Manjolai Estate | சரிந்தது 95 ஆண்டுகால சாம்ராஜ்யம் உருக்கும் இறுதி நிமிடங்கள்! கண்ணீரில் மாஞ்சோலை
தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்து வந்த மண்ணை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மாஞ்சோலை மக்களின் கண்ணீர் குரல். கண்ணீர் மல்க விடை பெற்ற மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை விட்டு தொழிலாளர்கள் செல்வது காண்போரை கலங்கச் செய்துள்ளது.
ஐந்து தலைமுறைகளாக 95 ஆண்டுகள் மாஞ்சோலை மலை கிராமத்தில் வசித்து வரும் 561 குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேற ஆயத்தமாகி வருகின்றனர் . பாம்பே பர்மா டிரேடிங் நிறுவனத்தின் விருப்ப ஓய்விற்கு அனைவரும் கையெழுத்திட்ட நிலையில் அவர்களுக்கு கிராஜுவெட்டி தொகையின் 25% காசோலையாக வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் அடுத்த 45 நாட்களுக்குள் வீடுகளை காலி செய்து செல்லும்போது மீதமுள்ள 75 சதவீதம் வழங்கப்படும் என தேயிலை தோட்ட நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனிடையே அந்நிறுவனம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பதை நேற்றோடு நிறுத்தியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மாஞ்சோலையில் ஒன்று கூடி தங்களது பல ஆண்டு கால பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்ததோடு பசுமை நிறைந்த நினைவுகளே பாடலை தழுதழுத்த குரலில் பாடி பிரியா விடை கொடுப்பதற்கான ஆயத்த பணிகளை மேற் கொண்டனர்.
மூன்றாண்டுகள் கல்லூரியில் ஒன்றாக படித்து விட்டு பிரிந்து செல்லும் நண்பர்களுக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தும் என்ற நிலையில் பல ஆண்டுகளாக ஒரே பகுதியில் வாழ்ந்து விட்டு அங்கிருந்து மறு குடி அமர்விற்கு வேறு பகுதிக்கு செல்லும் மக்களின் நிலையை நினைத்துப் பார்க்கவே கண்ணில் நீர் கோர்க்கிறது. பசுமை நிறைந்த நினைவுகளே ...... பாடலை பாடி பிரிந்து செல்ல ஆயத்தமாகும் மாஞ்சோலை மக்கள்