கை கொடுக்காத வாழை, கண் திறந்த கோடை மழை; அடுத்த பயிருக்கு தயாராகும் விவசாயி
தருமபுரி மாவட்டத்தில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருவதால், அடுத்த பயிர் செய்வதற்காக தண்ணீர் இன்றி காய்ந்த வாழை மரங்களை அழித்து உழவு பணி மேற்கொள்ளும் விவசாயிகள்.
தருமபுரி மாவட்டம் வானம் பார்த்த பூமி ஆக மழையை நம்பியே விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக பருவமழை அளவுக்கு அதிகமாக பெய்து வந்ததால், விவசாயம் செழித்து வந்தது. இந்நிலையில் வழக்கமாக விவசாயிகள் கரும்பு, நெல், வாழை, மஞ்சள், மரவள்ளி உள்ளிட்ட காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்றவற்றை சாகுபடி செய்தனர். மேலும் பருவமழை வழக்கம்போல் கை கொடுக்கும் என நினைத்து, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர்.
இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால், கடந்த நான்கு மாத காலமாக கடுமையான வறட்சி ஏற்பட்டது. மேலும் வரலாறு காணாத அளவில் வெப்பம் 100° பாரஹுட்டுக்கு மேல் வீசியதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாய நிலங்கள் தண்ணீரின்றி காய்ந்து கருகத் தொடங்கியது. இதனால் அறுவடைக்கு தயாராக வருகின்ற நேரத்தில் பயிர்கள் காயத் தொடங்கியதால் பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் டேங்கர்கள் மூலமாக தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வந்து ஊற்றி வந்தனர். ஆனால் போதிய தண்ணீர் இல்லாமல் மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்ட பல்வேறு வகையான பயிர்கள் காய்ந்து கருகியது.
இதனால் தருமபுரி மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டிருந்த 2000 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டிருந்து வாழை மரங்கள், அறுவடைக்கு தயாரான நிலையில், தண்ணீர் இன்றி காய்ந்து குழையுடன் பாதியில் உடைந்து விழுந்து சேதமானது. இதனால் விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கோடை மழை பொழிய தொடங்கியுள்ளது. தினந்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் காய்ந்த வாழை மரங்களை அழித்து, வேறு பயிர் செய்வதற்கான பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி, எருமியம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழையின்றி காய்ந்து கருகிய வாழை மரங்களை அழித்துவிட்டு, அடுத்த பயிர் செய்வதற்கு, விவசாயிகள் டிராக்டர் வைத்து உழவு பணி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மழை இல்லாமல், வாழை மரங்கள் காய்ந்து கருகியதால் ஏக்கருக்கு 4 லட்சம் வரை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது கோடை மழை கை கொடுத்தால், வாழையில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய முடியும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் அடுத்த பயிரை சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர்.