விஞ்ஞான வழி துணையுடன் மரபு சார்ந்த விதைகளை பயிரிட வேண்டும் - கரூர் மாவட்ட ஆட்சியர்
மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் பாரம்பரிய மரபணுக்களின் ரகங்களை கண்டறிவது தொடர்பாக நடைபெற்ற கண்காட்சியிணை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
கரூர் மாவட்டம், பாரம்பரிய இயற்கை விவசாயத்துடன், நவீன விஞ்ஞானத்தையும் சேர்த்து கால சூழ்நிலைக்கு
ஏற்றவாறு பயிர் செய்து, உணவு பாதுகாப்பையும் அளித்து, விவசாயிகளின் வளங்களையும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.
கரூர் தனியார் திருமண மண்டபத்தில் வேளாண் - உழவர் நலத்துறை மூலமாக உயர்தர உள்ளூர் ரகங்களை கண்டறிந்து அவற்றை பிரபலப்படுத்துவதற்கும், வேளாண் ஆராய்ச்சியாளர்கள் அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு சிறந்த ரகங்களை உருவாக்கும் வகையில், தேவையான அடிப்படை மரபணுக்களின் பாரம்பரிய ரகங்களை கண்டறிவது தொடர்பாக நடைபெற்ற கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது, "தமிழக அரசு பாரம்பரிய இயற்கை விவசாயத்தை ஊக்கிவிப்பதிலும், பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் பணியிலும் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி என்பது ஒரு சிறப்பான கண்காட்சி ஆகும். இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்த வேளாண்மை துறைக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மரபுசார் என்றாலே காலங்காலமாக நமது பூமியில் விளைவித்த பயிர்களையே பயிரிட வைக்க வேண்டும் என்பது ஒரு தரப்பின் உடைய பார்வையாகும். இன்னொரு தரப்பினர் உலகம் வளர்ந்து கொண்டு இருக்கும் அளவிற்கு நவீன அளவில் தொழில்நுட்பத்தை இணைத்து பயரிட வேண்டும் என்று பார்க்கின்றனர். மரபுசார் என்பது பாரம்பரிய விதைகளை பாதுகாத்து, பயிர் செய்வது நம்முடைய கடமையாகும். ஆனால், அதே நேரத்தில் மரபுசார் பயிர்களை விஞ்ஞான முறையில் குறைந்த காலத்தில் பயிர் செய்ய முன்வர வேண்டும். அடிப்படை மரபு வழியில் மாற்றங்கள் இல்லாமல் குறைந்த செலவில், குறைந்த காலத்தில் நவீன முறையில் உற்பத்தி செய்ய முன்வர வேண்டும்.
மரபு வழியில் மட்டும் சென்றால் பல்வேறு சவால்களையும், காலச் சூழ்நிலைகளால் ஏற்படும் பாதிப்பையும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால், மரபு வழியில் செல்பவர்களும் விஞ்ஞான வழியில் செல்பவர்களும் இணைந்து கால சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் விதைகளை உற்பத்தி செய்து பயிரிட வேண்டும். வேளாண் பெருமக்கள் வளமுடன் வாழ்வதற்காக விஞ்ஞான வழி துணையுடன் மரபு சார்ந்த விதைகளை பயிரிட வேண்டும். மரபை சார்ந்து நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் அதற்காகத்தான் இந்த கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளின் நோக்கமும் அதுதான். எனவே வரும் காலங்களில் வேளாண் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் மரபுசார் விதைகளை குறுகிய காலத்தில் விஞ்ஞானத்தையும் பயன்படுத்தி உற்பத்தி செய்து உணவு பாதுகாப்பு ஏற்படுத்துவதுடன், தங்கள் வளங்களையும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய கருங்குருவை, கருப்பு கவுனி, காட்டு யானம், கிச்சிலி சம்பா, குளியடிச்சான், குள்ளக்கார், மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி உள்ளிட்ட நெல் வகைகள், பஞ்ச காவியம், பட்டு வளர்ச்சி, நாட்டு காய்கறி விதைகள், செக்கு எண்ணெய்கள், உள்ளுரில் கிடைக்கும் இடுபொருட்களை கொண்டு தயாரிக்கும் வேளாண் கருவிகள், சேங்கல் துவரை, சிறுதானியங்கள், செறிவூட்ட தென்னை நார், தொழு உரம், முரங்கை தேன் உள்ளிட்டவைகளை வகைப்படுத்தி 25-க்கும் மேற்பட்ட அரங்குகள் கண்காட்சிக்காக அமைக்கப்பட்டு இருந்தது.இந்நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் திரு. சிவசுப்பிரமணியன், அரசு வேளாண்மை கல்லூரி முதல்வர் முனைவர்.பாலசுப்பிரமணியன், வேளாண் கல்லூரி பேராசிரியர் முனைவர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முனைவர் உமாபதி, வேளாண்மை துணை இயக்குனர் திருமதி கலைச்செல்வி, வட்டாட்சியர் திரு.சிவக்குமார் மற்றும் விவசாயி பெருமக்கள், அரசு வேளாண் கல்லூரி மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.