கொள்முதல் செய்யப்பட்ட நெல்! 25 நாட்களாக பணம் வரவில்லை என விவசாயிகள் வேதனை ..!
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் NCCF சார்பில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு விவசாயிகளுக்கு பணம் செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விவசாயிகள் நெல் பயிரிடுவது பிரதான தொழிலாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் , செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டத்தில் சம்பா, நவரை, சொர்ணவாரி பருவங்களில் அதிக அளவு நெல் பயிர்கள் பயிரிடுவது வழக்கம். அந்தவகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுகுன்றம் ஆகிய பகுதிகளில் அதிக அளவு விவசாயம் செய்யப்படுகிறது. இதே போன்று காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை காஞ்சிபுரம் ,வாலாஜாபாத் , உத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. பெரும்பாலும் இந்த இடங்களில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
நேரடி கொள்முதல் மையங்கள்
அதேபோன்று நெல் அறுவடை செய்வதற்கு முன்பு மத்திய மற்றும் மாநில அரசுகள் நெல் கொள்முதல் செய்வதற்கான அனுமதி வழங்கப்படும். அதன் பிறகு வேளாண் மற்றும் வருவாய்த் துறையினர் கிராமங்களில் ஆய்வு செய்து அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்வது வழக்கமான நடைமுறையாக உள்ளது. எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு பயிர் செய்யப்படுகிறதோ, அதற்கு ஏற்றார் போல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.
வங்கி கணக்கில் விவசாயிகள் பணம்
அதன் பின் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பிப்பார். இதனை அடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கொள்முதல் நிலையங்களில் தற்காலிக ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து அரசு விலைக்கு நெல் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு விவசாயிகளிடமிருந்து, கொள்முதல் செய்யப்படும் நெல் பாதுகாப்பாக வைக்கப்படும். இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுவது வழக்கம்.
நெல் கொள்முதல் நிலைகள் விவசாயிகளுக்கு மிக முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது. காரணம் இங்கு அரசு சார்பில் நெல் கொள்முதல் செய்யப்படுவதால் உரிய தொகை சரியான நேரத்தில் கிடைத்து விடும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. உதாரணத்திற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 2021 - 2022 ஆண்டில் 363 கோடி தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று அதற்கு அடுத்த ஆண்டு 2022- 23 , 312 கோடி இந்த ஆண்டு தற்போது வரை 110 கோடி ரூபாயும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பருவத்தில் மே மாதம் வரை கொள்முதல் நிலையம் செயல்படும் என அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு வகை நெல் கொள்முதல் நிலையங்கள்
தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் சார்பாகவும் அதே போன்று தேசிய கூட்டுறவு வேளாண்மை கூட்டுறவு இணையும் வாயிலாகவும் ( NCCF ) நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்படும் நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யும் நெல்களுக்கு உரிய தொகை 3 நாட்களுக்குள் வந்து விடுவதாகவும், ஆனால் NCCF மூலம், இந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 35, நெல் கொள்முதல் நிலையங்கள் , அதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 28 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. அவ்வாறு கடந்த ஒன்றாம் ( 01-02-2024) தேதி செய்யப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்திற்கு கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு மேலாகியும், இதுவரை விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்கப்படாமல் இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.அதே போன்று இதுவரை கொள்முதல் செய்யப்பட்ட நெல் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லாமல், கொள்முதல் செய்யப்பட்ட இடங்களில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் கோடை மழை வந்தால் நெல் சேதம் அடைய வாய்ப்பு இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் k.நேருவிடம் பேசினோம், இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் NCCF மூலம் 35 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிக்கு உரிய தொகை 25 நாட்களுக்கு மேலாக வழங்கவில்லை. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறோம். விவசாயிகள் குடும்பத்தில் திருமணம், சுப நிகழ்ச்சிகள், அவர்கள் பயிர் செய்வதற்காக வாங்கிய கடன்கள் ஆகியவற்றை திருப்பிக் கொடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். எனவே இது குறித்து உடனடியாக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நம்மிடம் கோரிக்கை வைத்தார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது : 53 கோடி ரூபாய் வரை NCCF நெல் கொள்முதல் நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது விரைவில் அவர்களுக்கான தொகை வங்கியில் வரவு வைக்கப்படும் என தெரிவித்தனர்.