Kawasaki Ninja: கவாசகி நிஞ்ஜா 300 ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்.. விலையும், விவரங்களும் உள்ளே..!
கவாசகி நிறுவனத்தின் புதிய 2023 நின்ஜா 300 ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிள் மாடல், இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கவாசகி நிறுவனத்தின் புதிய 2023 நின்ஜா 300 ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிள் மாடல், இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கவாசகி மோட்டார் சைக்கிள்:
கவாசகி நிறுவனம் மலிவு விலை பைக்குகளை இந்திய சந்தையில் விற்பனை செய்து, தனக்கான வாடிக்கையாளர் வட்டாரத்தை உருவாக்கியுள்ளது. தொடர்ந்து பல்வேறு புதிய இருசக்கர வாகன மாடல்களையும் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தான், இந்தியா கவாசகி மோட்டார்ஸ் நிறுவனம் 2023 நின்ஜா 300 மோட்டார்சைக்கிள் மாடலை, இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய கவாசகி நின்ஜா 300 மாடல் சமீபத்திய OBD விதிகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இன்ஜின் விவரம்:
இந்த மாடலில் 295சிசி, பேரலல் டுவின், லிக்விட் கூல்டு 8-வால்வுகள் கொண்ட ஃபியூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 38.4 ஹெச்பி பவர், 26.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. அதோடு, 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது.
சிறப்பம்சங்கள்:
அதேநேரம், வாகனத்தின் மற்ற உபகரணங்கள் பட்டியலில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி 2023 நின்ஜா 300 மாடலிலும் டைமண்ட் ரக ஃபிரேம், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோ ஷாக் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு பெட்டல் ரக டிஸ்க் பிரேக்குகள் இரண்டு வீல்களிலும் இடம்பெற்றுள்ளன. இந்த மாடல் 17-இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளது. இதில் டியூப்லெஸ் ரக டயர்கள் உள்ளன. புதிய 2023 கவாசகி நின்ஜா 300 மாடலில் ஹாலஜன் ரக முகப்பு விளக்கும், பல்பு ரக இண்டிகேட்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏபிஎஸ் போன்ற வசதிகள் உள்ளன. மோட்டார்சைக்கிளின் எக்சாஸ்டர் மேம்பட்ட செயல்திறன் மற்றும் குறைந்த இரைச்சலுக்கு உகந்ததாக இருக்கும் என கவாசகி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஸ்போர்டி கிராபிக்ஸில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், வாகனத்திற்கு மொத்தமாக புதிய தோற்றத்தை வழங்கியுள்ளது.
விலை விவரங்கள்:
புதிய 2023 கவாசகி நின்ஜா 300 மாடலின் விலை, இந்திய மதிப்பில் 3 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லைம் கிரீன், கேண்டி லைம் கிரீன் மர்றும் மெட்டாலிக் மூன்டஸ்ட் கிரே என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாத இறுதியில் இருந்து புதிய 2023 கவாசகி நின்ஜா 300 மாடலின் டெலிவெரி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய 2023 கவாசகி நின்ஜா 300 ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனைக்கு வரும்போது, BMW G 310 RR, KTM 390 RC மற்றும் TVS Apache RTR 310 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.