Electric cars | புதிதாக அறிமுகமாகும் எலெக்ட்ரிக் கார்கள்... எல்லாமே பெஸ்ட்.. இதுதான் லிஸ்ட்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. 25 லட்ச ரூபாய்க்குக் குறைவாக, இந்தியாவில் விற்கப்படும் சிறந்த எலெக்ட்ரிக் கார்கள் என்னென்ன?
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை அதிகரித்துக் கொண்டே இருப்பதாலும், உலகம் முழுவதும் சூழலியல் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருப்பதாலும், எலெக்ட்ரிக் கார்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. 25 லட்ச ரூபாய்க்குக் குறைவாக, இந்தியாவில் விற்கப்படும் சிறந்த எலெக்ட்ரிக் கார்கள் என்னென்ன?
Tata Tigor EV
இந்தியாவிலேயே 15 லட்ச ரூபாய்க்குக் குறைவான விலையில் இரண்டு எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தியுள்ள ஒரே நிறுவனமான டாடா மோட்டர்ஸ் இருக்கிறது. இந்தக் காரின் தொடக்க விலை 11.99 லட்ச ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்று வேரியண்ட்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த மாடல் கார்கள், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் வரை பயணம் செய்யும் அம்சம் கொண்டவை. இந்த வேரியண்ட்களில் முன்னணியில் வைக்கப்பட்டிருக்கும் மாடல் 12.99 லட்சம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 306 கிலோமீட்டர்கள் வரை பயணிக்கும் திறன் கொண்டது.
இந்தக் காரில் 26.4 kWH பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. Permanent Magnet Synchronous Motor பொருத்தப்பட்டிருக்கும் இந்தக் கார் 75PS ஆற்றலையும், 170Nm டார்க் அம்சமும் கொண்டது. இந்தக் காரின் பேட்டரியைச் சுமார் எட்டரை மணி நேரங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்ய முடியும். எனினும், துரித சார்ஜர்களைப் பயன்படுத்தும் போது, 1 மணி நேரத்தில் 80 சதவிகிதம் இந்தக் காரை சார்ஜ் செய்ய முடியும்.
Tata Nexon EV
இந்த வரிசையில் அடுத்ததாக இடம்பெறுகிறது Nexon EV. இது இந்தியாவில் விலைகுறைந்த எலக்ட்ரிக் SUV கார்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தக் காரில் 30.2 kWh பேட்டரி இருப்பதோடு, ஒரு முறை சார்ஜ் செய்தால், இதில் 312 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும். Permanent Magnet Synchronous Motor பொருத்தப்பட்டிருக்கும் இந்தக் கார் 129PS ஆற்றலையும், 245Nm டார்க் அம்சமும் கொண்டது.
இந்தக் காரின் பேட்டரியைச் சுமார் எட்டரை மணி நேரங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்ய முடியும். எனினும், துரித சார்ஜர்களைப் பயன்படுத்தும் போது, 1 மணி நேரத்தில் 80 சதவிகிதம் இந்தக் காரை சார்ஜ் செய்ய முடியும். இந்தக் காரின் விலை அதன் கூடுதல் அம்சங்களின் அடிப்படையில், 13.99 லட்சம் முதல் 16.85 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
MG ZS EV
இந்தியாவில் MG நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக இந்தக் கார் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் விற்கப்படும் இதே மாடலின் பெட்ரோல் காரின் வடிவமைப்பு இந்த எலக்ட்ரிக் காருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 44.5 kWh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் இந்தக் காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 340 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். வெறும் 8.5 செகண்ட்களில் மணிக்கு சுமார் 100 கிலோமீட்டர் வேகத்தை இந்தக் காரில் அடைய முடியும்.
இந்தக் காரை ஓட்டும் விதம் மூன்றாக கொடுக்கப்பட்டுள்ளது. Eco, Normal, Sport ஆகிய மூன்று விதங்களில் இந்தக் காரை ஓட்டலாம். 50 நிமிடங்களில் சுமார் 80 சதவிகிதம் சார்ஜ் செய்யக் கூடிய இந்தக் காரில், வீட்டில் பயன்படுத்தப்படும் 7.4kW சார்ஜரைப் பயன்படுத்தி, 6 முதல் 8 மணி நேரங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம்.
Hyundai Kona Electric
இந்தியாவில் விற்பனை தொடங்கப்பட்ட முதல் எலெக்ட்ரிக் SUV கார் இது. மேலே குறிப்பிட்டுள்ள எலெக்ட்ரிக் கார்களை விட அதிகம் விலை கொண்டதாக, 23 லட்ச ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்தக் காரின் அம்சங்கள் இன்னும் மேம்பட்டவையாக இருக்கின்றன. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிலோமீட்டர் வரை பயணிக்கக் கூடிய இந்தக் காரை Eco+, Eco, Comfort, Sport ஆகிய விதங்களில் ஓட்ட முடியும்.