TN politicians death : அடுத்தடுத்த கொலைகள்! திக்..திக்..தமிழகம்
சட்டம், ஒழுங்கு சரியில்லை என தமிழக அரசை எதிர்க்கட்சிகள் சுற்றி வளைக்கும் நேரத்தில், தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களாக கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து கொலை செய்யப்படும் சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
மே 2ம் தேதி திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே ஜெயக்குமார் திடீரென காணாமல் போனதாக பரபரப்பை கிளப்பினார் அவரது மகன். போலீசார் வலைவீசி தேடிய நிலையில் அவரது சொந்த தோட்டத்திலேயே கை, கால்கள் கட்டப்பட்டு உடல்கருகிய நிலையில் சடலமாக கிடைத்தார். கொலை நடந்ததற்கான பகீர் தடயங்கள் கிடைத்த பிறகு விசாரணையும் தீவிரமானது. ஆனால் அதில் இருக்கும் மர்மங்கள் இதுவரை விலகாமல் விசாரணை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் உள்ள நிலையில், அவரது மரணம் தொடர்பான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்காமல் இருப்பதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
ஜூலை 3ம் தேதி அதிமுக பிரமுகரும், மாநகராட்சி மண்டலக் குழு முன்னாள் தலைவருமான சண்முகம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வெட்டி கொலை செய்யப்பட்டார். போலீசார் விசாரணையில் திமுக கவுன்சிலரான தனலட்சுமி என்பவரின் கணவருக்கு தொடர்பு இருப்பதாகவும், முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததும் வெளிச்சத்து வந்தது. இந்த வழக்கில் சதிஷ் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போதைப்பொருள் விற்பனை தொடர்பாக சண்முகம் புகார் அளித்ததால் தான் சதிஷ் அவரை கொலை செய்து விட்டதாக பரபரப்பை கிளப்பினார் அதிமுக பொதுசெயலாளர் இபிஎஸ்.
அடுத்ததாக ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே வைத்தே கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் கொலை தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலுக் எதிரொலித்தது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என குற்றச்சாட்டை வைத்தார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. இந்த வழக்கில் கைது நடவடிக்கை நடந்து வரும் நிலையில், கைதான திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டதும் விமர்சனத்திலும் சிக்கியுள்ளது.
இந்தநிலையில் இன்று மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் வீடு அமைந்திருக்கும் பகுதியிலேயே வைத்து நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதியின் துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
மே மாதம் தொடங்கி 2 மாதங்களாகவே கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவது தொடர்பாக அதிமுக பொதுசெயலாளர் இபிஎஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் விமர்சித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 31 நாட்களில் 133 படுகொலைகள் நடந்துள்ளதாக சீமான் குற்றம்ச்சாட்டை அடுக்கியுள்ளார்.
திமுகவை ரவுண்டி கட்டி வரும் நிலையில், அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து உள்துறை செயலாளராக இருந்த அமுதா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கை குறிவைத்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எறியும் நேரத்தில், திமுக தலைமையிலான அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளில் இறங்கப் போகிறது என்ற விவாதமும் நடந்து வருகிறது.