நெல்லிக்காய் சாகுபடியில் அசத்தல் வருமானம் பார்க்கும் தஞ்சை மாவட்ட விவசாயி
நான் சாகுபடி செய்துள்ள இந்த ரகங்கள் இந்த ஊர் மண்ணுக்கு ஏற்றதாக இருந்ததால் இதை பயிரிட்டேன்.
தஞ்சாவூர்: மண்ணை வணங்கி உளப்பூர்வமாக உழைத்தால் பொன்னாக கொடுக்கும். நெல், கரும்பு, வாழை, மா, முந்திரி என்று வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் சாகுபடிகளுக்கு இணையாக நெல்லிக்காய் சாகுபடியிலும் அசத்துக்கிறார் தஞ்சை மாவட்ட விவசாயி.
சரியான முறையில் சாகுபடிகளை மேற்கொண்டால் அனைத்தும் லாபம்தான் என்று பாசிட்டிவ் எனர்ஜி ஏற்றிக் கொண்டு பச்சை பசேல் என்று மின்னும் நெல்லிக்காய்களை சேகரித்து கொண்டே நம்மிடம் பேச ஆரம்பித்தார் சக்ஸஸ் புல்லாக நெல்லிக்காய் சாகுபடியில் வருமானத்தை அள்ளும் தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி உத்திராபதி (62).
மண் மீது நம்பிக்கை வைத்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இவரது அப்பா முந்திரி தோப்பு வைத்திருந்தார். அதற்கு பிறகு முந்திரிக்காடுகளை அழித்து நெல், கடலை, உளுந்து, காய்கறி என பல சாகுபடிகளை செய்து வந்துள்ளார். இப்போ ஒருங்கிணைந்த விவசாயமாக 14 ஏக்கரில் முழுக்க முழுக்க நெல்லிக்காய் சாகுபடி செய்து வருமானத்தை அள்ளுகிறார். அதுமட்டுமா. தென்னை, மிளகு, கொய்யா, எலுமிச்சை, பச்சைமிளகாய், தேன் பெட்டி வைத்து தேனீக்கள் வளர்ப்பு, யானை வெண்டைக்காய், கத்திரிக்காய், சோளம், நார்த்தை என்று ஒருங்கிணைந்த பண்ணையமாக செய்து வருகிறார்.
விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு. எதை செய்தாலும் அந்த தொழிலில் முழு திருப்தி ஏற்பட வேண்டும். உண்மையான உழைப்பை கொடுத்தால் மண் நம்மை உயர்த்து. எங்க அப்பா நெல் சாகுபடி செய்து வந்தார். அதுக்கு பிறகு முந்திரி சாகுபடி... அதுக்கு அப்புறம்தான் நான் முழுக்க முந்திரி தோப்புகளை அழித்து விட்டு கடலை, பயறு என்று சாகுபடி செய்து வந்தேன். எதிலும் திருப்தி இல்லைங்க. இன்னும்... இன்னும் வேற ஏதாச்சும் செய்யணும்னு மனசுக்குள்ள ஒரே எண்ணம். பல இடங்களுக்கு சென்று மற்ற விவசாயிகள் செய்யற சாகுபடி பற்றி தெரிந்து கொண்டே இருந்தபோதுதான் பளிச்சுன்னு ஒரு ஸ்பார்க் அடித்தது. நெல்லிக்காய் சாகுபடி செய்யலாமே. மக்களுக்கும் நாம ஏதாச்சும் ஒரு விதத்திலுல நல்லது செய்தது போல் இருக்குமேன்னு நினைச்சேன். நெல்லி சாகுபடி எப்படி செய்யறது. என்ன வகை வளர்க்கிறது. அதோட விற்பனைன்னு பல விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டு களத்துல இறங்கினேன்.
2002ம் ஆண்டில் தொடங்கினது இப்போ வரைக்கும் சக்ஸஸ்தான். சாகுபடி செய்ய போற நிலத்தை அதுக்கு தகுந்தார்போல் பண்படுத்தினேன். மொத்தம் 17 ஏக்கர் நிலத்தில் சுமார் 15 ஏக்கர் முழுவதும் நெல்லி கன்றுகள் வைத்தேன். காஞ்சன், சக்கையா, என்ஏ7, கிருஷ்ணா என்ற ரகங்கள் சாகுபடி செய்தேன். 15*5 அடிக்கு ஒரு ஏக்கரிலும், 12*12 இடைவெளியில் 7 ஏக்கரும், 25*25 அடி இடைவெளியில் 7 ஏக்கர் என கன்றுகளுக்கு இடையே இடைவெளிவிட்டு கன்றுகளை நட்டு பராமரித்தேன்.
நான் சாகுபடி செய்துள்ள இந்த ரகங்கள் இந்த ஊர் மண்ணுக்கு ஏற்றதாக இருந்ததால் இதை பயிரிட்டேன். இந்த மரங்களுக்கு தேவையான உரங்களை அதுவும் இயற்கையான முறையில் நானே தயார் செய்தேன். இரண்டு மாடுகள் உள்ளது. மாடுகளின் சாணம், கோமியம் மூலம் பஞ்சக்காவியா, புண்ணாக்கு கரைசல் போன்றவற்றின் மூலம் இயற்கையான முறையில் மரங்களுக்கு உரங்களை தயாரித்து பயன்படுத்துகிறேன்.
நெல் சாகுபடியில் அதிக அளவில் நீர் தேவைப்படும் ஆனால் இது போன்ற வறட்சியும் தாங்கி வளரக்கூடிய மரசாகுபடியில் பெரிதளவில் நீர் தேவைப்படாது இந்த ஒரு சாகுபடியை செய்வதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இந்த நெல்லி கன்று பயிரிடப்பட்ட மூன்று ஆண்டுகள் கழித்து காய்க்க ஆரம்பிக்கும் ஐந்தாவது ஆண்டில் நன்கு காய்க்கும். எட்டாவது ஆண்டில் அதிக அளவில் காய்க்கும். தற்போது ஒரு ஏக்கரில் எட்டில் இருந்து 10 டன் வரை காய்கிறது, வருடத்தில் 12 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
இந்த நெல்லிக்காய்களை ஒட்டன்சத்திரம், கேரளா போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்து விடுகிறேன். எங்களைப் போன்ற நெல்லி விவசாயிகள் போக்குவரத்து செலவு தான் அதிகமாகின்றது.. இது மிகவும் சிரமமாகவும் இருக்கிறது. தஞ்சையில் உள்ள உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலையின் மூலம் பெரிய அளவில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பயிற்சிகளை கொடுத்து கிராம பகுதிகளிலேயே தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். இதன் மூலம் பல உணவுப் பொருட்களை தயாரிக்க முடியும். இதனால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதற்கு அரசு உதவ வேண்டும். டிரான்ஸ்போர்ட் செலவு குறைந்தால் இன்னும் லாபம் அதிகம் கிடைக்கும்.
டிசம்பர், ஜனவரி ரெகுலர் சீசன். மார்ச், ஏப்ரல் பராமரிப்பு, கார் சீசன் என்றால் ஜூன், ஜூலை. அக்டோபர் அறுவடை. அதிகளவில் காய்கள் கிடைக்கிறது. அருமையான இந்த நெல்லிக்காய் சாகுபடி நல்ல வருமானத்தை கொடுக்கிறது. இதை இன்னும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றினால் இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். அதற்கு அரசு உதவி செய்ய வேண்டும். இதுமட்டுமின்றி நெல்லிக்காய் மரங்களை தவிர்த்து மற்ற பகுதிகளில் தேன் பெட்டி வைத்துள்ளேன். இதனால் தேனீக்கள் மகரந்த சேர்க்கையால் அதிகளவு நெல்லிக்காய்கள் கிடைக்கிறது. தேன் கூடுதல் வருமானம், நாவல் மரம், செஞ்சந்தனம், பலா மரம், தேக்கு என்றும் பயிரிட்டுள்ளேன். முக்கியமாக கத்திரிக்காய், யானை வெண்டைக்காய் என்றும் பயிரிட்டுள்ளேன்.
காய்கறிகள் என் வீட்டுத்தேவைக்கு போக கூடுதலாக கிடைக்கும். மண்ணை நம்பி உண்மையான உழைப்பை கொடுத்தால் அனைத்தும் லாபம்தான். சொட்டு நீர் பாசனம் வைத்துள்ளதால் எனக்கு தண்ணீர் செலவும் மிகவும் குறைவு. நிச்சயம் வருட வருமானம் நெல்லிக்காயில் இருந்து மட்டுமே சராசரியாக ரூ.12 லட்சம் கிடைக்கிறது. அப்போ மாதம் ரூ.1 லட்சம். மற்ற சாகுபடியில் இருந்து கிடைப்பது கூடுதல் வருமானம்தான். இவ்வாறு அவர் கூறினார்.