டருக்கு சுமார் 28 கிலோ மீட்டர் மைலேஜ் அளிக்கிறது.
ஹோண்டா QC1
ஹோண்டா நிறுவனத்தின் மலிவு விலை மின்சார ஸ்கூட்டராக QC1 விற்பனை செய்யப்படுகிறது. இதன் தொடக்க விலை 90 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1.5 kWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 80 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும்.





















