நெல் பயிரை தாக்கும் நோய்களுக்கு தீர்வு காண மேலாண்மை முறை... விவசாயிகளுக்கு ஆலோசனை
Thanjavur: பயிர்களை தாக்கும் நோய்களுக்கு தீர்வு காண மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டும் வேளாண் துறை ஆலோசனை வழங்கியது.
தஞ்சாவூர்: நெல் பயிரைத் தாக்கும் நோய்களுக்கு தீர்வு காண மேலாண்மை முறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனைகள் வழங்கி உள்ளது.
தமிழகத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி பயிர்கள் தூர்கட்டும் பருவம், சூழ் கட்டும் தருணம், பால் பிடிக்கும் பருவம் வரை காணப்படுகிறது. பனிக்காலம் என்பதால் நோய் தோன்றியவுடன் பரவும் வேகம் பல மடங்காக அதிகரிக்கும். எனவே பயிரை கண்காணித்து உரிய மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வேளாண் துறை விவசாயிகளுக்கு யோசனை அளித்துள்ளது.
தற்போது நிலவும் சூழ்நிலையானது நோய் தோன்றி வேகமாக பரவும் சாதகமான நிலையில் அதனை கட்டுப்படுத்துவது அவசியம். நெல் பயிரில் குலை நோய், பாக்டீரியல் இலைக்கருகல் நோய், இலைப்புள்ளி நோய் இலையுறை கருகல் நோய், கதிர் உறை அழுகல் நோய், நெல் பழம், நெல் மணிகள் நிறம் மாறும் நோய் ஆகியவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து உற்பத்தியை உயர்த்துவதுதான் ஒவ்வொருவருடைய ஒட்டுமொத்த நோக்கமாக இருக்க வேண்டும்'
குலை நோய் அறிகுறிகள்
ஆரம்பத்தில் சிறு புள்ளிகளாக தோன்றி பின்னர் வெண்மை நிறத்தில் இருந்து சாம்பல் நிறமுடைய மையப் பகுதியுடன் காய்ந்த பழுப்பு நிற ஓரங்களுடன் கண் வடிவில் காணப்படும். பல புள்ளிகள் இணைந்து ஒழுங்கற்ற திட்டுக்களாக இலைகளின் மேல் காணப்படும். நோய் தீவிரமாகும் போது பயிர்கள் முழுவதும் எரிந்தது போல காணப்படும்.
இந்நோய் இலை, இலையின் உறை, தண்டு பகுதியில் உள்ள கணுக்கள் மீதும் காணப்படும். அதிக அளவு தழைச் சத்தான யூரியா இடுவதன் மூலமும், மேகம் சூழ்ந்த வான மூட்டம், விட்டு விட்டு தூறல், காற்றில் அதிக ஈரப்பதம், குறைவான இரவு நேர வெப்பநிலை இந்நோய் பரவ ஏற்ற நிலைகளாகும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
நாற்றங்காலில் விதைக்கும் முன்பே விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் அல்லது பேசிஸ்லஸ் சப்டீலிஸ் 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். யூரியாவை பரிந்துரைக்கு அதிகமாக இடக்கூடாது. நடவு வயலில் நோய் தோன்றும் போது 15 நாட்கள் இடைவெளியில் ஏக்கருக்கு ட்ரைசைக்லோசோல் 200 கிராம் அல்லது கார்பண்டசிம் 200 கிராம் அல்லது மெட்டாமினோஸ்ட்ரோபின் 20 மில்லி தெளிப்பதன் மூலம் குலை நோயை கட்டுப்படுத்தலாம்.
பாக்டீரியல் இலைகள் நோய் அறிகுறிகள்
ஈர கசிவுடன் கூடிய மஞ்சள் புள்ளிகள் இலையின் நுனி மற்றும் ஓரங்களில் தோன்றி பின் நீளவாக்கில் பெரிதாகி இலையின் கீழ்நோக்கி ஒழுங்கற்ற மஞ்சள் நிறத்தில் பரவும். இந்நோய் தீவிரமாகும் போது மஞ்சள் நிறம் பழுப்பாக்கி கருகி காய்ந்து விடும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
நோய் தாக்கப்பட்ட வயல்களில் இருந்து நீர் மற்ற வயல்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் ப்ளீச்சிங் பவுடர் உடன் ஒரு லிட்டர் தண்ணீருடன் 20 கிராம் சிங்சல்பேட் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ பிளீச்சிங் பவுடரை பாசன நீருடன் கலக்க வேண்டும். கதிர் வந்த பின் யூரியா உரமிடுவதை தவிர்க்க வேண்டும் யூரியா, ஜிப்சம், வேப்பம் புண்ணாக்கு 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து மேலுரமாக இட வேண்டும். 20 சத சாணக்கரைசல் இந்நோயினை முழுமையாக கட்டுப்படுத்தும். 15 நாள் இடைவெளியில் மறுமுறையும் தெளிக்கலாம்.
நெல் பழம் நோய் அறிகுறிகள்
பொதுவாக கதிர் இலை வெளிவரும் பருவம், 50 சத பூக்கும் பருவம் மற்றும் முதிர்ச்சி நிலை வரை நெல்மணிகளை தாக்கும். தாக்கப்பட்ட நெல் மணிகளின் மேல் மஞ்சள் நிற பந்து போல் பூஞ்சானம் காணப்படும். பந்து பெரிதாகி பச்சை நிறமாக மாறி, பின்பு கருப்பு போர்வை விரித்தது போல் தோன்றும். இந்நோய் டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிகம் காணப்படும் இது காற்றில் எளிதில் பரவும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
இந்நோய் வந்தபின் மருந்து தெளித்து கட்டுப்படுத்த முடியாது. எனவே நடவு வயலில் கதிர்வெளிவரும் பருவம் மற்றும் பால் பிடிக்கும் பருவத்தில் ஏக்கருக்கு காப்பர் ஹைட்ராக்சைடு 50 கிராம் அல்லது ப்ரொபிகோனசோல் 200 மில்லி வீதம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
இதையும் படிங்க: கார்த்திகேயன் தேவயானை திருமணம் நடக்குமா? அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்புடன் சிவசக்தி திருவிளையாடல்
நெல்மணிகள் நிறம் மாறும் நோய் அறிகுறிகள்
இந்நோய் பல்வேறு பூஞ்சானங்களின் கூட்டு தாக்குதலினால் உண்டாகிறது. நோய் பாதித்த மணிகள் மேல் கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதனால் நெல்மணிகளின் வளர்ச்சி தடைப்படுவதோடு நெல் மணிகள் சிறுத்தும், சுருங்கியும் காணப்படும். பதராகவும் மாறிவிடும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
விதை நேர்த்தி செய்வது அவசியம். இந்நோயை கட்டுப்படுத்த ஐம்பது சத பூக்கும் தருணத்திலும் அதன் பின் 15 நாட்கள் கழித்தும் ஏக்கருக்கு கார்பண்டசிம், திரம், மேங்கோசெப் 1:1 என்கிற விகிதத்தில் 400 கிராம் வீதம் தெளித்து கட்டுப்படுத்தலாம். பொதுவாக தழைச்சத்தான யூரியாவை பரிந்துரைப்படி பிரித்து இடுவது, விதை நேர்த்தி செய்வதன் மூலம் நோயினை கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும். தேவைப்பட்டால் உரிய பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து நோய் வராமல் தடுத்து உற்பத்தியை உயர்த்தி உன்னத நிலையில் உயர்ந்திடலாம்.