Royal Enfield: அடுத்தடுத்து 3 புதிய பைக் மாடல்கள்.. அசத்தும் ராயல் என்ஃபீல்ட் - யாருக்கெல்லாம் முன்பதிவு?
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அடுத்தடுத்து 3 புதிய பைக் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது.
சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற 2022 ரைடர் மேனியாவில், ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது புதிய சூப்பர் மீடியர் 650 க்ரூஸர் பைக் மாடலை இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. அந்நிறுவனத்தின் மிகவும் விலை உயர்ந்த பைக் மாடலாக கருதப்படும், புதிய க்ரூஸர் மாடல் வரும் ஜனவரி மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. ரைடர் மேனியாவில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மட்டும், சூப்பர் மீடியர் பைக்கை முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து 3 புதிய பைக் அறிமுகம்:
இந்நிலையில் தான், இந்தியா மட்டுமின்றி உலக சந்தைகளுக்கு 3 புதிய 650cc மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் பணிகளை ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது. இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் GT 650 ஆகிய பை மாடல்களின் அடிப்படையில், புதிய பைக்குகள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, ஷாட்கன் 650 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 650 ஆகிய புதிய பைக் மாடல்களின் சோதனை ஓட்டங்கள் இந்தியாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதோடு சேர்த்து புதிய அட்வென்ச்சர் பைக் வடிவமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதிக எடைகொண்ட புதிய மாடல் பைக்:
புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளின் சேசிஸில் சில மாற்றங்களைச் செய்ய உள்ளதோடு, ஆஃப்-ரோடு அளவுகளில் வயர்-ஸ்போக் அலாய் வீல்கள், ஸ்கூப் அவுட் ரைடர் இருக்கை மற்றும் உயரமான ஹேண்டில்பார் ஆகியவை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், அப்ஸ்வெப்ட் ஹை-மவுண்டட் எக்ஸாஸ்ட் மற்றும் பின்புற லக்கேஜ் ரேக் ஆகியவற்றுடன், இன்டர்செப்டார் (200கிலோ) மற்றும் சூப்பர் மீடியரை (240 கிலோ) விட அதிக எடை கொண்டதாக புதிய பைக் இருக்கும் என கூறப்படுகிறது.