மதுரை : கள்ளழகர், கூடலழகர் தெப்பக்குளங்களை கொஞ்சம் கவனிங்களேன் : கோரிக்கை வைக்கும் ஆர்வலர்கள்..!
கள்ளழகர் மற்றும் கூடலழகர் தெப்பமும் சீரமைக்கப்பட்டு மேம்படுத்தினால் மதுரை இன்னும் சிறப்பு பெறும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
"பெருமாள் கோயில் தெப்பத்த சுத்தி தென்னமரங்கள் சோங்கா இருக்கும். மாசி பெளர்ணமிக்கு திருவிழா களைகட்டும். அப்பயெல்லாம் எல்.இ.டி லைட்டெல்லாம் இல்ல. பெட்டர் மாஸ் லைட்டும், தீ பந்தமும் தான். ஆனாலும் ரவயெல்லாம் ஜெக ஜோதியா சொலிக்கும்" என்று கூடலழகர் தெப்பக்குளம் குறித்து விளக்கிறார்கள் ஆன்மீக ஆர்வலர்கள். மதுரை என்றால் நமக்கு வண்டியூர் தெப்பக்குளம் மட்டும் தான் தெரியும். ஆனால் மதுரையில் எண்ணற்ற கோயில் தெப்பக் குளங்கள் இருந்து பல்வேறு விதத்தில் நன்மை பயக்கின்றன. "கோயில் குளம் தான் ஊருக்கு அழகு, கோயில் இல்லா ஊர விலக்கு" என்று சினிமா பாடல்களில் கூட மதுரையின் ஆன்மீக தலங்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
இந்நிலையில் மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பம் பயன்பாடு இல்லாமல் கிடப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 108 வைணவத் தலங்களில் கூடலழகர் பெருமாள் கோயிலும் ஒன்று. இதன் தெப்பக்குளத்திற்கு கோச்சடையில் இருந்து தண்ணீர் வந்ததாக சொல்லப்படுகிறது. தெப்பத்திற்கு வரும் வரத்துக் கால்வாய்கள் மூடப்பட்டதால் தெப்பத்தில் தண்ணீர் இன்றி வறண்டது. பின்னர் இந்த தெப்பத்தைச் சுற்றி 195 கடைகள் கட்ட கோயில் நிர்வாகம் அனுமதி கொடுத்ததால் குளம் முழுமையாக அழகை இழந்தது. தற்போது பல்வேறு பொதுநல வழக்குகளால் தெற்குப்பகுதியில் உள்ள கடைகள் மட்டும் இடிக்கப்பட்டது. ஆனாலும் சுற்றி ஆக்கிரமிப்புகள் மீட்கப்படாமலும், குளத்திற்கு தண்ணீர் வரவாமலும் அதே நிலையில் தான் காட்சியளிக்கிறது.
இது குறித்து சித்திரைவீதிக்காரன் என்ற சுந்தரிடம் பேசிபோது....," கூடலழகர் பெருமாள் தெப்பத்தில் 1910ஆம் ஆண்டுக்குப் பின் தண்ணீர் இருந்தது போல் தெரியவில்லை. எனவே கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பத்தில் தண்ணீர் நிரப்பும் பணியை செய்யலாம். தெப்பத்தை சுற்றி ஆக்கிரமிப்புகளை எடுப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் என யோசிக்கிறேன். எனவே முதலில் தெப்பத்தில் நீர் நிரப்பும் பணியை செய்த பின் ஆக்கிரமிப்புகள் குறித்து முடிவு எடுக்கலாம். இல்லை என்றால் அந்த இடம் குப்பை கொட்டும் இடமாக மாறிவிடும். எழுகடல் வீதியில் இருந்த தெப்பக்குளம் இருந்த அடையாளம் தெரியாமல் காணாமல் போச்சு. அது போன்று இந்த தெப்பமும் மாறிவிடக்கூடாது. திருப்பரங்குன்றம், தல்லாகுளம் தெப்பம், வண்டியூர் தெப்பம் போல் மேம்படுத்த வேண்டும். அதே போல் அழகர்கோயில் தெப்பமான பொய்க்கரைப்பட்டி தெப்பக்குளத்தையும் மேம்படுத்தலாம்" என்றார்.
மதுரை அழகர்கோயிலுக்கு சொந்தமான பொய்க்கரைப்பட்டி தெப்பம் குறித்து வீரணன்...," எங்கள் ஊர் பெருமாள் குளம் நாயக்கர் காலத்து தெப்பக்குளமாகும். சுந்தராஜ பெருமாளான கள்ளழகரின் தெப்பக்குளம். இந்த குளத்தைப் பற்றி பெருவாரியான மக்களுக்கு தெரியாது. சுமார் 12 அரை ஏக்கர் அளவை கொண்டது. வடக்கு மூலையில் இருக்கும் மடை வழியாக அழகர்கோயில் மழை நீர் இங்கு வந்தடையும். மாசி மாதத்தில் அழகரின் முதல் திருவிழா இங்கு தான் நடக்கும். கஜேந்திர மோட்சம் நடைபெறும். ஆரம்பக் காலகட்டத்தில் குளத்தில் சுற்றி இருந்த நந்தவனத்தில் தான் அழகருக்கு பூ கொண்டு செல்வார்கள். தெப்பத் திருவிழா அன்று அழகர். காலையும், மாலையும் குளத்தை மூன்று முறை சுற்றுவார்.
பின்னர் கிழக்கு கரையில் மேற்கு முகமாக அமர்ந்து அருள் பாலிப்பார். ஆனால் அதற்கு நிலையான மண்டபம் கூட இன்னும் கட்டப்படவில்லை. பெட்டிசன்கள் கொடுத்தும் பயன் இல்லாமல் இருக்கிறது. இந்தக் குளத்தை மராமத்து பணி செய்து தண்ணீர் நிரப்பினால் மதுரையில் முக்கிய இடமாக மாறும். தற்போது அமைச்சராக இருக்கும் மூர்த்தி தெப்பக்குளத்திற்கு சில உதவிகள் செய்துள்ளார். எனினும் கோயில் நிர்வாகம் இதன் முக்கியத்துவம் கருதி மேம்படுத்த வேண்டும். இந்த தெப்பக்குளத்தை சீர் செய்ய 5 கோடி ஒதுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் தெப்பக்குளம் இன்னும் முறையாக சீர் செய்யப்படவில்லை என்றார்.
மேலும் ஓய்வு பெற்ற தொல்லியல் துறை உதவி இயக்குநர் சொ.சாந்தலிங்கம்..," ஆரம்ப காலக்கட்டங்களில் சாமி சிலைகளை அபிஷேகம் செய்ய ஈசானி மூலையில் அமைக்கப்படும் கிணற்றில் இருந்து தான் தண்ணீர் எடுத்துக் கொள்வார்கள். அதனை 'சிவகங்கை' என்று அழைப்பார்கள். மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குக் கூட 1680 வரைக்குமே வைகை ஆற்றில் இருந்து தான் தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. பின்னர் பொதுவாக எல்லா கோயில்களிலும் பக்தர்கள் கை, கால் சுத்தம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக தெப்பம் உருவாக்கப்பட்டது. தெப்பத் தண்ணீரை வைத்து கோயில்களை சுத்தம் செய்வது உள்ளிட்ட பல பணிகளை செய்துகொண்டனர். பிற்காலத்தில் தெப்பங்களில் விமானங்களுடன் மைய மண்டபங்களும் கட்டப்பட்டது. 400 வருடங்களுக்கு உட்பட்டு தான். (Plot Festival) தெப்பத் திருவிழாக்கள் கொண்டாப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் தெப்பக் குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அவற்றை மீட்க அரசு பணம் ஒதுக்கியுள்ளது அதன் மூலம் சீரமைப்பு பணி செய்யலாம். பல்வேறு கோயில்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற மனுக்கள் கொடுத்துள்ளேன். கூடலழகர் தெப்பத்திற்கும் தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றார்.
கூடலழகர் பெருமாள் கோயில் நிர்வாகிகள் சிலர்," கூடலழகர் தெப்பக்குளத்தைச் சுற்றி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கிவிட்டது. கொரோனா காலகட்டம் என்பதால் தொய்வு ஏற்பட்டது. விரைவில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்படும்" என்றனர்.
மேலும் பொய்க்கரைப்பட்டி தெப்பக்குளம் குறித்து அழகர்கோயில் துணை ஆணையர் அனிதா நம்மிடம்," திருப்பணி செய்யும் ஏற்பாடு நடைபெறுகிறது. அதற்கு பின் தூர்வாரி தண்ணீர் நிரப்பப்படும். தற்போது அதற்கான போர்வெல் கூட தயாராகத்தான் இருக்கிறது. திருப்பணிகள் முடிந்ததும் பொய்க்கரைப்பட்டி தெப்பக்குளம் கண்டிப்பாக மேம்படும்" என நம்பிக்கை தெரிவித்தார்.
கள்ளழகர் மற்றும் கூடலழகர் தெப்பமும் சீரமைக்கப்பட்டு மேம்படுத்தினால் மதுரை இன்னும் சிறப்பு பெறும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.