தஞ்சை மாவட்டத்தில் இலக்கை விஞ்சி நடந்துள்ள குறுவை சாகுபடி
தஞ்சை மாவட்டத்தில் இலக்கை விஞ்சி நடந்துள்ள குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ள வேளாண் அதிகாரி
முப்போகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி மும்முரமாக நடந்து வருகிறது. பச்சை பாய் விரித்தது போன்று பரந்து விரிந்துள்ள சாகுபடி பயிர்கள் கண்ணை நிரப்புகின்றன. கொஞ்சி விளையாடும் நாற்றுக்களின் மத்தியில் புகுந்து வரும் காற்று தீண்டும் போது மனம் சிலிர்க்கும். எப்போதும், எங்கும் மறக்க முடியாத நினைவுகளை கொண்ட சாகுபடிதான் நெல். விவசாயிகளின் உயிர் மூச்சு.
நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் இந்தாண்டு குறுவைக்கான சாகுபடி இலக்கான 43 ஆயிரம் ஹெக்டேர் என்ற அளவை மிஞ்சி சுமார் 70 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் குறுவை சாகுபடி நிறைவடைந்துள்ளது. இலக்கை மிஞ்சி இந்தாண்டு சாகுபடி பணிகள் நடந்துள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் அய்யம்பெருமாள் விவசாயிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் நடவுப்பணிகள் முடிக்காமல் உள்ளனர். இனியும் காலம் தாழ்த்தாமல் உடன் நடவுப்பணிகளை முடிக்க வேண்டும். 25 நாட்கள் ஆன நாற்றை நட வேண்டும். தற்போது அவ்வபோது பெய்து வரும் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியிருந்தால் அதனை உடன் வடித்து விட வேண்டும். இயந்திரங்கள் வாயிலாக நாற்று நடவு செய்திருந்தால் கோனோவீடரை கொண்டு நடவு நட்ட 10 நாட்களில் களைகளை எடுக்க வேண்டும். இதனால் பயிர்கள் செழித்து வளர வழி ஏற்படும்.
குறுவை சாகுபடி செய்துள்ள வயல் வரப்புகளில் உளுந்து, துவரை போன்ற வரப்பு பயிராக சாகுபடி செய்யலாம். இதில் பூக்கும் மஞ்சள் நிற பூக்கள் தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும் நன்மை பூச்சிகளை கவர்ந்து இழுக்கும். இவ்வாறு கவரப்பட்டு வரும் நன்மை பூச்சிகளால் பயிர்களை பாதிக்கும் தீமைப்பூச்சிகள் ஒழியும். மேலும் விவசாயிகளுக்கு இந்த வரப்பு பயிர்களால் கூடுதல் வருமானமும் கிடைக்கும்.
நன்கு செழுமையான உள்ள பயிர்களுக்கு தழைச்சத்து உரத்தை தேவையில்லாமல் இடக்கூடாது. இதனால் பயிர்களின் இயல்பான வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். வயல்களில் எங்காவது வெளிர் பச்சை நிறம் தென்பட்டால் தழைச்சத்து உரத்தை இடலாம். நாற்று நட்ட வயல்களில் ஏக்கருக்கு 5 கிலோ நெல் நுண் சத்து உரத்தை தெளிக்கலாம். இந்த நெல் நுண் சத்து உரம் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் மானிய விலையில் கிடைக்கிறது. எனவே இதில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
தற்போது அவ்வபோது மழை பெய்கிறது. இதனால் பூச்சிகள் தாக்குதல் குறித்து பயிர்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். தேவை என்றால் மட்டுமே பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்த வேண்டும். தற்போது மாவட்டம் முழுவதும் நாற்றுகள் செழுமையாக வளர்ந்துள்ள நிலையில் வயல்களில் தென்படும் களைகளை பறித்தால் மட்டும் போதுமானதாகும். பூச்சி தாக்குதல் எங்கும் தென்படவில்லை. இருப்பினும் வயல் பகுதிகளை நன்கு கவனித்து செயல்பட விவசாயிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் விபரங்கள், உரம் தெளிப்பு குறித்த சந்தேகங்களுக்கு வேளாண் துறை அலுவலகங்களை அணுகி விபரங்கள் கேட்டறிந்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்