Pongal 2024: மாணவ, மாணவிகளுக்கு வாழைப்பழங்கள், கரும்பு கட்டுகள் வழங்கிய வடுகக்குடி வாழை விவசாயி
தஞ்சாவூர் பார்வை திறன் குறைபாடுடையோருக்கான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வடுகக்குடியை சேர்ந்த வாழை விவசாயி மதியழகன் பொங்கல் பண்டிகையை ஒட்டி வாழைப்பழங்கள் மற்றும் கரும்பு கட்டுகளை வழங்கினார்.
தஞ்சாவூர்: மேம்பாலம் அருகே செயல்பட்டு வரும் பார்வை திறன் குறைபாடுடையோருக்கான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வடுகக்குடியை சேர்ந்த வாழை விவசாயி மதியழகன் பொங்கல் பண்டிகையை ஒட்டி வாழைப்பழங்கள் மற்றும் கரும்பு கட்டுகளை வழங்கினார்.
தஞ்சை மாவட்டம் வடுகக்குடியை சேர்ந்தவர் மதியழகன். இவர் வாழை விவசாயம் செய்து வருகிறார். இவருடைய தோட்டத்தில் விளையும் வாழை இலை, வாழைப்பழம் போன்றவற்றை தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கிறார். விவசாயத்தை நேசித்து அர்ப்பணிப்புடன் செய்யும் மதியழகன் சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.
இவர் கொரோனா காலக்கட்டத்தில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்காக டன் கணக்கில் வாழைப்பழங்களை வழங்கினார். அதேபோல் ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம், பள்ளியில் பயிலும் மாணவர்கள் என்று பலருக்கும் தன் தோட்டத்தில் விளையும் வாழைப்பழங்களை வழங்கி வருகிறார்.
கடந்த மிக் ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தண்ணீரால் வீடுகள் சூழ்ந்து ஏராளமானவர்கள் தவித்தனர். இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தன்னால் இயன்ற உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணிய வாழை விவசாயி மதியழகன். பிறக்கும்போது என்ன கொண்டு வந்தோம். போகும்போது என்ன கொண்டு போக போகிறோம்.
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது தமிழர்களின் பண்பாடு என்ற வார்த்தை வரிகள் நினைவுக்கு வர னது தோட்டத்தில் இயற்கை முறையில் விளைந்த பூவன், ரஸ்தாளி, செவ்வாழை பழங்களை வழங்கலாம் என முடிவெடுத்து வாழைத்தார் மற்றும் வாழைப்பழங்களை வழங்கி சமூக சேவை செய்தார்.
அந்த வகையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி தஞ்சை மேம்பாலம் பகுதியில் செயல்பட்டு வரும் பார்வை குறைபாடுடையோருக்கான பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3 ஆயிரம் எண்ணிக்கையில் வாழைப்பழங்கள் மற்றும் கரும்புக்கட்டுகளை வழங்கினார். மேலும் தஞ்சை சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் உள்ளவர்களுக்காக 900 வாழைப்பழங்கள் மற்றும் கரும்பு கட்டுகள், கடுவெளி முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்காக 800 வாழைப்பழங்கள் ஆகியவற்றை தனது குடும்பத்தினருடன் நேரில் வந்து வழங்கினார்.
இதுகுறித்து வாழை விவசாயி மதியழகன் கூறுகையில், நாம் மட்டும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகிறோம். இதுபோன்று ஆதரவற்ற மாணவர்கள், முதியோர்களும் கொண்டாட வேண்டும் என்பதற்காக எனது தோட்டத்தில் விளைந்த வாழைப்பழங்களை அவர்களுக்காக எனது சொந்த செலவில் கொண்டு வந்து தருகிறேன். இதை கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறேன். இது போன்று உதவிகள் செய்வதால் மனதிற்கும் நிறைவாக உள்ளது என்றார்.