உலகக்கோப்பையை தூக்கிய இந்தியா அசத்திய ஸ்மிருதி - தீப்தி இத்தனை சாதனைகளா..! | India Women's Wining World Cup
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய அணி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையை வென்று உலகக்கோப்பையில் இந்திய அணி படைத்த புதிய சாதனைகள் படைத்து அசத்தியுள்ளது.
இந்த உலகக்கோப்பை மூலம் ஒரு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிரிதி மந்தனா படைத்துள்ளார். இதற்கு முன்பு 2017ம் ஆண்டு மிதாலி ராஜ் 409 ரன்களுடன் இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார். இந்த தொடரில் 434 ரன்களை ஸ்மதிரிதி மந்தனா குவித்தார்.
ஆடவர் மற்றும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் இரண்டையும் சேர்த்து ஒருநாள் உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் ஒரு அணி 300 ரன்களுக்கு மேல் சேஸ் செய்தது இந்தியா மட்டுமே ஆகும். ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி அரையிறுதியில் 339 ரன்களை சேஸ் செய்ததே அந்த சாதனை.
ஒருநாள் உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 15 வெற்றிகளை பெற்று வந்த ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு இந்திய மகளிர் அணி முட்டுக்கட்டை போட்டது.
மகளிர் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஜெமிமா - ஹர்மன்ப்ரீத் கவுர் எடுத்த 167 ரன்கள்தான் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக உலகக்கோப்பையில் எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோர் ஆகும். உலகக்கோப்பை நாக் அவுட் போட்டிகளில் எடுக்கப்பட்ட 3வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 ரன்களை குவித்த இரண்டாவது வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா. அதேசமயம் 21 இன்னிங்சிலே இந்த சாதனையை படைத்துள்ளனர்.
ஒருநாள் மகளிர் உலகக்கோப்பையில் ஸ்மிரிதி மந்தனா - ப்ரதிகா ராவல் எடுத்த 212 ரன்கள் பார்ட்னர்ஷிப்பே ஒரு விக்கெட்டிற்கு இந்தியா மகளிர் உலகக்கோப்பையில் எடுத்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோர் ஆகும். இதற்கு முன்பு 2022ம் ஆணடு ஸ்மிரிதி - ஹர்மன்ப்ரீத் ஹாமில்டனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 184 ரன்கள் குவித்ததே அதிகபட்சம் ஆகும்.
ஒருநாள் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை குவித்த இரண்டாவது இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா ஆவார். அதேசமயம், இந்த சாதனையை படைத்த இளம் வீராங்கனையும் இவர் ஆவார்.
ஒரே ஆண்டில் 1000 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் விளாசிய முதல் வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிரிதி மந்தனா படைத்துள்ளார்.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் 8 அல்லது அதற்கும் கீழே இறங்கி ஒருபோட்டியில் அதிக ரன் எடுத்த வீராங்கனை என்ற சாதனையை ரிச்சா கோஷ் படைத்துள்ளார். அவர் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 94 ரன்கள் எடுத்தார். மேலும், மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக ரன்கள் விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் ரிச்சா கோஷ் படைத்துள்ளார்.
ஒரு உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை தீப்தி ஷர்மா படைத்துள்ளார். இதற்கு முன்பு சுபாங்கி குல்கர்னி, நீது டேவிட் தலா 20 விக்கெட்டுகளுடன் இந்த சாதனையை தங்கள் வசம் வைத்திருந்தனர். தீப்தி ஷர்மா 22 விக்கெட்டுகளுடன் இந்த சாதனையை படைத்துள்ளார்.
உலகக்கோப்பையில் 200 ரன்களுக்கு மேல் மற்றும் 20 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த முதல் வீராங்கனை என்ற சாதனையை தீப்தி ஷர்மா படைத்துள்ளார்.
ஆடவர் மற்றும் மகளிர் உலகக்கோப்பை இரண்டையும் சேர்த்து உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் அரைசதம் மற்றும் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே நபர் என்ற சாதனையை தீப்தி ஷர்மா படைத்துள்ளார். அவர் நேற்றைய இறுதிப்போட்டியில் 58 ரன்களும், 5 விக்கெட்டுகளும் எடுத்தார்.





















