தஞ்சையில் அறுவடை செய்த சம்பா பயிர்களை காய வைக்கும் பணி மும்முரம்
சம்பா, தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பல பகுதிகளில் சம்பா பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் பல பகுதிகளில் அறுவடைப்பணிகள் தொடங்காததால் இயந்திரங்கள் அறுவடைக்காக கொண்டு வரப்படவில்லை.
தஞ்சாவூர்: தஞ்சை அருகே 8.கரம்பை பைபாஸ் சாலையில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த சம்பா பயிர்களை காயவைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். காலை மற்றும் மாலை வேளையில் பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் வெயில் அடிக்கும் நேரத்தில் அறுவடை பயிர்களை காய வைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிதான் முக்கியமானதாகும். ஒரு சில பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கடலை, உளுந்து, பயறு, சோளம், பூக்கள், காய்கறிகள், கிழங்குகள் போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
பம்ப் செட் வசதியுள்ள சில பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடியும் மேற்கொள்வது வழக்கம். கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொள்கின்றனர். நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் பலரும் குறுவை சாகுபடியை மேற்கொள்ளவில்லை. இருப்பினும் பல விவசாயிகள் காலதாமதமாக குறுவை பயிரிட்டு அறுவடையை முடித்தனர். பல்வேறு விவசாயிகளும் ஒரு போக சம்பா சாகுபடியை மேற்கொண்டனர். குறுவை முடித்த விவசாயிகள் தாளடி சாகுபடியை மேற்கொண்டுள்ளனர். இதனால் தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பல பகுதிகளில் சம்பா பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
இன்னும் பல பகுதிகளில் அறுவடைப்பணிகள் தொடங்காததால் இயந்திரங்கள் அறுவடைக்காக கொண்டு வரப்படவில்லை. இதனால் சம்பா நெல்லை விவசாயிகள் கை அறுவடையில் செய்து வருகின்றனர். கடந்த மாதத்தில் பெய்த மழையால் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டன. தற்போது கடும் பனிப்பொழிவு இருப்பதால் கை அறுவடையில் விவசாயிகள் இறங்கி உள்ளனர்.
இவ்வாறு சம்பா பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்யும் விவசாயிகள் கதிர்களை சாலையில் காயவைத்து வருகின்றனர். காலை மற்றும் இரவு நேரத்தில் அதிகளவு பனிப்பொழிவு இருப்பதால் நெல் ஈரமாக உள்ளது, இதனால் தஞ்சை அருகே 8.கரம்பை பகுதியில் அறுவடை செய்த சம்பா நெற் பயிர்களை சாலையில் காயவைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
மதிய வேளையில் சாலையில் சூரியன் வெப்பம் இருப்பதால் அறுவடை செய்த கதிர்களை காயவைத்து அடித்து நெல் மூட்டைகளாக கட்டும் பணியும் நடக்கிறது. இதனால் தஞ்சை- திருவையாறு பைபாஸ் சாலையில் விவசாயிகள் சாலை ஓரமாக கதிர்களை காயவைத்து உள்ளது.
மேலும் தற்போது பொங்கல் நெருங்கி வரும் நிலையில் நெல்லை விற்பனை செய்தால்தான் பொங்கலை கொண்டாட முடியும் நிலையும் உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், பனிப்பொழிவும் அதிகமாக இருக்கிறது. இதனால் நன்கு முற்றிய நெல் கதிர்களை கை அறுவடை செய்து உலர்த்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இல்லாவிட்டால் பனியால் நெல் பாதிக்கப்படும். அதனால்தான் இன்னும் மிஷின் அறுவடை தொடங்காத நிலையில் கை அறுவடை செய்து விட்டோம் என்று தெரிவித்தனர்.