Ruturaj Gaikwad CSK: ருத்ர தாண்டவம் ஆடிய ருதுராஜின் கதை!
Ruturaj Gaikwad CSK: 2021 ஐபிஎல் தொடரில் இரண்டாவது பாதி இன்று முதல் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் சென்னை-மும்பை அணி மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த சென்னை அணி முதலில் தொடர்ச்சியாக விக்கெட் இழந்து தடுமாறியது. இதைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் 156 ரன்கள் அடித்தது. இந்நிலையில் இந்த ருதுராஜ் கெய்க்வாட் கடந்து வந்த பாதை என்ன? மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் சிறுவயது முதல் தனது அசாத்திய ஆட்டத்தால் பலரின் கவனத்தை ஈர்த்து வந்தார். குறிப்பாக 2016-17ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 3ஆவது இடம்பிடித்து அசத்தினார். அப்போது முதல் இவர் மீது அதிக வெளிச்சம் பட்டது. இந்த ஸ்டைலிஷ் மற்றும் திறமையான வீரர் யார் என்று உள்ளூர் கிரிக்கெட்டில் பிரபலமானார். பின்னர் இந்தியா ஏ அணிகளுக்கும் தேர்வாகி அசத்தினார். இவருக்கு 2018-19ஆம் ஆண்டு நடைபெற்ற சையத் முஸ்டாக் அலி தொடரில் சிறப்பானதாக அமைந்தது. ஏனென்றால் இந்தத் தொடருக்கு பிறகு 2019ஆம் ஆண்டு சென்னை அணி ருதுராஜ் கெய்க்வாட்டை ஏலத்தில் எடுத்தது. எனினும் 2019ஆம் ஆண்டு தொடர் முழுவதும் சென்னை அணியில் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அப்போது இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சில நாட்கள் பயிற்சி செய்ய முடியாமல் தனிமை படுத்தப்பட்டிருந்தார். உடல்நிலை சரியான பிறகு விளையாடிய முதல் 3 போட்டிகளில் சரியான ஸ்கோரை அவரால் எட்டமுடியவில்லை. நான்காவது முறையாகக் கிடைத்த வாய்ப்பை ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாகப் பயன்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார்.
அடுத்தப் போட்டியிலும் சென்னை அணி வெற்றிப் பெற முக்கிய காரணமாக அமைந்தார். கடந்த ஐபிஎல் தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். அத்துடன் அந்த தொடரில் 6 போட்டிகளில் 204 ரன்கள் அடித்தார். இதனால் நடப்பு தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் டுபிளசிஸ் உடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வருகிறார். இந்தத் தொடரில் தற்போது வரை 4 அரைசதங்கள் அடித்து அசத்தியுள்ளார். மேலும் நடப்பு தொடரில் 8 போட்டிகளில் 284 ரன்கள் அடித்துள்ளார். யுஏஇயில் தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட் அசத்தி வருகிறார். எனவே இதேபோன்று அடுத்து வரும் போட்டிகளிலும் இவர் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.