பப்பாளி சாகுபடி : விவசாயிகள் வைக்கும் கோரிக்கைகள் என்ன?
பப்பாளி காய் ஏக்கருக்கு இருபது டன் வீதம் கிடைக்கிறது. ஒரு கிலோ பப்பாளி காய் ரூபாய் மூன்றுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு நான்கு முறையில் ரூபாய் என்பதாயிரம் வருமானம் கிடைக்கிறது.
ஆண்டு முழுதும் வருமானம் கொடுக்கும் பப்பாளி சாகுபடி-பப்பாளி சாகுபடி விவசாயிகளுக்கு விதைகள் இலவசமாக சொட்டு நீர்பாசனம் முழு மானியத்தில் வழங்க வேண்டும.
தூத்துக்குடி மாவட்டத்தில் தென்பகுதிகளான ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், திருச்செந்தூர், வல்லநாடு, குறும்பூர் இறவை பாசனமும், வட பகுதிகளான கோவிப்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், எட்டையபுரம், புதூர் ஆகிய பகுதிகள் வானம் பார்த்த மானவாரி கரிசல் நிலங்களாகவும் உள்ளன. இறவை பாசனம் ஆண்டுக்கு இருபோகமும், மானாவாரி நிலங்கள் ஆண்டுக்கு ஒரு போகமும் விவசாயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் வட பகுதிகளான கோவில்பட்டி, கழுகுமலை, விளாத்திகுளம், புதூர் பகுதியில் சில கிராமங்களில் கிணற்று பாசனம் மூலம் மிளகாய், காய், கனி, வாழை, வெற்றிலை, மக்கா, கம்பு பயிரிட்டு உள்ளனர். இந்நிலையில் நாளுக்கு நாள் கூலி உயர்வு, மருந்து, உரம், விலை உயர்வு ஆகியவற்றால் விவசாயத்தில் போதிய இலாபமின்மையால் தொடர் சாகுபடி செய்ய மலைத்தனர்.
இதனால் தோட்ட பாசன விவசாயிகள் மாற்று பயிர் சாகுபடி செய்ய முடிவு செய்தனர். இதனால் அழகாபுரி அருகே மெட்டிப்பட்டி, சூரப்ப நாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் பப்பாளி சாகுபடிக்கு மாறி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓரளவு இலாபமும்,நிம்மதியும் அடைந்தனர். பப்பாளியில் இருவகைகள் உள்ளன. கிங்காங் எனப்படும் பப்பாளி வகையும், லெட்லேடி எனப்படும் பப்பாளி வகை என உள்ளன. கிங்காங் எனப்படும் பப்பாளி வகை ஏக்கருக்கு ஆயிரம் கன்றுகள் 6 x 6 அடி இடைவெளி விட்டு ஊன்ற வேண்டும்.
கன்று ஊன்றி எட்டாவது மாதத்தில் காய் பிடிக்கும். காய் ஓரளவு பருத்த பின் காய் தோல் பகுதியில் பிளேடால் கீறி விடுவார்கள். தினமும் சொட்டு சொட்டாக பால் வடிந்து மரத்தின் அடியில் வைத்துள்ள தகர பாத்திரத்தில் சேமிக்கப்படுகிறது. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பால் சேகரிக்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 210 கிலோ பால் கிடைக்கிறது. ஒரு கிலோ பால் ரூபாய் 130 க்கு கொள்முதல் செய்கின்றனர்.
பால் வடிந்து முடிந்த பப்பாளி காய் ஏக்கருக்கு இருபது டன் வீதம் கிடைக்கிறது. ஒரு கிலோ பப்பாளி காய் ரூபாய் மூன்றுக்கு கொள்முதல் செய்யபபடுகிறது. இதனால் ஆண்டுக்கு நான்கு முறையில் ரூபாய் என்பதாயிரம் வருமானம் கிடைக்கிறது.
மற்றொரு வகையான பப்பாளி பழம் அன்றாடம் நாம் சுவைக்கக் கூடியது. இப்பப்பாளிக்கு லெட்லேடி என பெயராகும். இப்பப்பாளி விதை பத்து கிராம் ரூபாய் நாலாயிரத்து ஐநூறாகும். பத்து கிராம் விதையில் சுமார் எழுநூறு விதைகள் இருக்கும். ஏக்கருக்கு 700 விதைகள் ஊன்ற வேண்டும். அதில் 500 விதைகளில் முளைப்பு திறன் காணப்படும். பப்பாளி பழம் உணவு வகைகளில் மிகவும் முக்கியமானதாகும்.
இதன் பலன் எட்டாவது மாதத்தில் இருந்து தொடங்கும். ஒரு கிலோ ரூபாய் 15 முதல் 18 வரை விலை போகிறது. வாரத்திற்கு ரூபாய் இருபதாயிரம் முதல் ஆண்டுக்கு ரூபாய் மூன்று இலட்சம் வரை கிடைக்கிறது. பப்பாளி சாகுபடி நல்ல இலாபகரமான தொழிலாக உள்ளது என்கின்றனர் விவசாயிகள்.
இது குறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன் கூறும்போது, கிள்ளிக்குளம் வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் பப்பாளி விதைகள் இலவசமாக கடந்த காலத்தில் வழங்கப்பட்டன. கடந்தாண்டு வழங்கப்படவில்லை. எனவே பப்பாளி சாகுபடியை ஊக்கப்படுத்த விதைகள் இலவசமாக வழங்க வேண்டும். தவிர பப்பாளி சாகுபடி விவசாயிகளுக்கு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து கொடுக்கப்படுகிறது. ஐந்தாண்டுகள் மட்டுமே அதன் ஆயுட்காலம் ஆகும்.
மீண்டும் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு கூடுதல் செலவாகிறது. அதனை அரசே ஏற்று முழு மானியத்தில் மீண்டும் சொட்டு நீர் பாசனம் அமைத்து கொடுக்க வேண்டும் என்கிறார்.