(Source: ECI/ABP News/ABP Majha)
Thanjavur: விதை பரிசோதனை செய்வதன் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை
பாரம்பரிய நெல் ரகங்கள் மருத்துவ குணம் நிறைந்தவை. பயிரிடுவதற்கு முன்பு விதைப்பரிசோதனை செய்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், அவசியம் குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: பாரம்பரிய நெல் ரகங்கள் மருத்துவ குணம் நிறைந்தவை. பயிரிடுவதற்கு முன்பு விதைப்பரிசோதனை செய்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், அவசியம் குறித்தும் விவசாயிகளுக்கு தஞ்சாவூர் விதைப்பரிசோதனை அலுவலர் குப்புசாமி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நம் முன்னோர்கள் அன்றாட உணவில் பாரம்பரிய நெல் ரகங்களை பயன்படுத்தியதால் நீண்டகாலம் நோயின்றி ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். பாரம்பரிய நெல் ரகங்கள் அதிகளவில் கார்போஹைட்ரேட் புரோட்டீன், வைட்டமின் மற்றும் தாது உப்புக்களைக் கொண்டுள்ளது. இத்தகைய பாரம்பரிய நெல் ரகங்கள் அதிக மருத்துவ குணம் வாய்ந்தவை. அவற்றின் மருத்துவ குணங்கள் மற்றும் விதைப்பரிசோதனை முறைகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கருப்பு கவுனி ரகம் 130 நாட்கள் வயதுடையது. நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மாப்பிள்ளை சம்பா ரகம் 160 நாட்கள் வயதுடையது. நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. ஹீமோகுளோபின் உற்பத்தி செய்ய தூண்டுகிறது. வயிற்றுப்புண் சம்பந்தமான குறைபாடுகளை களைகிறது. பூங்கார் ரகம் 90 நாட்கள் வயதுடையது. உடலில் உள்ள கொழுப்பினை குறைக்கும் தன்மை கொண்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவினை அதிகப்படுத்தாமல் பார்த்துக்கொள்கிறது.
150 நாட்கள் வயதுடைய இந்த காட்டுயாணம் ரக நெல்லில் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால் வலிமையான எலும்புகள் பெற உதவுகிறது. 30 வயது முதல் பெண்களுக்கு ஏற்படும் குறைந்த எலும்பு அடர்த்தி குறைபாட்டை போக்கவல்லது. இதேபோல் கிச்சிலி சம்பா ரகம் 140 நாட்கள் வயதுடையது. சர்க்கரை குறைந்த அளவில் உள்ளது. உடல் மற்றும் தசைகளை பலப்படுத்துகின்றது. பளப்பளபான மேனிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
தூயமல்லி ரகம் 140 நாட்கள் வயதுடையது. நரம்பு மண்டலத்தை காக்கிறது. உடல் வளர்ச்சி மற்றும் மனவளர்ச்சியை மேம்படுத்துகிறது. உடலில் உள்ள உறுப்புகளின் இளமையை காக்கிறது. மேலும் சீரகசம்பா ரகம் 130 நாட்கள் வயதுடையது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்கவல்லது. இதயம் சீராக்க பயன்படுகிறது. செரிமான கோளாறுகளை சீராக்கும் தன்மை கொண்டது.
இதேபோல் கருடன் சம்பா ரக நெல் 130 நாட்கள் வயதுடையது. சிறுநீர் தொற்று உபாதைகளை சீர் செய்ய உதவும். ரத்தசோகை குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்றது. குடவாழை ரகம் 130 நாட்கள் வயதுடையது. தோல் வியாதிகள் நீங்கும். குடல் சுத்தமாகும் மற்றும் வயிற்று பிரச்சனைகள் குணமாக்கும். கருங்குறுவை ரகம் 125 நாட்கள் வயதுடையது. உடலை வலுவாக்கும். யானைக்கால் நோய்க்கான மருந்தாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தங்க சம்பா 165 நாட்கள் வயதுடையது. தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் முகம் பொலிவாகும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இதேபோன்று இலுப்பை பூ சம்பா, குல்லக்கார், நவரா, சொர்ணா மசூரி, குழியடிச்சான், சிவப்பு கவுணி, குருவிக்கார் போன்ற ரகங்களும் மிகவும் மருத்துவக்குணங்கள் கொண்டவை.
கொட்டார சம்பா, மிளகு சம்பா, கொத்தமல்லி சம்பா, காலா நமக், கைவரச்சம்பா, சேலம் சன்னா போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் உடல் ஆரோக்கியத்தை உயர்த்தும் தன்மை கொண்டவை.
நெல் பயிருக்கு குறைந்த பட்சம் 80 சதவீத முளைப்புத்திறன் இருக்க வேண்டும். ஈரப்பதம் அதிகபட்சமாக 13 சதவீதம் இருக்க வேண்டும். விதைகளின் தரத்தை அறிந்து கொள்ள விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள், விதை விற்பனையாளர்கள் தங்கள் வசம் உள்ள விதை ரகங்களில் 100 கிராம் என்ற அளவில் மாதிரிகள் எடுத்து விதை மாதிரிகளுடன் தங்கள் பெயர். இருப்பிட முகவரி மற்றும் பகுப்பாய்வு கட்டணமாக ரூ.80 ஐ தஞ்சாவூர் காட்டுத்தோட்டத்தில் இயங்கி வரும் விதைப்பரிசோதனை நிலையத்தில் செலுத்தி விதைகளின் தரத்தை பகுப்பாய்வு மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
இதனால் விதைக்கான செலவைக் குறைத்துக் கொள்வதுடன் அதிக மகசூலை பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்