Car Loan: செப்.22-க்கு பிறகு கார் வாங்க திட்டமா? எந்தெந்த வங்கியில் குறைந்த வட்டியில் லோன் கிடைக்கும்?
Car Loan: இந்தியாவில் கார் வாங்குவதற்கு ஏதுவாக எந்த வங்கியில் குறைந்த வட்டியில், வாகன கடன் கிடைக்கும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Car Loan: ஜிஎஸ்டி திருத்தம் அமலுக்கு வருவதால், செப்டம்பர் 22ம் தேதி முதல் கார்களின் ஆன் - ரோட் விலை கணிசமாக குறைய உள்ளது.
குறையப்போகும் கார்களின் விலை
இந்தியாவில் பண்டிகைக் கால கொண்டாட்டம் என்பது தொடங்க உள்ளது. அப்போது, வழக்கத்தை காட்டிலும் இந்த முறை ஷாப்பிங் என்பது களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி திருத்தம் அமலுக்கு வருவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதுநாள் வரை 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி விகிதம், வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் 5 மற்றும் 18 சதவிகிதம் என இரண்டு அடுக்குகளாக மாற உள்ளன. புதிய காரை வாங்க திட்டம் வைத்து இருந்தால், இதுதான் அதற்கான சரியான நேரமாக இருக்கும். ஒருவேளை சொந்த சேமிப்பு இல்லாமல், கடன் வாங்கி காரை வாங்க திட்டமிடுபவர்களில் நீங்களும் ஒருவரா? எனில், குறைந்த வட்டியில் வாகனங்களுக்கான கடனை வழங்கும் வங்கிகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இதன் மூலம் உங்களது மாதாந்திர தவணை என்பதும் குறைவாக, பட்ஜெட்டிற்குள்ளேயே அடக்க முடியும்.
குறைந்த வட்டியில் கார் லோன் தரும் வங்கிகள்
கார் வாங்குவதற்கான கடனை பெற பெரும்பாலானவர்கள் வங்கியை நாடுகின்றனர். எந்த வங்கியில் வட்டி குறைவாக இருக்கிறதோ, அங்கு நீங்கள் செலுத்த வேண்டிய மாதந்திர தவணையும் குறைவாகவே இருக்கும். தற்போதைய சூழலில்,
- UCO வங்கியானது குறைந்தபட்சமாக ஆண்டுக்கு 7.60 சதவிகித வட்டியுடன் காருக்கான கடன் வழங்குகிறது
- பேங்க் ஆஃப் மஹாராஸ்டிரா வங்கியானது ஆண்டுக்கு 7.70 சதவிகித வட்டியுடன் காருக்கான கடன் வழங்குகிறது
- இந்தியன் வங்கியானது ஆண்டுக்கு 7.75 சதவிகித வட்டியுடன் காருக்கான கடன் வழங்குகிறது
- யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளானது ஆண்டுக்கு 7.80 சதவிகித வட்டியுடன் காருக்கான கடன் வழங்குகிறது
மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து வட்டி விகிதங்களுக்கும், கடனை திருப்பி செலுத்தி காலமானது அதிகபட்சம் 7 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர தவணை எப்படி குறையும்?
சரியான மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் வட்டி விகிதம் மட்டுமல்ல, கடனின் மாதாந்திர தவணை தொகையையும் குறைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வீட்டுக் கடனைப் போலவே, கார் கடனையும் நிலையான அல்லது ஃப்ளோட்டிங் ரேட்டில் பெறலாம். பயனாளர் ஃப்ளோட்டிங் ரேட்டை தேர்வுசெய்தால், RBI ரெப்போ விகிதத்தைக் குறைக்கும் போதெல்லாம், உங்கள் EMI நேரடியாகக் குறைக்கப்படும்.
அதே நேரத்தில், கிரெடிட் ஸ்கோர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்த வட்டி விகிதத்தில் உங்களுக்கு கடன் கிடைப்பதற்கு க்ரெடிட் ஸ்கோரும் அவசியம். கார் வாங்குவதற்கு முன் உங்கள் கிரெடிட் ஸ்கோரையும் நீங்கள் சரிபார்க்கலாம். இதனுடன், முன்பணத்தை அதிகரிப்பதும் ஒரு நல்ல வழியாகும். நீங்கள் எவ்வளவு முன்பணம் செலுத்துகிறீர்களோ, அவ்வளவு குறைவாக கடன் இருக்கும். அதாவது, அதற்கேற்ப மாதாந்திர தவணைத்தொகை குறைவாக இருக்கும்





















