ஆடிபூரத்தையொட்டி கும்பகோணத்தில் அஸ்திரத் தேவர்கள் தீர்த்தவாரி - திரளான பக்தர்கள் பங்கேற்பு
வரங்கள் அள்ளித்தரும் அம்மனுக்கு உகந்த ஆடிப்பூர விழா; கும்பகோணத்தில் அஸ்திரத் தேவர்கள் தீர்த்தவாரி
ஆடிப்பூரத்தையொட்டி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஐந்து சிவன் கோயில்களில் அருள்பாலித்து வரும் ஆடிப்பூர அம்மன்கள் மகாமக குளக்கரையில் ஒரே இடத்தில் எழுந்தருளினர். அப்போது அஸ்திரத் தேவர்கள் குளத்தில் தீர்த்தவாரி கண்டருளினர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். இவ்வாறு இதுவரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன் மாதாவிற்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள்.
இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு.
உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன. அனைத்து உலகத்தையும் படைத்தும், காத்தும் வரும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு நடத்தப்படும். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளைகாப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம்.
ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில் சிவாலயங்களில் உள்ள அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த அம்மன்களை ஆடிப்பூர அம்மன் என அழைப்பது வழக்கம். இந்த அம்மன்களுக்கு ஆடிப்பூரத்தன்று பெண்கள் சுமங்கலி பூஜை நடத்துவார்கள். அதன்படி ஆடிப்பூரத் தினமாக கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர், நாகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர் ஆகிய கோயில்களிலிருந்து ஆடிப்பூர அம்மன்கள் சிறப்பு அலங்காரத்தோடு, கும்பகோணம் மகாமக குளத்தின் வடகரையில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் எழுந்தருளினர்.
காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு வந்த ஆடிப்பூர அம்மன்களுக்கு, ஏராளமான பெண் பக்தர்கள் கொண்டு வந்த, வளையல்கள் அணிவிக்கப்பட்டு, முளைப்பயிறு, பழங்கள் உள்ளிட்ட சுமங்கலிப்பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து ஆடிப்பூர அம்மன்களுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் அங்கிருந்து காசிவிஸ்வநாதர் கோயில் அம்மன் உள்பட ஐந்து ஆடிப்பூர அம்மன்களும் கும்பகோணம் மகாமக குளத்தின் கரையில் ஒரே இடத்தில் எழுந்தருளினர். அப்போது ஐந்து கோயில்களிலிருந்தும் கொண்டு வரப்பட்ட அஸ்திரத்தேவருக்கு பால், சந்தனம், மஞ்சள், திரவியம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அஸ்திரத்தேவர்களும் குளத்தில் ஒரே நேரத்தில் தீர்த்தவாரி கண்டனர். அப்போது அங்கிருந்த பக்தர்களும் தண்ணீரில் புனித நீராடினர். பின்னர் குளத்தின் கரையில் எழுந்தருளிய ஆடிப்பூர அம்மன்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து ஐந்து கோயில்களுக்கும் ஆடிப்பூர அம்மன்கள் திரும்பிச் சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்