பூம்புகார் நுழைவு வாயிலில் கருவறைக்கு காத்திருக்கும் கருவி ஈஸ்வரன்!
உலகம் தோன்ற முதல் கருவித்து விழுந்ததாக கூறப்படும் கருவி ஈஸ்வரன் கோவில்.
சிதம்பரம், நாகப்பட்டினம் முக்கிய சாலையில் பூம்புகார் நுழைவு வாயில் அருகில் உள்ளது கருவி என அழைக்கப்படும் கருவிழந்த நாதபுரம். சீர்காழியில் இருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கருவி என்ற ஊரில் தான், இப்புவியில் உயிர்கள் பிறப்பதற்கு முதல் ஆதார கரு வித்து விழுந்ததாக இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அந்த நிகழ்வின் காரணமாகவே ஊருக்கு கருவிழுந்த நாதபுரம் என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. சிருஷ்டி தத்துவத்தை விளக்கும் விதமாக அமைந்து முதல் உலகத் தோற்றத்திற்கு உரித்தான பெருமை பெற்ற ஊர் கருவிழுந்த நாதபுரம்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து அன்மையில் புதிதாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில், தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள கருவியில், காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் முன்பு கடைமடை வழியாக செல்லும் காவிரிக்கரை ஓரம் சென்றால் பெரும் புதர்களுக்கு நடுவில் அமைந்துள்ளது பழமையான சிவன் கோவில். மிகவும் பழமையான கோவில் இது என்பதால் கட்டிடங்கள் அனைத்தும் சிதிலமடைந்து மூலவரை தவிர்த்து மற்ற அனைத்து மூர்த்திகளும் தனி ஓட்டுக் கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேற்கூரை இன்றி மழை, வெயிலில் என மாறி மாறி பாதித்தாலும், காவிரிக் கரையில், மூலவர் அருவுருவமாக பளிங்கி கல்லால் செதுக்கியது போன்ற ரம்மியமாக வீற்றிருக்கும் இறைவனின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை என்கின்றனர் சிவ பக்தர்கள். மேலும் இங்கு பழம்பெரும் புராண காலங்களில் தினமும் தேவர்கள் வந்து பூஜை செய்யும் இடமாக இருந்துள்ளது கருவிழுந்த நாதபுரம்.
அருவுருவமான லிங்கமூர்த்தி மிக அழகாக பளிங்கு கல்லால் செதுக்கப்பட்டு இப்போது பார்த்தாலும் கண்ணாடியால் செய்தது போல் பள பள வென்று காட்சியளிக்கிறார். அழகாய் ஒளிர்ந்து இருக்கும் இந்த இறைவனை தரிசனம் செய்தால், இறைவன் நம் வாழ்வையும் ஒளிரச்செய்து, நினைத்ததை நிகழ்த்தும் ஆற்றல் உடையவன் கருவிழுந்த நாதபுரம் ஈஸ்வரன். ஆலய, அவல நிலையிலும் அழகாய் இறைவன் காட்சி அளித்தாலும், நூற்றாண்டுகளை கடந்தும் இன்னும் அந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் என்பதே கேள்விக்குறியாகவே உள்ளது.
மேலும் கிடாரம் கொண்டான் கிராமத்தில் இருந்து கணேசன் என்ற குருக்கள் மட்டும் அவ்வப்போது வந்து பூஜைகள் செய்துவிட்டு செல்கிறார். புதன், கேது, செவ்வாய் ஸ்தலம் என்று பல்வேறு நவக்கிரக ஸ்தலங்களுக்கு மத்தியில் உள்ள கருவிழுந்த நாதபுரம் சிவன் கோவில் பராமரிக்கப்பட்டு விரைவில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்பதே கோவிலை சற்றியுள்ள ஊர் மக்கள் மற்றும் பக்தர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது. மேலும் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இக்கோவில் அமைந்துள்ளதால் இந்து சமய அறநிலையத்துறையினர் சிறப்பு மிக்க இந்த கோவிலை தன்வசப்படுத்தி செப்பனிட்டு குடமுழுக்கு செய்வேண்டும் என்பதே சிவ பக்தர்களின் விருப்பமாக உள்ளது.