கடும் பனிப்பொழிவால் நெற்பயிரில் பூச்சி தாக்குதல் அதிகரிப்பு - விவசாயிகள் வேதனை
பூச்சிச்கொல்லியை கட்டுப்படுத்த அசிபேப் அசார்டியாக்டின், குளோரோடேரேனிலிபுருள், புளுபென்டிமைட், தையமீத்தாக்கம் மருந்துகளை தெளித்து இலை சுருட்டு புழுவை கட்டுபடுத்தலாம்.
தஞ்சாவூர்: கடும் பனிப்பொழிவு காரணமாக நெற்பயிரில் பூச்சித் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை பகுதியில் உள்ள நெல்லுப்பட்டு, காட்டுக்குறிச்சி, ஆழி வாய்க்கால், பொய்யுண்டார் கோட்டை, ஆதனக்கோட்டை, பாச்சூர், அய்யம்பட்டி, வடக்கூர், தெக்கூர், செல்லம்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி செய்துள்ளனர். பல இடர்பாடுகளுக்கு மத்தியில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது பருவநிலை மாறி இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. நெற்பயிரில் இலை சுருட்டு புழு, குருத்துப்பூச்சி தாக்குதல், வேர் அழுகல் நோய், ஆனைக்கொம்பன் நோய், கருப்பு வண்டு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
பூச்சி தாக்குதல் இந்த பூச்சிகளை ஒழிப்பதற்காக பல்வேறு பூச்சி மருந்து கொல்லி மருந்துகளை அடித்தும் பூச்சிகள் சாகவில்லை எனவும், மேலும் பூச்சிகள் அதிகரிப்பதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் அறுவடை சமயத்தில் மகசூல் குறைந்து விடுமோ? என்கிற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.
மேலும் தற்போது தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை வேறு பெய்து வருகிறது. இந்நிலையில் தாளடி நடவு செய்த இளம் பயிர்களில் வேர் அழுகல் நோய் காணப்படுவதால் இரண்டு முதல் மூன்று தடவை மருந்துகள் அடித்தும் அந்த நோயில் மாற்றமில்லாமல் பயிர்கள் சிவந்து காணப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே வேளாண் அலுவலர்கள் மேற்கண்ட கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்து பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வேளாண் துறை சார்பில் கூறுகையில், நெற்பயிர்களில் இலை சுருட்டு புழு தாக்குதலை அறிகுறிகள் என்னவென்றால் நெற்கதிரில் உள்ள இலைகள் நீள் வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்துவிடும்.
தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும். இலைகள் நீள்வாட்டில் சுருண்டு, புழுக்கள் அதனுள்ளே இருந்துவிடும். இதனை கட்டுப்படுத்தும் முறைகளாவது நெல்வயல்களில் தேவைக்கு அதிகமாக தொழு உரங்கள் இடுவதை தவிர்க்கவும். வரப்புகளை சீராக்கி அதனை சுத்தமாக வைக்க வேண்டும், புல் பூண்டுகளை நீக்க வேண்டும்.
இலை சுருட்டு புழுவை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாறு, வேப்பஎண்ணை ஆகியவற்றை தெளிக்க வேண்டும். மேலும் பூச்சிச்கொல்லியை கட்டுப்படுத்த அசிபேப் அசார்டியாக்டின், குளோரோடேரேனிலிபுருள், புளுபென்டிமைட், தையமீத்தாக்கம் மருந்துகளை தெளித்து இலை சுருட்டு புழுவை கட்டுபடுத்தலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.