Hyundai Venue 2025: கிரேட்டா போட்ட குட்டி, ஹுண்டாயின் Next Gen வென்யு - IMT ஆப்ஷன், லெவல் 2 ADAS - குறையில்லா அம்சங்கள்
Next Gen Hyundai Venue 2025: ஹுண்டாய் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை வென்யு கார் மாடலில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

Next Gen Hyundai Venue 2025: ஹுண்டாய் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை வென்யு கார் மாடல் நடப்பாண்டு இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த தலைமுறை வென்யு 2025:
அட்டகாசமான ஸ்டைலிங் மற்றும் அம்சங்கள் நிறைந்த காம்பேக்ட் எஸ்யுவி வாங்க விரும்பினால், அடுத்த தலைமுறை வென்யு கார் மாடல் உங்களுக்கான சரியான தேர்வாக இருக்கலாம். உற்பத்தி முடிந்து கார் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், பல்வேறு புகைப்படங்கள் கசிந்து வருகின்றன. அதன் மூலம் காரில் உள்ள பல்வேறு வசதிகள் மற்றும் அம்சங்கள் தொடர்பாக தகவல்கள் தெரிய வந்துள்ளன.
ஹுண்டாய் வென்யு 2025: கிரேட்டா டச்
இரண்டாம் தலைமுறை வென்யு கார் மாடல் அடுத்தடுத்து சோதனைகளின் போது சிக்கி வருகிறது. இந்த முறை காரின் முன்பகுதி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புதிய வென்யு கார் மாடலில் கிரேட்டாவில் இருப்பது போன்ற க்வாட் எல்இடி லைட்கள் மற்றும் கனெக்டட் DRLs கொண்ட கூடுதல் பிரீமியம் தோற்றத்தை கொண்டுள்ளது. கிரில்லில் L வடிவிலான எல்இடி எலிமெண்ட்ஸ் மற்றும் ரெக்டேங்குலர் ஸ்லாட்ஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. முந்தைய தலைமுறையில் பாரமெட்ரிக் கிரில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹுண்டாய் வென்யு 2025 - வெளிப்புற அப்டேட்
பக்கவாட்டை கவனத்தில் கொள்ளும்போது புதியதாக வடிவமைக்கப்பட்ட 16 இன்ச் அலாய்-வீல்களை கொண்டுள்ளன. தடிமனான நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், விண்டோ லைன் ஃபிளாட்டராக உள்ளது. இது காரின் ஸ்போர்ட்டியர் தோற்றத்தை மேலும் மேம்படுத்துகிறது. பின்புறத்திலும் புதிய பம்பர் வழங்கப்பட்டுள்ளது. அங்கு நீட்டிக்கப்பட்ட ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் புத்தாக்கம் செய்யப்பட்ட டெயில் லைட்ஸ் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.
ஹுண்டாய் வென்யு 2025 - உட்புற அப்டேட்
உட்புற அப்டேட் குறித்து பேசுகையில், அதுதொடர்பான கூடுதல் தகவல்கள் எதுவும் பெரிதாக வெளிப்படவில்லை. அதேநேரம், அடுத்த தலைமுறை வென்யு குறிப்பிட்ட சில அப்டேட்களை பெறும் என நம்பப்படுகிறது. அதில், அல்கசார் மற்றும் கிரேட்டாவில் இருப்பதை போன்ற புதிய டேஷ்போர்ட், பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்க்ரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வெண்டிலேடட் சீட்ஸ் ஆகியவை இடம்பெறலாம். தற்போதைய மாடலில் லெவல் 1 ADAS இருக்கும் சூழலில், புதிய எடிஷனில் லெவல் 2 ADAS இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு தரம் மேலும் உயர்த்தப்படும்.
ஹுண்டாய் வென்யு 2025 - பவர்ட்ரெயின்
இன்ஜினை பொறுத்தவரையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும், தற்போதைய எடிஷனில் உள்ள 3 இன்ஜின் ஆப்ஷன்கள் அப்படியே தொடரும் என்றும் கூறப்படுகிறது. அதன்படி,
- 83hp - 1.2 லிட்டர் பெட்ரோல்
- 120hp - 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல்
- 100hp - 1.5 லிட்டர் டீசல்
பெட்ரோல் வேரியண்ட்களில் 5 ஸ்பீட் மேனுவல் அல்லது 7 ஸ்பீட் டிசிடி ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. டீசல் வேரியண்டில் 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டுமே வழங்கப்படும். அதேநேரம், புதிய தலைமுறை வென்யுவில் IMT எனப்படும் இண்டெலிஜெண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் வழங்கப்படும். வென்யுவின் தற்போதைய பெட்ரோல் வேரியண்ட் 17.5 கிமீ, டீசல் வேரியண்ட் 23.4 கிமீ மைலேஜ் வழங்குவது குறிப்பிடத்தக்கது.
ஹுண்டாய் வென்யு 2025 - வெளியீடு, விலை விவரங்கள்:
அடுத்த தலைமுறை வென்யு கார் மாடலானாது நடப்பாண்டு இறுதியில் அக்டோபர் அல்லது நவம்பரில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. சப்-4 மீட்டர் எஸ்யுவி செக்மெண்டில் 5வது இடத்தில் உள்ள வென்யு, 9.26 சதவிகித சந்தை பங்கீட்டை கொண்டுள்ளது. தற்போதைய மாடலின் விலை ரூ.7.94 லட்சம் தொடங்கி ரூ.13.53 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை வென்யுவில் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்படுவதால், அதன் விலை கணிசமாக உயரக்கூடும் என கணிக்கப்படுகிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய வென்யு கார் மாடலானது, மாருதி பிரேஸ்ஸா, டாடா நெக்சான், மஹிந்திரா XUV3XO, ஸ்கோடா கைலாக் மற்றும் டொயோட்டா டெய்சர் ஆகிய கார் மாடல்களுக்கு தொடர்ந்து போட்டியாக இருக்கும்.





















