மேலும் அறிய
சிவகங்கை சிறையில் காய்கறி அறுவடை: மலிவு விலையில் தரமான காய்கறிகள்... பொதுமக்கள் ஆச்சரியம்!
ஒருபுறம் கைதிகள் திருந்தும் வாய்ப்பையும், மறுபுறம் பொதுமக்களுக்கு மலிவு விலையில் தரமான காய்கறிகள் கிடைக்கும் வாய்ப்பையும் உருவாக்கும் இந்த திட்டம் சமூகத்தில் நல்ல முன்னுதாரணமாக திகழ்கிறது.

வெண்டிக்காய் விற்பனை
Source : whatsapp
சிவகங்கை திறந்தவெளி சிறையில் தினசரி காய்கறி அறுவடை மலிவு விலையில் விற்பனை, பொதுமக்கள் ஆர்வம்!
திறந்தவெளி சிறைச்சாலை விவசாய உற்பத்தியில் முன்னுதாரணமாக திகழ்கிறது
சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோயில் அருகே, புரசடை உடைப்புப் பகுதியில் செயல்பட்டு வரும் திறந்தவெளி சிறைச்சாலை விவசாய உற்பத்தியில் முன்னுதாரணமாக திகழ்கிறது. சுமார் 97 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறைச்சாலையில், நல்ல நடத்தை கொண்ட கைதிகள் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 50க்கும் மேற்பட்ட கைதிகள் இங்கு தங்கி இருந்து இயற்கை முறையில் பயிரிடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இங்கு தினந்தோறும் சுமார் 30 கிலோ முதல் 50 கிலோ வரை காய்கறிகள் அறுவடை செய்து, பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று அறுவடை செய்யப்பட்ட காய்கறிகளில் கொத்தவரங்காய் – 40 கிலோ, வெண்டிக்காய் – 40 கிலோ, புடலங்காய் – 46 கிலோ, சுண்டக்காய் – 40 கிலோ உள்ளிட்டவை அடங்கும். மேலும் கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
சந்தை விலையை விட குறைந்த விலையில்
இந்த காய்கறிகள் காளையார் கோயில் இருந்து இளையான்குடி செல்லும் சாலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சந்தை விலையை விட குறைந்த விலையில் புதிய, தரமான காய்கறிகள் கிடைப்பதால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். திறந்தவெளி சிறைச்சாலையில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் ரசாயனமின்றி இயற்கை முறையில் பயிரிடப்படுவதால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் தினந்தோறும் விற்பனை சிறப்பாக நடைபெற்று வருகிறது. முக்கியமாக, கைதிகளின் வாழ்க்கையை மாற்றும் நோக்கில் செயல்படும் இந்த திறந்தவெளி சிறைச்சாலை, அவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குவதோடு, சுயநிறைவு அடைய உதவுகிறது. ஒருபுறம் கைதிகள் திருந்தும் வாய்ப்பையும், மறுபுறம் பொதுமக்களுக்கு மலிவு விலையில் தரமான காய்கறிகள் கிடைக்கும் வாய்ப்பையும் உருவாக்கும் இந்த திட்டம் சமூகத்தில் நல்ல முன்னுதாரணமாக திகழ்கிறது
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















