திருச்செந்தூர் கோவிலில் முதியவர்களுக்கு தனிப்பாதை; முறையான அறிவிப்பில்லை என பக்தர்கள் புகார்
60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தங்கள் வயதை உறுதிப்படுத்தும் வகையில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றினை காண்பித்து தரிசனம் செய்யலாம்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முதியவர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் முறையான அறிவிப்பு செய்யாததால் முதியவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மார்ச் 9-ந் தேதி முதல் இலவச பொது தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசனம் என இரண்டு வழியாக மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சஇதனால் விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் முதியவர்கள் எளிதாக சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் தனி பாதை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து முதியவர்கள் சண்முக விலாசம் மண்டபத்தில் உள்ள துலாபாரம் வாசல் அருகே இருக்கைகள் அமைத்து அமர்ந்து செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பாதையில் செல்லும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தங்கள் வயதை உறுதிப்படுத்தும் வகையில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றினை காண்பித்து தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது.
இருந்தபோதிலும் இந்த செயல் திட்டம் நடைமுறைப்படுத்தபடாததால் பல்வேறு பகுதியிலும் வந்திருக்கக்கூடிய முதியவர்கள் அந்த வழிப்பாதையில் தரிசனம் செய்வதற்காக நீண்ட நேரம் காத்திருந்து வருகின்றனர். மேலும் அங்கு இருக்கக்கூடிய பணியாளர்களும், ஊழியர்களும் முறையான பதில் அளிக்காததால் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றம் அடைந்து மீண்டும் பொது தரிசனத்தில் சென்று காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை இருப்பதாக முதியவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே உரிய நடைமுறைகளை செயல்படுத்துவதற்கு முன் அதற்கான முன்னறிவிப்புகளை முறையாக செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை காரணமாக அடிப்படை வசதிகளை செய்து தர கோவில் நிர்வாகம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் பக்தர்களும் முன்வைக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்