கால்நடை வளர்ப்பவர்களே... ஆட்டோ மூலம் விவசாயிகள் அறிவுறுத்தியது என்ன?
தஞ்சாவூர் அருகே சீராளூர், சக்கரசம்மந்தம், பிள்ளையார்நத்தம், தென்னங்குடி, பனவெளி கிராம பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர்: ஆடுகள், மாடுகளை மேய்ச்சலுக்கு விடுபவர்கள் கவனத்துடன் இருக்கணும். நெற்பயிர்களில் மேய்ச்சலுக்கு விடாதீர்கள் என்று தஞ்சாவூர் அருகே ஆட்டோவில் கால்நடை வளர்ப்போருக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி விவசாயிகள் அறிவிப்பு செய்ததுதான் தற்போது பாராட்டுக்களை குவித்து வருகிறது.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி சம்பா, செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஜூன் 15ம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் குறுவை சாகுபடியை மும்முரமாக தொடங்கி உள்ளனர். வயல்களை உழுது தயார் படுத்தி நாற்று விடுதல், பாய் நாற்றாங்கால் நடுதல் போன்ற பல்வேறு பணிகளில் தீவிரம் அடைந்துள்ளனர்.
அந்த வகையில் தஞ்சாவூர் அருகே சீராளூர், சக்கரசம்மந்தம், பிள்ளையார்நத்தம், தென்னங்குடி, பனவெளி கிராம பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் சாகுபடி செய்யாத பகுதிகளில் கால்நடை வளர்ப்பவர்கள் தங்களின் மாடு, ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர்.
அப்போது மாடு, ஆடுகள் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களை மேய்ந்து விடுகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்த விவசாயிகள் நஷ்டம் ஏற்பட்டு வேதனையடைந்தனர். இதையடுத்து, கால்நடை வளர்ப்போர்களுக்கு வயல்வெளிகளில் கால்நடைகளை விட வேண்டாம் என்கிற வகையில், ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் விவசாயிகள் பிரசாரம் மேற்கொண்டனர். இது தற்போது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
சீராளூர், சக்கரசம்மந்தம், பிள்ளையார்நத்தம், தென்னங்குடி, பனைவெளி கிராமங்கள் முழுவதும், கால்நடைகளை வயலில் விட்டால் மாடு ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம், ஆடு ஒன்றுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். அந்த அபராத தொகையை அந்தந்த கிராமத்தில் அரசு திட்ட பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும் என அறிவுறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளம்பரம் செய்தனர். இது மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. பல இடையூறுகளை சந்தித்து சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு தற்போது கால்நடைகளால் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் மீண்டும் நாற்றுகள் நடும் நிலை உருவாகி உள்ளது. இதை தடுக்கும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இதுபோன்று விவசாயிகள் ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலம் சீராளுர் மற்றும் சுற்றுப்பகுதிகள் முழுவதும் விளம்பரம் செய்து அறிவுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், கடந்த காலங்களில் மேய்ச்சல் நிலம் அதிகளவில் இருந்தன. அங்கு கால்நடை வளர்ப்போர் மாடு, ஆடுகளை மேய்த்து வந்தனர். தற்போது பல இடங்களில் மேய்ச்சல் நிலங்களில் அரசு சார்ந்த கட்டிடங்கள் ஆக்கிரமிப்புகள் போன்ற காரணங்கள் மேய்ச்சல் நிலங்கள் குறைந்து விட்டன. இதனால், கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை பொதுவெளியில் மேய்ச்சலுக்கு விடும்போது, அவை அருகில் உள்ள நெற்பயிரையும் சேர்த்து மேய்ந்து விடுகிறது. நாற்று விட்டு தற்போதுதான் வளர்ந்து வரும் நிலையில் இப்படி ஆடுகள், மாடுகளால்
இதனால் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆட்டோவில் விழிப்புணர்வாக பிரசாரம் செய்தோம். இந்த பிரசாரத்துக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.





















