பிரசித்தி பெற்ற காட்டூர் காளியம்மன் ஆலய காளிகட்டு விழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
மகாகாளியம்மன் மற்றும் பொற்பவள காளியம்மன் இணைந்து சந்தித்து இணைந்து நடனமாடும் காட்சி விமரிசையாக நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மலர்களை தூவி அம்மனை வழிபட்டனர்.
பிரசித்தி பெற்ற காட்டூர் காளியம்மன் ஆலய காளிகட்டு திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தமிழக முழுவதும் ஆடி மாதத்தை ஒட்டி கோவில்களில் தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது குறிப்பாக தேர் திருவிழா காவடி எடுத்தல் தீமிதி உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு உலக புகழ் பெற்ற திருவாரூர் அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். இதேபோன்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கோவில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பிரசித்தி பெற்ற காட்டூர் காளியம்மன் ஆலய காலிகட்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் காட்டூர் கீழத்தெரு மகாகாளியம்மன் ஆலய காளிகட்டு திருவிழா மற்றும் காட்டூர் கீழத்தெரு பொற்பவள காளியம்மன் ஆலய காளி கட்டு திருவிழா நேற்று நடைபெற்றது. காட்டூர் மகாகாளியம்மன் ஆலய ஆடி மாத திருவிழா நேற்றைய முன்தினம் இரவு காப்பு கட்டுதல் மற்றும் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
இதனையடுத்து காலை காளிகட்டு திருவிழா நடைபெற்றது. அதன் அடிப்படையில் அக்காள் தங்கைகளாக கருதப்படும் மகாகாளியம்மன் மற்றும் பொற்பவள காளியம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு காளி கட்டி புறப்பட்டு வந்து காட்டூர் பிடாரியம்மன் அரசமரத்தடியில் ஒன்றிணைந்து நடன காட்சி ஆடினர். இதில் மகாகாளியம்மன் மற்றும் பொற்பவள காளியம்மன் இணைந்து சந்தித்து இனைந்து நடனமாடும் காட்சி விமரிசையாக நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மலர்களை தூவி அம்மனை வழிபட்டனர். இந்த காளிகட்டு திருவிழாவை காண காட்டூர் கிராமம் மட்டுமன்றி அம்மையப்பன் திருக்கண்ணமங்கை விளமல் திருவாரூர் எட்டியலூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து மகா காளியம்மன் மற்றும் பொற்பவள காளியம்மன் நடனத்தையடுத்து வீதி உலா காட்சி நடைபெற்றது.
காட்டூரில் முக்கிய வீதிகளில் இந்த வீதி உலா காட்சி என்பது நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்பாள் வீதி உலா மஞ்சள் நீர் விளையாட்டு மற்றும் காப்பறுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வரும் ஆகஸ்ட் 16ம் தேதி விடையாற்றியுடன் இந்த திருவிழா நிறைவுபெற உள்ளது. இந்த திருவிழாவை ஒட்டி திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு சுகாதார வசதிகள் குடிநீர் கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்பட்டிருந்தது. மேலும் திருவிழா நடைபெறும் இடம் முழுவதுமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வண்ணம் காவல்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்