Maruti Suzuki SUV: உள்நாட்டில் NO.1, மாருதி சுசுகியில் உள்ள எஸ்யுவி கார்கள் என்ன? பட்ஜெட்டும், இன்ஜின் விவரங்களும்..!
Maruti Suzuki SUV: மாருதி சுசுகி நிறுவனம் சார்பில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும், எஸ்யுவி கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Maruti Suzuki SUV: மாருதி சுசுகி நிறுவனம் சார்பில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 4 எஸ்யுவி கார்கள் விற்பனையில் உள்ளன.
மாருதி சுசுகி நிறுவனம்:
இந்தியாவில் ஆட்டோமொபைல் சந்தையில் கார்களின் விற்பனையானது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. நடுத்தர குடும்பத்தினரிடையே கார்களின் பயன்பாடு அதிகரித்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அப்படி கார் வாங்க விரும்பும் நபர்களின் முதல் விருப்பமாக இருப்பது மாருதி சுசுகி பிராண்ட் தான். காரணம், பட்ஜெட்டில் கிடைக்கும் கார் மாடல்கள் தான். இதன் காரணமாகவே உள்நாட்டு சந்தையில் கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதேநேரம், வாடிக்கையாளர்களின் புதிய விருப்பமாக உள்ள எஸ்யுவி பக்கமும் இந்நிறுவனம் தனது கவனத்தை திருப்பியுள்ளது. அந்த வகையில், மாருதி சுசுகி நிறுவனம் சார்பில் இந்திய சந்தையில் கிடைக்கும் எஸ்யுவி கார்கள் எவை, என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி ஃபிரான்க்ஸ்:
மாருதி சுசுகி நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யுவி ஆன ஃபிரான்க்ஸ் கார் மாடல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 5 சீட்களை கொண்ட இதன் வடிவமைப்பு வாடிக்கையாளர்களிடையே கவனத்தை ஈர்த்தது. மொத்தம் 14 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் விலை, 7.51 லட்சத்தில் தொடங்கி 13.04 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1197 cc மற்றும் 998 cc திறன் கொண்ட பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் ஆபஷன்களில் இந்த கார் கிடைக்கிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கும் இந்த கார், லிட்டருக்கு 20.01 முதல் 28.51 கிமீ மைலேஜ் வழங்குகிறது.
மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா:
மாருதி சுசுகி நிறுவனத்தின் சப்காம்பேக்ட் கிராஸ் ஓவர் எஸ்யுவி ஆனது, கடந்த 2022ம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்பட்டது. 5 சீட்களை கொண்ட இந்த காரானது 17 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை 10.80 லட்சத்தில் தொடங்கி அதிகபட்சமாக 20.09 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1462 cc மற்றும் 1490 cc திறன் கொண்ட இன்ஜின்களை பெற்றுள்ள இந்த காரானது, ஹைப்ரிட் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன்களில் கிடைக்கும் கிராண்ட் விட்டாரா, லிட்டருக்கு 20.58 முதல் 27.97 கிமீ வரையிலான மைலேஜை வழங்குகிறது.
மாருதி சுசுகி பிரேஸ்ஸா:
கடந்த 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிரேஸ்ஸா கார் மாடல், இந்திய சந்தையில் நன்கு விற்பனையாகும் சப்-காம்பேக்ட் எஸ்யுவி ஆகும். 5 பேர் அமரும் வகையிலான வசதியை கொண்ட இந்த காரானது, 15 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை 8.34 லட்சம் தொடங்கி அதிகபட்சமாக 14.14 லட்சம் வர நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1462 cc திறன் கொண்ட இன்ஜின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களில் வருகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கும் இந்த வாகனமானது, லிட்டருக்கு 19.05 முதல் 25.51 கிமீ மைலேஜ் வழங்குகிறது.
மாருதி சுசுகி ஜிம்னி:
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஜிம்னி கார் மாடல் கடந்த ஆண்டு ஜுன் மாதம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 4 பேர் அமரும் வகையிலான இந்த காரானது, 6 வேரியண்ட்களில் கிடைக்கிறது. 1462 cc பெட்ரோல் இன்ஜின் ஆனது மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கிடைக்கிறது. லிட்டருக்கு 16.39 முதல் 16.94 கிமீ மைலேஜை வழங்குகிறது.