மயிலாடுதுறை விவசாயிகளுக்கு குட் நியூஸ்! நெல் கொள்முதல் நிலையங்களில் புதிய கருவிகள்: இனி நியாயமான விலை உறுதி!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு புதிய நெல் தரப் பகுப்பாய்வு கருவிகள் வழங்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மண்டலத்தில் உள்ள 140 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, நெல்லின் தரத்தை ஆய்வு செய்வதற்கான அதிநவீன கருவிகள் வழங்கப்பட்டன. இந்த புதிய உபகரணங்கள், விவசாயிகளின் நெல்லுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதோடு, கொள்முதல் நடைமுறைகளை மேலும் துல்லியமாகவும், வெளிப்படையாகவும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி டெல்டாவின் முக்கியத்துவம்
மயிலாடுதுறை மாவட்டம், காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியில் அமைந்துள்ளது. விவசாயம் இங்குள்ள மக்களின் பிரதான வாழ்வாதாரமாக உள்ளது. சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்படும் இப்பகுதியில், காவிரி நீர் மற்றும் நிலத்தடி நீர் மூலம் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. முப்போகம் விளைந்த இந்தப் பகுதி, தற்போது பல்வேறு காரணங்களால் இருபோக விளைச்சலை நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் நெல்மணிகள், பெரும்பாலும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் வாங்கப்படுகிறது.
புதிய கொள்முதல் பருவம் மற்றும் விலை உயர்வு
தமிழ்நாட்டில் காரீப் கொள்முதல் பருவம் (கே.எம்.எஸ். 2025-2026) செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்தப் பருவத்தில், நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,545 மற்றும் பொது ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட விலை, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து 140 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, நீண்ட காலமாக வறட்சியால் பாதிக்கப்பட்டு வந்த விவசாயிகளுக்கு ஒரு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.
தரப் பகுப்பாய்வு கருவிகள் வழங்கல்
நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லின் தரத்தை துல்லியமாக சோதிப்பதற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மயிலாடுதுறை மண்டலம் சார்பில் புதிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை சித்தர்காடு நவீன அரிசி ஆலையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதுநிலை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) செந்தில், இந்தக் கருவிகளை வழங்கினார். இந்தக் கருவி தொகுப்பில், நெல்லின் ஈரப்பதத்தை கண்டறிய உதவும் குத்தூசி, மாதிரி எடுப்பதற்கு பயன்படும் மாதிரி தட்டு, நெல்லின் உமியை பிரித்து தானியத்தின் தரத்தை சோதிக்க உதவும் நெல் உமி பிரிப்பான், நெல்லின் எடையை துல்லியமாக அளக்க கையடக்க மின்னணு தராசு மற்றும் மாதிரி எடுப்பான் ஆகியவை அடங்கும். இந்தக் கருவிகள், நெல் கொள்முதலில் உள்ள மனித பிழைகளை குறைத்து, தரக்கட்டுப்பாட்டை மேலும் மேம்படுத்தும்.
வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை
இதுகுறித்து பேசிய முதுநிலை மேலாளர் செந்தில், “விவசாயிகள் கொண்டு வரும் நெல்லின் தரம் குறித்து எந்தவித சந்தேகமும் ஏற்படாமல், வெளிப்படையாக கொள்முதல் செய்வதற்காக இந்த கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகள் முன்னிலையிலேயே நெல்லின் ஈரப்பதம் மற்றும் பிற தரக் காரணிகளை சோதித்து, நியாயமான விலை உறுதி செய்யப்படும்” என்றார். இந்த நிகழ்ச்சியின் போது, மண்டல தரக்கட்டுப்பாடு அலுவலர்களான ஆபிரகாம் லூதர் கிங், செல்வமணி, குமணன், பசுமை மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.
விவசாயிகளின் எதிர்பார்ப்பு
புதிய கருவிகள் வழங்கப்பட்டது விவசாயிகளிடையே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. “சில நேரங்களில், கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் அதிகம் இருப்பதாகக் கூறி, நெல் நிராகரிக்கப்படும். இந்தக் கருவிகள் மூலம், நாங்களே நேரில் தரத்தை சரிபார்த்து, நெல்லுக்கு உரிய விலை பெறுவதை உறுதி செய்ய முடியும்” என்று ஒரு விவசாயி தெரிவித்தார். இந்த நடவடிக்கை, கொள்முதல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதோடு, அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நல்லுறவை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கருவிகள், மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையையும், நிலையான வருவாயையும் தரும் என்பதில் ஐயமில்லை.






















