Vijay to meet Parandur protesters : விஜய் வைத்த REQUEST! OK சொன்ன காவல்துறை! பரந்தூர் விசிட் ப்ளான்
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதால் விஜய் களத்திற்கு செல்வதற்கான வேலைகள் வேகமெடுத்துள்ளன.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது என ஏகனாபுரம், நாகப்பட்டு, தண்டலம் ஆகிய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அதிகம் பாதிக்கப்படும் ஏகனாபுரம் கிராம மக்கள், 900 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பரந்தூர் விவகாரத்தில் தனது நிலைப்பாடு என்ன என்பதை மாநாட்டிலேயே தெளிவுபடுத்தினார் விஜய். விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த கட்டமாக பரந்தூர் மக்களை நேரில் சந்திப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார் விஜய். ஏற்கனவே விஜய் மக்களை சந்திப்பதற்காக மாவட்ட எஸ்.பியிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. இந்தநிலையில் விஜய் வரும் 20ம் தேதி பரந்தூர் மக்களை சந்திப்பதற்கு காவல்துறை அனுமதி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்களை விஜய் சந்திக்கவிருக்கிறார். இன்று மாலை போராட்ட குழு நிர்வாகிகள் மற்றும் கட்சியினரிடம் காவல்துறையினர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் மக்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக தவெக நிர்வாகிகள் பரந்தூருக்கு படையெடுத்து வருகின்றனர். இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் பார்வையிட்டார். விஜய் அரசியல் எண்ட்ரி கொடுத்த பிறகு போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்திப்பது இதுவே முதல்முறை. இந்த சந்திப்பின் போது விஜய் பேசப் போகும் விஷயங்கள் இனி வரும் காலங்களில் தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.





















