கழனியை நிரப்பும் காவிரி டெல்டாவில் சம்பா சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற என்ன செய்யலாம்?
கழனியை நிரப்பும் காவிரி டெல்டாவில் சம்பா சாகுபடியில் கூடுதல் மகசூலை பெற என்ன செய்யலாம் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை விளக்கம் அளித்துள்ளது.
தஞ்சாவூர்: கழனியை நிரப்பும் காவிரி டெல்டாவில் சம்பா சாகுபடியில் கூடுதல் மகசூலை பெற என்ன செய்யலாம் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை விளக்கம் அளித்துள்ளது.
காவிரி பாசன பகுதியில், சம்பா பருவத்தில் ஒரு போகமாக நெல் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சம்பா பருவத்தில் சரியான வழிமுறைகளை பின்பற்றினால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இன்றி, எதிர்பார்க்கும் மகசூல் எளிதில் கிடைக்கும். இதற்கு விவசாயிகள் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நீண்ட கால சம்பா இரகங்களான ஆடுதுறை-51, சி.ஆர்.1009 என்கிற சாவித்திரி, சி.ஆர்.சப்-1 போன்ற இரகங்கள் நேரடி விதைப்பிற்கும், நாற்று விட்டு நடவு செய்வதற்கும் ஏற்ற இரகங்கள். இதை ஆகஸ்ட் மாதத்திற்குள் விதைப்பு செய்வதன் மூலம் நெல் சாகுபடிக்கு ஏற்ற பருவங்கள் ஒத்து போவதால் ஜனவரி மாதத்திற்குள் அறுவடைக்கு வந்து விடும். இதன் மூலம் நஞ்சை தரிசில் நெல்லுக்கு பின் பயறு வகைகள் விதைப்பதற்கு ஏதுவாக அமைவதுடன், மிக உயர்ந்த மகசூல் கிடைக்க வழி பிறக்கும்.
ஒரு ஏக்கர் நடவு செய்ய 8 செண்ட் நாற்றங்கால் (320 சதுர மீட்டர்) தேவை. இதற்கு 24 கிலோ விதை போதுமானது. ஒரு கிலோ விதையை ஒரு குழி பரப்பளவில் இட வேண்டும். ஒரு ஏக்கர் நடவு செய்ய தேவையான விதையுடன் கார்பண்டசிம் அல்லது டிரைசைக்ளோசோல் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் வீதம் கரைசல் தயாரித்து, விதையை 10 மணி நேரம் ஊற வைத்து பின்பு வடிகட்ட வேண்டும். இதன் மூலம் 40 நாட்கள் பயிரினை நோயிலிருந்து தடுக்க முடியும். ஊற வைத்த விதைகளை உடனடியாக சணல் சாக்கில் பிடித்து 24 மணி நேரம் மூட்டம் போட வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் எதிர் உயிர் பாக்டீரியாவையும் மேற்கூறிய முறையில் கலந்து விதைப்பு செய்யலாம்.
ஒரு ஏக்கருக்கு தேவையான 24 கிலோ விதையுடன் 50 மிலி வீதம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா அசோபாஸ், பொட்டாஷ் பாக்டீரியா கலந்து 30 நிமிடம் உலர்த்தி விதைப்பு செய்ய வேண்டும். இக்கலவையுடன் சூடோமோனாஸ் பாக்டீரியாவை கலந்தும் விதை நேர்த்தி செய்யலாம்.
குறைவான தண்ணீர் நிறுத்தி நாற்றங்காலில் முளைவிட்ட விதைகளை விதைப்பு செய்ய வேண்டும். 24 மணி நேரம் கழித்து தண்ணீரை வடிக்க வேண்டும். 5 நாட்கள் வரை நாற்றங்கால் காய்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் நாற்றின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு 1.5 செ.மீ முதல் 2.5 செ.மீ வரை நீரை கட்டலாம்.
8 செண்ட் நாற்றங்காலுக்கு 400 கிலோ தொழு உரம் இட வேண்டும். நாற்றுகளை 25 நாட்களுக்குள் பறிக்கக்கூடிய இடங்களில் 16 கிலோ டி.ஏ.பி.உரத்தை அடியுரமாக இட வேண்டும். குறிப்பிட்ட நாட்களில் பறிக்க முடியாது என தெரிய வரும் இடங்களில் நாற்று பறிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பாக டி.ஏ.பி இட வேண்டும். நாற்று பறிப்பதற்கு கடினமான இடங்களில் ஒரு செண்ட் நாற்றங்காலுக்கு 4 கிலோ ஜிப்சம் இட வேண்டும். ஒரு செண்ட் நாற்றங்காலுக்கு 100 கிராம் வீதம் சிங்க்சல்பேட் மணலுடன் கலந்து இடுவது, நாற்று வீரியமுடன், வாளிப்பாக வளர உதவும்.
அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, அசோபாஸ், பொட்டாஷ் பாக்டீரியா தலா 100 மிலி வீதம் கலந்து நாற்றின் வேர்களை நனைத்து நடுவதால், நடவு வயலில் நாற்றுகள் உடனடியாக ஏற்றுக்கொண்டு பசுமையாக வளர உதவும். மண் மாதிரி ஆய்வு செய்து உரமிடுவது உரச்செலவை குறைக்கும். மண் ஆய்வு செய்யப்படாத இடங்களில் பொது பரிந்துரையாக ஏக்கருக்கு தழை சத்து 60 கிலோ, மணி சத்து 20 கிலோ, சாம்பல் சத்து 20 கிலோ வீதம் இட வேண்டும். இதில் தழைச்சத்தினை 5 பாகங்களாக பிரித்து அடியுரமாக ஒரு பங்கு, மேலுரமாக 4 முறை இட வேண்டும். மணிச்சத்து முழுவதையும் அடியுரமாக இட வேண்டும். சாம்பல் சத்தினை பிரித்து ஒரு பங்கு அடியுரமாகவும், ஒரு பங்கினை இரண்டாவது மேலுரத்துடன் யூரியாவுடன் கலந்து இட வேண்டும். அறுவடைக்கு 3 நாட்களுக்கு முன்பாக நெல் தரிசில் உளுந்து மற்றும் பச்சைபயறு விதைப்பு மேற்கொண்டு மண் வளத்தை கூட்டுவதுடன், கூடுதல் வருமானம் பெறலாம்.