Moisture Meter: தானியங்கள், எண்ணெய் வித்துக்களின் ஈரப்பதத்தை அளவிட புதிய மீட்டர்
ஈரப்பதமாணிகளைப் பயன்படுத்துவதன் மூலம் உணவுகள் கெட்டுப்போவதை குறைக்கவும், சேமிப்பிற்கான குறைந்தபட்ச சூழல்களை உருவாக்கவும் முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகளில் ஈரப்பதத்தை அளவிடும், ஈரப்பதமாணிக்கான வரைவு விதிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை ஆலோசனை நடத்தியது. மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி கரே தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
கருத்து கேட்பு:
ஈரப்பதமாணிகளை, சட்டப்பூர்வ எடை அளவீடு விதிமுறைகள் பட்டியலில் சேர்த்து தரப்படுத்தி அவற்றின் துல்லியத்தை முறைப்படுத்தவும், வேளாண் வர்த்தக நடைமுறைகளில் நேர்மை மற்றும் வெளிப்படை தன்மையை அதிகரிக்கச் செய்யவும் இத்தகைய மீட்டர்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான வரைவு விதிமுறைகள் 2024 மே 30-ம் தேதி வெளியிடப்பட்டு பொதுமக்களின் கருத்து கோரப்பட்டது. இதற்கான அவகாசம் ஜூன் மாத இறுதியுடன் நிறைவடைந்ததையடுத்து, பெறப்பட்ட அனைத்து கருத்துக்கள் மீதும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதுபோன்று ஈரப்பதமாணிகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பொருட்களை, விவசாயிகள் மற்றும் வணிகர்கள் நல்லமுறையில் பாதுகாத்து, அவை கெட்டுப்போவதை குறைக்கவும், சேமிப்பு மற்றும் சரக்கு எடுத்துச் செல்வதற்கான குறைபட்ச சூழல்களை உருவாக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை:
ஈரப்பதமாணிகளைப் போன்று எரிவாயு மீட்டர்கள், எரிசக்தி மீட்டர்கள், வாகனங்களின் வேகத்தை அளவிடுவதற்கான ரேடார் சாதனம் மற்றும் மூச்சுப்பரிசோதனை கருவிகள் (ப்ரீத் அனலைசர்) போன்ற கருவிகள் பயன்பாடு குறித்தும் பொதுமக்கள், உற்பத்தியாளர்கள், பயனாளர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் கருத்துகளை கோரவும், நுகர்வோர் விவகாரங்கள் துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.