தொழிலாளர்கள் உப்பளங்களில் வேலை செய்யும் வகையில் மிக குறைந்த எடையுள்ள காலணிகள் - அமைச்சர் மா.சு
தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு கிணங்க தற்போது புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்
உணவு பாதுகாப்பு துறை சார்பில் 7 மாவட்டங்களை சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வரவேற்றார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், விழிப்புரம் உள்ளிட்ட உப்பு உற்பத்தி நடைபெறும் 7 மாவட்டங்களை சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டு உப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை எடுத்துக் கூறினர். குறிப்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் கெடுபிடிகள் தொடர்பாக புகார் தெரிவித்தனர். இவைகளுக்கு பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, தமிழகத்தில் 7 மாவட்டங்களில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தின் மொத்த உப்பு உற்பத்தியில் 70 சதவீதம் தூத்துக்குடியில் உற்பத்தியாகிறது. இம்மாவட்டத்தில் ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்திலேயே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. அயோடின் கலந்த உப்பு தேவையா, இல்லையா என்ற விவாதமே தேவையில்லை. அயோடின் கலந்த உப்பு அவசியம் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு உலக சுகாதார மையம் அறிவுறுத்தியதன் பேரில் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.அயோடின் பற்றாக்குறையால் உலக அளவில் 200 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் 10 சதவீதம் பேருக்கு அயோடின் பற்றாக்குறை உள்ளது. அயோடின் பற்றாக்குறையால் பல்வேறு நோய்கள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அயோடின் கலந்த உப்பு அவசியம். அயோடின் விலை உயர்ந்துவிட்டதாக உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர். எனவே, மத்திய அரசிடம் பேசி சலுகை விலையில் அயோடினை பெற்றுத் தர முயற்சி மேற்கொள்ளப்படும்.
உப்பளங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் எடை அதிகமாக இருப்பதாக கூறி காலில் பூட்ஸ் அணிவதில்லை. எனவே, சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் எடை குறைவான கால் உறை கண்டுபிடித்து உப்பளத் தொழிலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உப்பு உற்பத்தியாளர்கள் மீது உணவு பாதுகாப்பு துறை சார்பில் போடப்பட்டுள்ள சிறு, சிறு வழக்குகளை விரைந்து முடிக்கவும், தகுதியுள்ள வழக்குகளை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உணவு பாதுகாப்பு துறை சார்பில் அபராதம் விதித்தல் போன்ற கெடுபிடிகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உப்பு தரம் தொடர்பான பிரச்சினை குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும்.
அயோடின் கலக்காத உப்பை 2 கிலோ பாக்கெட்டுகளில் தான் அடைத்து விற்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றி 1 கிலோ பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்க அனுமதிப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும். உப்பில் அயோடினை கலப்பதற்கான இயந்திரங்களை உருவாக்க உற்பத்தியாளர்கள் முயற்சிக்க வேண்டும். அரசு சார்பிலும் இது தொடர்பாக முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உப்பு உற்பத்தியாளர்கள், வியாபாரிகளின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்ரமணியன், ”உப்பு உற்பத்தியாளர்கள் வேண்டிய அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்து வருகிறது தொழிலாளர்கள் நலன் கருதி மழைக்கால நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதுபோல் தொழிலாளர்கள் உப்பளங்களில் வேலை செய்யும் வகையில் மிக குறைந்த எடையுள்ள காலணிகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் மேலும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மக்கள் நல்வாழ்வு துறை மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் சித்தமருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன இத்திட்டங்கள் அனைத்தும் விரைவாக முடிக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் கொண்டுவரவேண்டும் என்ற வகையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஒன்றிய அரசின் அனுமதி பெற்றவுடன் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் எனவும் மேலும் தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு கிணங்க தற்போது புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்” என தெரிவித்தார்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )