எந்த தடையும் இல்லாமல் விவசாய கடன் வழங்கணும்... குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
உழவுப் பணிகள் தொடங்க உள்ள நிலையில் உழவு மானியம் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

தஞ்சாவூர்: அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு திட்டம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வித தடையுமின்றி விவசாய கடன் வழங்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கோட்டாட்சியரின் உதவியாளர் பிரேம்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ் : குறுவை சாகுபடிக்கு எவ்வித தடையும் இல்லாமலும், சிபில் ஸ்கோர் பார்க்காமலும் கடன் கிடைக்கச் செய்ய வேண்டும். உழவுப் பணிகள் தொடங்க உள்ள நிலையில் உழவு மானியம் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகள் சாகுபடி செய்த கரும்பில் நோய் தாக்கம் உள்ளதால் அந்த விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் அல்லது கரும்பிற்கு உண்டான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கரும்பு பெருக்கு உதவியாளர் சுப்பிரமணி என்பவர் 30 ஆண்டு காலம் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றார். அவருக்கு இதுவரை பணப்பலன் வழங்கவில்லை. ஆலையில் பணியாற்றிய தலைமை நிர்வாகி செந்தில்குமாரி ஆலையில் கரும்புக்கு முன்பணம் வாங்கிய சிஓ விஜயலட்சுமி என்பவர் தான் பணம் கட்ட வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் தற்போது ஆலை தலைமை நிர்வாகியாகள்ள ராமன், கணக்கு அலுவலர் செந்தில்குமார் இருவரும் சேர்ந்து டிஆர்ஓ உத்தரவை மதிக்காமல் சுப்பிரமணி கணக்கில் பணம் பிடித்தம் செய்து உள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் நீதிமன்றம் செல்ல தயாராக உள்ளோம்.

ஏகேஆர்.ரவிச்சந்தர்: குறுவை சாகுபடியை முழுமையாக தொடங்குவதற்கு அனைத்து கிளை வாய்க்கால்களிலும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும். 40 நாட்களுக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும். நீர்வளத் துறையில் கரை காவலர்கள் காலி பணியிடங்களை உடன் நியமிக்க வேண்டும். பயிர் கடன் வழங்குவதில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் சிபில் ஸ்கோர் பார்த்து மறுப்பு தெரிவிக்கின்றன. மேற்படி விதிமுறைகளை தளர்த்தி எந்த நிபந்தனையும் இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் வழங்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பூதலூர் ஆனந்த காவேரி வாய்க்காலில் உள்ள பாசன மதகுகளில் இரும்பு தண்டவாளங்கள், இரும்பு ஷட்டர்கள் மரைகளுடன் உள்ள இரும்பு கம்பங்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். சித்தாயல் வாய்க்கால், புலி அடி வாய்க்கால், மரத்துக்குடி வாய்க்கால், நடு வாய்க்கால், படுகை வாய்க்கால் போன்ற பதினைந்து வாய்க்காலில் மதகுகளில் இரும்பு ஷட்டர்களுக்கு பதிலாக புதிய ஷட்டர்கள் அமைக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எடை போடும் எலக்ட்ரானிக் தராசு பழுது நீக்கம் செய்யப்படாமல் எடை மோசடி நடந்து வருகிறது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரமூர் அறிவழகன் : டெல்டா சாகுபடிக்காக உரிய காலத்தில் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். எனவே அனைவருக்கும் குறுவைத் தொகுப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரமூர் வருவாய் கிராமம் ஓலத்தேவராயன் பேட்டை, கல்லக்குடி கிராமங்களில் மின் மோட்டார், வயர்கள் மற்றும் ஆடுகள் திருட்டுப் போவதை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். வேளாண் பொறியியல் துறையில் இ- வாடகைக்கு ட்ரோன் வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள பழைய இயங்காத நிலையில் உள்ள நெல் தூற்றும் இயந்திரங்களை எடுத்துவிட்டு புதிய இயந்திரங்கள் அமைக்க வேண்டும்.
எல்.பழனியப்பன் : ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து இன்னும் கடைமடை விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீர் சென்றடையவில்லை. தொகுப்பை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகளுக்கு உடன் பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மரவள்ளிக்கிழங்கிற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக டன் ஒன்றுக்கு ரூ.12,000 வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.





















