தாமிரபரணி- கருமேணியாறு- நம்பியாறு இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் - விவசாயிகள்
தாமிரபரணி- கருமேணியாறு- நம்பியாறு இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள பணிகளும் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் முடிவடையும்.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி உதவி ஆட்சியர் கவுரவ் குமார், வேளாண்மை துறை இணை இயக்குநர் பழனிவேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசிய விவசாயிகள், மாவட்டத்தில் தற்காலிக தரிசு, நிரந்தர தரிசு குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும். சாத்தான்குளம் பகுதியில் கிணறுகளில் கூட தண்ணீர் இல்லை. குடிநீருக்கே கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடன்குடியில் கொப்பறை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். கொப்பறை கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். உடன்குடி பகுதியில் முருங்கைக்காய் பதப்படுத்தும் மற்றும் முருங்கை பவுடர் தயாரிக்கும் கூடம் அமைக்க வேண்டும். தாமிரபரணி- கருமேணியாறு- நம்பியாறு இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும். சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும். மருதூர் மேலக்கால்வாயை விரிவாக்கம் செய்ய வேண்டும். குரும்பூர் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் விவசாயிகள், வியாபாரிகள் முதலீடு செய்த பணம் மற்றும் நகைகள் விரைவாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மரபு நெல் விதைகளை பயிரிட விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்றனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் அதிகாரிகள் பேசினர். அப்போது, வேளாண்மைக்கு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களும் மிகவும் முக்கியமானதாகும். அடுத்த பருவத்துக்கு தேவையான பணிகள் இந்த காலத்தில் தான் செய்யப்படும். மாவட்ட நிர்வாகம் இந்த மூன்று மாதங்களும் வேளாண் சார்ந்த பணிகளிலேயே அதிக கவனம் செலுத்தும். விவசாயிகளின் தேவைகள், கோரிக்கைகள், பிரச்சினைகளை அதிகாரிகள் கண்டறிந்து உடனடியாக தீர்வு காண வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம் போன்றவை போதுமான அளவில் இருப்பில் உள்ளது. 2021- 22-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு திட்ட இழப்பீட்டு தொகை விடுபட்ட பயிர்களுக்கு ஓரிரு வாரங்களில் வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான குறுகிய கால கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. குளங்களில் வண்டல் மண், கரம்பை மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 11 பொதுப்பணித் துறை குளங்களிலும், 15 ஊரக வளர்ச்சித் துறை குளங்களிலும் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. விவசாயிகள் மனு அளித்தால் உடனடியாக அனுமதி அளிக்கப்படும். விவசாய பயன்பாட்டுக்கு மட்டுமே இந்த மண்ணை பயன்படுத்த வேண்டும். இந்த திட்டம் முறையாக நடைபெற விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாவட்டத்தில் சூறைக்காற்றால் சில பகுதிகளில் வாழை, பப்பாளி, முருங்கை பயிர்கள் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக கணக்கெடுக்கபட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உடன்குடியில் கொப்பறை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைப்பது தொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். தமிழக பட்ஜெட்டில் முருங்கை வேளாண்மை மண்டலம் அமைக்க அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 700 எக்டேரில் அங்கக முருங்கை சாகுபடி செய்யும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் முருங்கை பதப்படுத்தும் கூடம், முருங்கை விதையில் இருந்து பவுடர் தயாரிக்கும் ஆலை போன்றவை அமைக்கப்படும். இதற்கான இடம் உடன்குடி பகுதியில் விரைவில் தேர்வு செய்யப்படும். இது தொடர்பாக ரூ.10 கோடி மதிப்பிலான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
தாமிரபரணி- கருமேணியாறு- நம்பியாறு இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள பணிகளும் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் முடிவடையும். இந்த ஆண்டு பருவமழையின் போது இந்த வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரியும் பிரச்சினை அனைத்து பகுதிகளிலும் உள்ளது. இது தொடர்பாக கால்நடை வளர்போரை அழைத்து கூட்டம் நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். குரும்பூர் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் விவசாயிகளின் பணம் மற்றும் நகை விரைவாக கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன என்றனர்.