அறுவடை செய்தது அங்கே... காயவைத்தது இங்கே: விவசாயிகள் படும்பாடு
கோடை சாகுபடியாக மேற்கொண்ட உளுந்து செடிகளை வயலில் இருந்து அறுவடை செய்து தஞ்சை அருகே வண்ணாரப்பேட்டை புதுஆற்று பாலம் பைபாஸ் சாலையில் காயவைக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர்: அறுவடை ஒரு பக்கம்... காய வைக்கும் பணி மறுபக்கம் என கோடை சாகுபடியாக மேற்கொண்ட உளுந்து செடிகளை வயலில் இருந்து அறுவடை செய்து தஞ்சை அருகே வண்ணாரப்பேட்டை புதுஆற்று பாலம் பைபாஸ் சாலையில் காயவைக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
உளுந்து சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். கோடையிலும் நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. மேலும் உளுந்து, கடலை, மக்காச்சோளம், கரும்பு, எள், பயறு போன்றவையும் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.
நல்ல விலைக்கு செல்வதால் மகிழ்ச்சி
கோடையில் தஞ்சை மாவட்டத்தில் வண்ணாரப்பேட்டை, ஆலக்குடி, ராமநாதபுரம் உட்பட பல பகுதிகளில் உளுந்து சாகுபடியையும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். பயறு வகைப் பயிர்களில் உளுந்து அதிக புரதம் மற்றும் பயன்பாடு, கலோரிச் சத்து உள்ள பயிராகும் . குறுகிய காலப் பயிராதலால், இதனை தனிப் பயிராகவும் ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம். தரமான உளுந்து, நல்ல விலைக்கு விற்பனையாகிறது.
உளுந்து பயிர்கள் விதைத்த 55-60 நாளில் அறுவடைக்குத் தயாராகும். காய்கள் பழுப்பு நிறடைந்தால், காய்களை அறுவடை செய்யலாம். 70 சத காய்கள் கருமை நிறடைந்தால் செடிகளை முழுவதும் பிடுங்கலாம். குறுகிய காலப்பயிராக இருப்பதால் இதை சாகுபடி செய்ய விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் உளுந்துக்கான தேவை அதிகம் இருப்பதாலும் நல்ல லாபம் விவசாயிகளுக்கு கிடைத்து வருகிறது.
குறுகிய காலப்பயிராக உள்ள உளுந்து
கடந்தாண்டு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும் போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால் குறுவை, சம்பா சாகுபடியை பல விவசாயிகள் மேற்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக குறுகிய காலப்பயிரான உளுந்து சாகுபடியை விவசாயிகள் கோடை பயிராக சாகுபடி செய்தனர்.
அந்த வகையில் வண்ணாரப்பேட்டை பகுதியில் அதிகளவில் உளுந்து மற்றும் எள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து தற்போது உளுந்து செடிகள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்ததால் உளுந்து செடிகள் நனைந்து இருந்தன. இதை விவசாயிகள் தஞ்சை வண்ணாரப்பேட்டை புதுஆற்றுப்பாலம் பைபாஸ் சாலையில் காய வைக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். தற்போது உளுந்துக்கு நல்ல விலை கிடைத்தும் வருவதாக விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.
அறுவடை ஒரு இடத்தில், காய வைப்பது மறு இடத்தில்
வயல்களில் அறுவடை செய்யப்பட்டாலும் அங்கு காய வைக்க இடம் இல்லாத நிலையில் இப்படி சாலையில் காயவைக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மாட்டு வண்டிகளிலோ, லோடு ஆட்டோவிலோ ஏற்றி வந்து பைபாஸ் சாலையின் ஓரத்தில் காயவைத்து அடித்து உளுந்தை சேகரிக்கின்றனர் விவசாயிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.