கிடுகிடுவென்று நடக்கும் குறுவை சாகுபடி பணிகள்... ஆறுகளில் முழு கொள்ளளவு தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
தஞ்சை மாவட்டத்தில் 95 ஆயிரம் ஏக்கரை தாண்டி சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் சாகுபடி 1 லட்சம் ஏக்கரை தாண்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சாவூர்: மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் வெண்ணாறு, கல்லணைக்கால்வாயில் முழு கொள்ளளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாகுபடி பணிகளிலும் மும்முரம் காட்டி வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கர்நாடகம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்திலிருந்து கபினி, கே.ஆர்.எஸ். அணைகளிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையும் அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், அணைக்கு வரும் உபரி நீரை அப்படியே திறந்துவிடுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
முதலில் 6 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. கடந்த இருநாட்களாக மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் டெல்டா பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கல்லணைக்கு காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், 9,370 கன அடி கொள்ளளவு கொண்ட வெண்ணாற்றில் 9,300 கன அடியும், 3,380 கன அடி கொண்ட கல்லணைக் கால்வாயில் 3,000 கன அடியும் என முழு கொள்ளளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதே போல் 10,691 கன அடி கொண்ட காவிரியில் 9300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், கொள்ளிடத்தில் 4700 கன அடி தண்ணீரும், கோவிலடி வாய்க்கால், பிள்ளை வாய்க்காலில் தலா 5 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வெண்ணாற்றில் முழு கொள்ளளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கடைமடைப் பகுதியான திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள வாய்க்கால், ஏரி குளங்களுக்கும், கல்லணைக் கால்வாயில் முழு கொள்ளளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள், ஏரிகள், குளங்களில் நீரை நிரப்பி வைக்க முடியும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணிகளில் இன்னும் மும்முரம் காட்டி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி 1 லட்சத்து 96 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான விதை நெல், உரம் மற்றும் வேளாண் இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது வரை தஞ்சை மாவட்டத்தில் 95 ஆயிரம் ஏக்கரை தாண்டி சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் சாகுபடி 1 லட்சம் ஏக்கரை தாண்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை மாதம் 31ம் தேதி வரை குறுவை சாகுபடி நடைபெறும் என்பதால் தஞ்சை மாவட்டத்திற்கு இலக்கான 1லட்சத்து 96 ஆயிரம் ஏக்கரை தாண்டி சாகுபடி பணிகள் நடைபெறும் என கூறப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடிக்காக பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நாற்று விடுதல் பணிகளிலும், பலர் பாய் நாற்றங்கால் முறையிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சாகுபடி பணிகள் மும்முரம் அடைந்துள்ளதால் தொடர்ந்து வேலை கிடைக்கும் என்பதால் விவசாயத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





















