காராமணித் தோப்பு பகுதியில் கொத்தவரங்காய் அறுவடைப்பணியில் விவசாயிகள் மும்முரம்
கொத்தவரை இலைகள் ஆஸ்துமா நோயைத் தணிக்க வல்லவை. கொத்தவரையை கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்வது நல்லது.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் காராமணித் தோப்பு பகுதியில் நெல்லுக்கு பதிலாக கொத்தவரங்காய் சாகுபடி செய்து அறுவடைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொத்தவரங்காய் அறுவடைப்பணிகள்
தஞ்சை மாவட்டம் காராமணித்தோப்பு பகுதியில் கொத்தவரங்காய் சாகுபடியில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் சம்பா, குறுவை, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தஞ்சையில் நெல்லுக்கு அடுத்தப்படியாக வாழை, கரும்பு, எள், சோளம், பயிர் உள்ளிட்டவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். அதேபோல் ஒரு சிலர் பூசணி, வெண்டை, புடலை, கீரை, கொத்தவரை, பீக்கங்காய் , பாவை உள்ளிட்ட காய்கறி வகைகளையும் சாகுபடி செய்து வருகின்றனர். நெல்லுக்கு பதிலாக காய்கறி சாகுபடி மேற்கொண்டு நல்ல வருமானத்தை பார்த்து வருகின்றனர். பல விவசாயிகள் பரங்கிக்காய் சாகுபடியும் மேற்கொள்கின்றனர். சிலர் பூக்கள் சாகுபடியில் நல்ல வருமானம் பார்த்து வருகின்றனர்.
வாகனங்களில் நேரடியாக விற்பனை செய்வோம்
இவ்வாறு காராமணி தோப்பு பகுதியில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள் அனைத்தும் காய்கறி மொத்த மாா்க்கெட், உழவர் சந்தை போன்ற இடங்களில் நேரடியாக எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். சிலர் வாகனங்களில் வைத்து நேரடியாக கிராமப்புறங்களுக்கு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதில் நேரடியாக லாபத்தை பெறுகின்றனர். வியாபாரிகளிடம் விற்பதை விட இவ்வாறு நேரடியாக விற்பனை செய்யும் போது அதிக வருமானம் கிடைக்கிறது.
அந்த வகையில தஞ்சையை அடுத்த காராமணித்தோப்பு பகுதியில் விவசாயிகள் சிலர் கொத்தவரங்காய் விவசாயம் மேற்கொண்டுள்ளனர். தற்போது கொத்தவரங்காய் அறுவடைப்பணிகள் நடந்து வருகிறது.
கொத்தவரங்காய் சாகுபடி செய்யும் முறை
இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: ஜூன் ஜூலை, அக்டோபர் நவம்பர் மாதத்தில் விதைகளை பக்கவாட்டில் 15 செ.மீ இடைவெளியில் ஊன்ற வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 10 கிலோ விதைகளை விதைக்க வேண்டும். ஆறிய அரிசி கஞ்சியில் 600 கிராம் ரைசோபியம் நுண்ணுயிர் கலவைக் கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும். விதைப்பதற்கு முன்பு சுமார் 15 - 30 நிமிடம் நிழலில் உலர்த்த வேண்டும்.
நிலத்தை நன்கு உழுது பண்பட செய்வது அவசியம். பின் பார் சால்களை 45 செ.மீ இடைவெளியில் அமைக்க வேண்டும். நடவு செய்த 30-வது நாளில் ஒரு ஹெக்டருக்கு 20 கிலோ தழைச் சத்தினை மேல் உரமாக இடவேண்டியது அவசியம். கிளைகோநியூட்ரியன்ட் என்னும் வேதிப்பொருள் கொத்தவரையில் மிகுதியாக உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது.
ஆஸ்துமா நோயை தணிக்கும் தன்மை கொண்ட கொத்தவரை இலை
கொத்தவரை இலைகள் ஆஸ்துமா நோயைத் தணிக்க வல்லவை. கொத்தவரையை கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் இதில் இடம்பெற்றுள்ள இரும்புச்சுத்து, சுண்ணாம்புச்சத்து ஆகியவை குழந்தையின் மூளை, எலும்பு, முதுகுத்தண்டு ஆகியவை சீராக வளர்ச்சி அடைய உதவுகிறது.மிககுறைந்த கலோரி உணவாக இருப்பதால், எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கொத்தவரங்காயை உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல பலன் அளிக்கும். நாங்கள் அறுவடை செய்யும் கொத்தரையை தஞ்சை நகரில் உள்ள மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக அனுப்புவது வழக்கம். மேலும் சிலர் டாடா ஏஸ் போன்ற வாகனங்களில் கிராமப்புறங்களுக்கு சென்று விற்பனை செய்கின்றனர். இப்படி நேரடியாக விற்பனை செய்வதால் எவ்வித இடைத்தரகும் இல்லாமல் லாபம் முழுமையாக கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.