இயற்கை உரத்திற்காக தஞ்சை மாவட்ட வயல்களில் வெள்ளாட்டுக்கிடை
அங்கக சத்துகள் அதிகம் இருந்தால் தான், மண்ணில் புழுக்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் சித்திரக்குடி, ஆலக்குடி பகுதிகளில் வயல்களில் வெள்ளாட்டுக்கிடை போடப்பட்டுள்ளது. இதற்காக வெளி மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான வெள்ளாடுகள் கொண்டு வரப்பட்டு வயல்களில் மேய்ச்சலுக்கு விடப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் அந்தந்த வயல்களில் பட்டி போட்டு ஆடுகள் அடைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, சித்திரக்குடி பகுதிகளில் குறுவை சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மேட்டூரில் போதிய தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதிகளில் விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடியை மேற்கொள்ளவில்லை. 8.கரம்பை பகுதியில் ஒரு சில விவசாயிகள் மட்டும் ஒரு போக சம்பா சாகுபடி மேற்கொண்டுள்ளனர். தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் பயிர்கள் காய்ந்து விடாமல் தப்பியது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி செய்த பிறகு ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை மூன்று மாதங்களுக்கு வயலில் எந்த சாகுபடியும் செய்யாமல் அப்படியே விட்டு விடுவர். இந்த காலக்கட்டத்தில் இதுபோன்ற வயல்களில் புற்கள் முளைத்து வளரும். அப்போது வயல்களில் ஆட்டு மந்தைகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
இதற்கு ஆட்டு கிடை போடுவது என்று பெயர். மண் வளத்தை உயர்த்தும் என்பதால் ஆட்டு கிடை போடுவதற்கு விவசாயிகள் மத்தியில் அதிக ஆதரவும் உள்ளது. ஆட்டுக்கிடை போடுபவர்கள் இரவு நேரத்தில் வயல்களில் பட்டி போடுகிறார்கள். ஆடுகள் வெளியே செல்லாத வகையில் வட்டமாக வலை விரித்து, அதனுள்ளே ஆடுகளை அடைத்து விடுகின்றனர்.
இப்படிப் பட்டியில் அடைப்பதில்தான் மிக முக்கியமான விஷயம் அடங்கி உள்ளது. ஆடுகளின் சிறுநீரும் புழுக்கைகளும் வயலுக்கு இயற்கை உரமாக கிடைக்கும். இப்படிக் கிடை போடுவதற்காகக் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வரும் ஆடு கிடை போடுபவர்கள் சாகுபடிப் பணிகள் தொடங்கும் வரை இங்கேயே தங்கிவிடுகிறார்கள். அந்த வகையில் தற்போது தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, சித்திரக்குடி பகுதிகளில் ஆட்டுக்கிடை போடப்பட்டுள்ளது. இதற்காக வெளி மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வெள்ளாடுகளை பட்டி அமைத்து வயல்களில் மேய்ச்சல் காட்டி வருகின்றனர்.
பல விவசாயிகள் இப்படி ஆட்டு கிடை போடுபவர்களுக்கு தங்கள் வீட்டிலேயே உணவு அளிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆடுகளைக் கிடை போடுவதால் வயலுக்குத் தேவையான இயற்கை உரம் கிடைத்து விடுகிறது. அடுத்த சாகுபடியின்போது, அதற்கான பலன் அதிகளவில் கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அங்கக சத்துகள் அதிகம் இருந்தால் தான், மண்ணில் புழுக்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும். வளிமண்டல நைட்ரஜனை, மண்ணில் நிலைநிறுத்தி வைக்கும் அசோஸ்பைரில்லம், ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாக்களின் பெருக்கமும் அதிகரிக்கும். இதற்கு மட்கிய மாட்டுச் சாணம், ஆட்டுப் புழுக்கை, கோழி எருவை இட்டும் இலை உரங்களான சணப்பு, தக்கைப் பூண்டு மற்றும் கொழுஞ்சியை விளைநிலத்தில் விதைத்து மண் வளத்தை அதிகரிக்க வழிவகை செய்யலாம்.
நெல் வயல்களுக்கு தண்ணீர் வசதி இருக்கும் என்பதால் தக்கைப்பூண்டு மற்றும் சணப்பு விதைத்து, அவை பூப்பதற்கு முன்பாக மடக்கி உழுது விட வேண்டும். மானாவாரி மற்றும் குறைந்த தண்ணீர் வசதியுள்ள நிலங்களில், மாட்டுச் சாணத்தை ஏக்கருக்கு 5 டன் என்ற அளவில் பரப்ப வேண்டும். இதை விடவும் மிக எளிய தீர்வு ஒன்று உள்ளது; அதுதான் கிடைபோடுதல். ஆட்டுக்கிடை மற்றும் மாட்டுக்கிடை போடுவதன் மூலம் மண்ணின் வளத்தை பன்மடங்கு பெருக்கலாம்.