Harley Davidson: ஹார்லி டேவிட்சன் தந்த இன்ப அதிர்ச்சி - பைக் மாடல்களுக்கு ரூ.5 லட்சம் வரை விழாக்கால சலுகை
Harley Davidson: விழாக்கால சலுகையாக ஹார்லி டேவிட்சன் பைக் மாடல்களுக்கு அந்நிறுவனம் ரூ.5 லட்சம் வரை சலுகை அறிவித்துள்ளது.
Harley Davidson: ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது குறிப்பிட்ட பைக் மாடல்களுக்கு சுமார் ரூ.5 லட்சம் வரை சலுகை அறிவித்துள்ளது.
ஹார்லி டேவிட்சன்:
இந்தியாவில் அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதை கருத்தில் கொண்டு, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அடுத்தடுத்து பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. ஏற்கனவே டாடா மற்றும் ஆடி போன்ற கார் நிறுவனங்கள், தங்களது கார் மாடல்களுக்கு விலை தள்ளுபடி போன்ற பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளன. அந்த வரிசையில், சொகுசு இருசக்கர வாகனங்களுக்கு புகழ்பெற்ற ஹார்லி - டேவிட்சன் நிறுவனமும் தனது குறிப்பிட்ட மாடல்களுக்கு தள்ளுபடி வழங்கியுள்ளது. அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்பட்டுள்ளன.
சலுகை விவரங்கள்:
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு Harley-Davidson நிறுவனத்தின் பான் அமெரிக்கா 1250 ஸ்பெஷல், ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மற்றும் நைட்ஸ்டர் ஆகிய மூன்று மாடல்களில் விலை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடிகள் 2022 மாடல் வரம்பிற்கு மட்டுமே பொருந்தும். அதுவும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சம் வரையிலான தள்ளுபடி:
அதன்படி, ஹார்லி -டேவிட்சன் நிறுவனத்தின் பான் அமெரிக்கா 1250 ஸ்பெஷலின் மாடலுக்கு அதிகபட்சமாக, ரூ. 4,90,000 விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ. 20 லட்சத்து 99 ஆயிரமாக இருந்த அந்த மாடலின் விலை தற்போது 16 லட்சத்து 9 ஆயிரமாக குறைந்துள்ளது. Sportster S' மாடலின் விலை 16 லட்சத்து 51 ஆயிரமாக இருந்த நிலையில், 4 லட்சத்து 45 ஆயிரம் விலை குறைக்கப்பட்டு 12 லட்சத்து 6 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசியாக, நைட்ஸ்டரின் விலை 10 லட்சத்து 69 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் முந்தைய விலையான 14 லட்சத்தில் 99 ஆயிரத்தில் இருந்து 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இவை மிகவும் கணிசமான தள்ளுபடிகள் மற்றும் மூன்றையும் முன்பை விட மிகவும் மலிவாக மாற்றியுள்ளன.
வாகன விவரங்கள்:
Pan America 1250 என்பது அமெரிக்க பிராண்டின் ஒரே அட்வென்சர் பைக் மாடல் ஆகும். இதில் 1,252cc, இரட்டை சிலிண்டர், திரவ-குளிரூட்டப்பட்ட இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது சிக்ஸ் ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 8,750rpm இல் 150.9bhp மற்றும் 6,750rpm இல் 128Nm முறுக்குவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. நைட்ஸ்டர் பைக் மாடலில் உள்ள 975சிசி இரட்டை சிலிண்டர் இன்ஜின் 88.5 பிஎச்பி மற்றும் 95 என்எம் ஆற்றலை உருவாக்குகிறது.
இது சிக்ஸ் ஸ்பீட் கியர்பாக்ஸையும் பெற்றுள்ளது. இதற்கிடையில், ஸ்போர்ட்ஸ்டர் எஸ் அதே 1,252சிசி, ட்வின்-சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜினை பெறுகிறது, ஆனால் இது 120.69 பிஎச்பி மற்றும் 125 என்எம் டார்க்கை வெளிப்படுத்துகிறது. பான் அமெரிக்கா 1250 பைக் மாடல் ஆனது BMW R 1250 GS , Ducati Multistrada போன்ற பெரிய அளவிலான அட்வென்சர் பைக் சந்தையில் முக்கிய போட்டியாளராக உள்ளது.