தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரத போராட்டம் - தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்
கரூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாநில ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அக்டோபர் 10ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தை நோக்கி 2000 விவசாயிகளோடு கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் காத்திருப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என ஈசன்முருகசாமி - வழக்கறிஞர் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் தெரிவித்தார்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் மாநில ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஈசன்முருகசாமி - வழக்கறிஞர் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர்,”இந்தியாவிலேயே விவசாயிகளுடைய வருமானம் தொடர்ச்சியாக இறங்கும் முகமாக இருந்து கொண்டிருக்கிறது. சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரம் விவசாயிகள் இன்று வரை தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் விலை வீழ்ச்சியினால் பெற்ற பயிர் கடனை கூட கட்ட முடியாத சூழ்நிலையாக உள்ளது. விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். அதற்கு சட்டப் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.
அரசு கொள்முதல் செய்து விநியோகிக்க வேண்டும், தமிழ்நாடு அரசு கல்லுக்கு தடையை நீக்க வேண்டும், மலேசிய பாமாயிலுக்கு பதிலாக தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய்கள் தமிழ்நாடு அரசு மூலமாக நியாய விலை கடைகளில் மானிய விலையில் விற்க வேண்டும், கொப்பரை தேங்காய் தேங்காய்க்கு மத்திய அரசு 150 ரூபாய் வழங்க வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்த ஒவ்வொரு விவசாயியும் தனிப்பட்ட முறையில் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த ஜூலை 5 முதல் 30 ஆம் தேதி வரை 18 மாவட்டங்களில்தொடர் காத்திருப்பு போராட்டத்தில் நடத்தினோம். அதன் பின்பு ஆகஸ்ட் 7ஆம் தேதி 22 மாவட்டங்களில் மாபெரும் மனு கொடுக்கும் இயக்கத்தினை நடத்தினோம். தமிழ்நாடு அரசுக்கு 6 கோரிக்கைகளும் மத்திய அரசுக்கு 4 கோரிக்களும் இந்த போராட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அக்டோபர் 10ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தை நோக்கி 2000 விவசாயிகளோடு கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் காத்திருப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.