திருவண்ணாமலை: மகா சிவராத்தியை முன்னிட்டு ஜோதி பிழம்பாக எழுந்தருளிய லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சிவராத்தியை முன்னிட்டு ஜோதி பிழம்பாக எழுந்தருளிய லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம் திரளான பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலாகும். அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. திருமால், பிரம்மன் ஆகிய இருவரில் யார் பெரியவர் என போட்டி வந்த போது, நான் என்ற அகந்தை அடங்கினாலன்றி சிவ பரம்பொருளை காண முடியாது என்ற உண்மையை உலகிற்கும், திருமால் மற்றும் பிரம்மனுக்கு உணர்த்தும் வகையில் தனது அடியையும், முடியையும் யார் கண்டு வருகிறீர்களோ அவரே பெரியவர் என சிவபொருமான் கூறினார்.
திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காணவும், பிரம்மன் அன்னபட்சியாக உருவெடுத்து முடியைக்காணவும் உயரப்பறந்து சென்றார். இருவரும் வெகு காலங்கள் தேடியும் அடியையும், முடியையும் காண முடியாமல் தோல்வி அடைந்ததுடன் திருமால் தனது தவறை உணர்ந்து சிவனிடம் சென்று வழிபட்டார். பிரம்மன் மேலும் பல யுகங்களாக சென்று முடியை காண முடியாத சூழலில் மேலிருந்து கீழே வந்த தாழம்பூவை பொய் சாட்சி சொல்ல வைத்தார். இதனையறிந்த சிவபெருமான் நெருப்பு பிழம்பாக லிங்க வடிவாய் வெளியே வந்து அனைத்து தேவர்களுக்கும் நல்லாசி வழங்கியதுடன் பிரம்மனுக்கு பூலோகத்தில் கோவில்கள் இல்லை என்றும், பொய்சாட்சி கூறிய தாழம்பூ பூஜைக்குப் பயன்படாது என்றும் சாபம் அளித்து லிங்கோத்பவ மூர்த்தியாக காட்சியளித்தார். இந்த மகா சிவன ராத்திரி உருவான இடம் திருவண்ணாமலை ஆகும்.
இந்த ஆண்டிற்கான மகா சிவராத்திரி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை கோவிலில் பல்வேறு வண்ண மலர்களால் லட்சார்ச்சனை நடைபெற்றது.அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.கோவில் கொடிமரத்தின் அருகில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மகா சிவராத்திரியையொட்டி நேற்று இரவு முதல் இன்று (புதன்கிழமை) அதிகாலை வரை 4 கால பூஜைகளும் நடைபெற்றது. முதல் கால பூஜையை பிரம்மாவும், 2-ம் கால பூஜையை திருமாலும், 3-ம் கால பூஜையை உமையாளும், 4-ம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் செய்ததாக ஐதீகம் உள்ளது.
மேலும் நள்ளிரவு 12 மணியளவில் அண்ணாமலையார் சன்னதி பின்புறம் மேற்குத் திசையில் அமைந்துள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், இளநீர், பஞ்சாமிரதம், ருத்ராட்சம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சிவனுக்கு வைத்து வழிபடும் தாழம்பூவை வைத்து சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது. இந்த சிவராத்திரி விழாவில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு லிங்கோத்பவரை தரிசனம் செய்து வழிபட்டனர். இதனைக்காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதில் கோவில் ஊழியர்கள் ஒரு சிலர் பக்தர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு அவர்கை எதிர் திசை வழியில் சாமி தரிசனம் செய்ய அழைத்து வந்ததால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் பக்தர்களில் ஒருசிலருக்கு மூச்சு தினறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் காவல்துறையினர் சார்பில் குறைந்த அளவில் மட்டுமே பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டதால் பக்தர்களுக்கு இடையே கோவில் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் கோவிலின் ராஜகோபுரத்தின் முன்பு மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட கிரிவல நாதஸ்வரம் தவில் இசை சங்கத்தின் சார்பில் உலக அமைதிக்காக பிச்சாண்டி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட நாதஸ்வர, தவில் இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி விடிய, விடிய நடைபெற்றது. அதேபோல் கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கண்டு ரசித்தனர். மேலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் வாழை தோரணங்கள் கட்டப்பட்டு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்